அமைதி மலரட்டும்! | Veritas Tamil

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அமைதியைத் தருவதே மதங்களின் முதன்மையான நோக்கம்.

முரணும் மோதலும் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட மனிதகுல நலனுக்காகப் பிறந்ததுதான் மதமே தவிர, மனிதர்கள் முரண்படவும் மோதிக் கொள்ளவும் அது ஒருபோதும் காரணியாவ தில்லை; ஆயினும், மனிதர்கள் ஏனோ மதத்தால் நம்பிக்கையால் வழிபாடுகளால் முரண்பட்டு மோதிக் கொள்கிறார்கள்!

உண்மை ஒன்றுதான், அதுதான் பல வடிவங்களில் பார்க்கப் படுகிறது; ஒளி ஒன்றுதான், வழிகள்தான் வெவ்வேறு என்பதை ஏனோ அவர்கள் அறியாமலிருக்கிறார்கள்!

அன்பு சார்ந்த பண்புகளை ஒவ்வொருவர் இதயத்திலும் விதைப்பதே மதங்களின் உன்னத நோக்கம். அன்பையே சிந் தித்து, அன்பையே மூச்சுக்காற்றாகச் சுவாசித்து, ஆண்டவனையும் அன்பின் வடிவாகவே தரிசித்து மனிதம் வளர்ப்பதுதான் மதம். ஆகவேதான், சுவாமி விவேகானந்தர், "உலகில் இப்போதிருக்கும் எல்லா மதங்களையும், இனி பிறக்கப் போகும் புதிய மதங்களை யும் இரு கை நீட்டி வரவேற்கிறேன்" என்றார்.

"எவரையும் வெறுப்பதல்ல மதத்தின் நோக்கம்; அன்பையும் அமைதியையும் அகிம்சையையும் வளர்ப்பதே மதம். மதம் மனிதர்களை இணைப்பதற்குத்தானே தவிர, பிரிப்பதற்கில்லை" என்கிறார் தேசத்தந்தை மகாத்மா காந்தி.

அவ்வகையில், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவர்கள் இணக்கமாகப் பகிர்ந்துகொள்ளும் கச்சத்தீவில் அமைந்திருக்கும் புனித அந்தோணியார் திருத்தலம் இரு நாட்டு மக்களின், அப்பகுதி மீனவர்களின் நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ளவும் பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்ளவும் அன்போடு உறவு கொள்ளவும் வழிவகுக்கிறது. இலங்கை யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்டத்தால் திருத்தலமாக அறிவிக்கப்பட்டி ருக்கும் கச்சத்தீவு - புனித அந்தோணியார் திருத்தலம் நூற் றாண்டு கடந்து நிற்கும் பழம்பெரும் பாரம்பரியத்தைக் கொண்டது.