பெருங்கடலில் அதிகரிக்கும் வெப்ப அலைகள்.

பெருங்கடல் வெப்ப அலைகள் (Marine Heatwaves – MHW) உலகளவில் 240% அதிகரித்துள்ளன என்று ஒரு புதிய ஆய்வு எச்சரிக்கிறது. பெருங்கடல் வெப்ப அலைகள் என்பது பெருங்கடல்களின் வெப்பநிலையில் நீண்ட காலத்திற்கு தீவிரமாக அதிகரிப்பதைக் குறிக்கிறது. இவ்வெப்ப அலைகள் உலகில் அனைத்துப் பகுதியையும் பாதித்துள்ளன. கிட்டத்தட்ட 10% பெருங்கடல்கள் மிக அதிக கடல் மேற்பரப்பு வெப்பநிலையை கொண்டுள்ளன.  இது ஆண்டு சராசரியை விட நான்கு மடங்கு அதிகம் என Nature Climate Change இதழில் வெளியான ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“2023-24 கோடை காலத்தில் கடல் வெப்ப அலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இருந்தன. மேலும் இவை பரவலான உயிரியல், இயற்பியல் மற்றும் சமூக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. காலநிலை மாற்றத்தால் கடல் வெப்ப அலைகள் தீவிரமடையும்போது, அதைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சிறந்த தகவமைத்துக்கொள்ளும் திட்டங்கள் மற்றும் விரைவான மீள்தன்மையுடன் கட்டுமானங்களை உருவாக்கவேண்டும்” என்று இவ்வாய்வின் ஆசிரியரான யுனைடெட் கிங்டம், பிளைமவுத்தின் கடல் உயிரியல் சங்கத்தின் டான் ஏ ஸ்மேல் தெரிவித்துள்ளார்.2023ல் நீடித்த கடல் வெப்ப அலைகள் வானிலை மாதிரிகளைப் பாதித்தன. இது இங்கிலாந்து, வட அமெரிக்கா மற்றும் ஜப்பானில் தீவிர வெப்பநிலை உயர்வுக்கும் ஈக்குவடோர், லிபியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் கடும் வெள்ளத்திற்குக் காரணமாக அமைந்தது.

இந்தியப் பெருங்கடல் பகுதி 1950-2020 காலகட்டத்தில்  1.2°C வீதம் வெப்பமடைந்துள்ளது என்பதை முந்தைய ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், 2020 முதல் 2100 வரையிலான காலகட்டத்தில், காலநிலை மாதிரிகள் 1.7°C-3.8°C வீதம் வெப்பமடையும் என கணிக்கின்றன. இதன் விளைவுகள் அரபிக் கடல் மற்றும் வடமேற்கு இந்தியப் பெருங்கடலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், பெருங்கடல் வெப்ப அலைகள் ஆண்டிற்கு 20 நாட்களில் இருந்து 220-250 நாட்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்து மற்றும் மெக்சிகோ வளைகுடா பகுதியில் மீன்கள் அதிகளவில் இறந்து மிதந்தன. இதுபோன்ற உணவு வலைப்பின்னலில் ஏற்பட்ட பாதிப்புகளையும் ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். வட அட்லாண்டிக்கில், பைட்டோபிளாங்க்டனின் குறைந்த உற்பத்தித்திறன் பரந்த உணவு வலைப்பின்னலை பாதித்தது. இது மீன் மற்றும் கடற் பறவைகளில் ஏற்படுத்தப்போகும் சாத்தியமான பாதிப்புகள் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. பைட்டோபிளாங்க்டன் (phytoplankton) என்பது நுண்ணிய கடல் பாசிகள் ஆகும், இது பல நீர்வாழ் உணவு வலைப்பின்னல்களின் அடிப்படையாகும்.

பெருங்கடல் வெப்ப அலைகளை கையாள உலகம் வேகமாகத் தயாராக வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். 2023-2024 கடல் வெப்ப அலைகளின்போது பாதிப்புகள் ஏற்பட்ட பெரும்பாலான பகுதிகளில் எவ்விதத் தணிப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பெருங்கடல் வெப்ப அலைகள் குறித்த முன்னறிவிப்புகளின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கும் ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 2023-2024 காலகட்டத்தில், முன்னறிவிப்புகள் பொதுவாகத் துல்லியமாக இருந்தன. ஆனால், சில தவறுகள் இருந்தன. “முன்னறிவிப்புகளின் துல்லியத்தை மேம்படுத்துவது தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும், அதே நேரத்தில் நீண்ட கால முன்னறிவிப்புகள் நாம் தயாராவதற்கான காலத்தை நீட்டிக்கும்,” என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.