மரம் வளர்ப்போம்! மண்ணைக் காப்போம்! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil
இறைவன் நமக்கு அளித்துள்ள அற்புதமான கொடை இயற்கை. இயற்கைத் தாயே! இந்த உலகிலேயே நன்மை மட்டுமே செய்து கொண்டிருக்கும் அற்புதத் தாய் நீ! ஆண்டவரின் மறுவுருவான உம்முன் கரம் கூப்புகிறோம். நீ விடும் மூச்சுக்காற்றுதான் எங்கள் சுவாசக் காற்று என்பதை பலநேரங்களில் மறந்து போகின்றோம், எங்களுக்கு வாழ்வு கொடுப்பதே நீ என்பதை மறந்து உம்மை காயப்படுத்துகின்றோம். எங்களை மன்னித்துவிடு. மரங்களை வெட்டி வீழ்த்தி, நெகிழிப்பைகளைப் பயன்படுத்தி இயற்கை வளத்தைக் குறைத்துவிட்டு இயற்கை நமக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொன்னால் நிச்சயம் தவறு நம்மேல்தான். இன்றைய காலக்கட்டத்தில் இலவசமாக கிடைக்கும் எதையும் நாம் அனுபவிக்காமல், நமது உடம்பிலிருந்து ஒரு சொட்டு வியர்வைத்துளிகள் வரக்கூடாது என்று நினைத்து பணத்தை செலவழித்து ஏசியை வாங்கி நம்மை குளிர்வித்துக் கொண்டு ஏகபோக வாழ்க்கை வாழ்கிறோம். ஆனால் நமது உடல் நலனை நாமே பாதிப்புக்குள்ளாக்குகிறோம் என்பதை உணர்கிறோமா? சிறிது தூரம் எங்கேயாவது செல்ல வேண்டும் என்று நினைத்தாலும்கூட, நடந்து செல்வதை தவிர்த்து மோட்டார் சைக்கிள் அல்லது புகை வண்டிகளை பயன்படுத்துகிறோம். அவை வெளியிடும் புகை நமக்கு ஆபத்தானது என்றாலும் அதை ஆனந்தமாக சுவாசிக்கிறோம். இவையெல்லாம் தவறு என்பதை உணரும் காலம் எப்போது? இப்போதே நம்மை மாற்றிக் கொள்ள தயாராகுவோம். இயற்கை தரும் இன்பத்தை அனுபவிக்க நம்மை பயிற்றுவிப்போம்.
உண்மையில் நம்மை நாம் அறிவாளிகளாக எண்ணிக் கொண்டு, கற்றறிந்த முட்டாள்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. நாம் வாழும் பூமியை, நாம் சுவாசிக்கும் காற்றை, நாம் பருகும் நீரை, நம் தலைக்குமேல் குடை பிடிக்கும் ஓசோனைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் வாழ்கிறோமே என்று என்றாவது எண்ணியதுண்டா? இயற்கைத்தாயே எங்களை மன்னித்துவிடு. இனி நாங்கள் மரம் நட்டு மழையைப் பெருக்குவோம். துணிப்பைகளைப் பயன்படுத்தி மண் வளத்தைப் பெருக்குவோம். சுகத்தோடு வாழ சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம். எங்களைச் சுற்றியுள்ள பகுதிகளின் தூய்மையைக் காப்போம்.
எழுத்து
அருட்சகோதரி ஜான்சி FBS