இயேசுவைப் பற்றிய குழப்பத்தில் உழல்வோருக்கு நாமே விடிவெள்ளி! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

25 செப்டம்பர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 25ஆம் வாரம் – வியாழன்
 
ஆகாய் 1: 1-8 
லூக்கா  9: 7-9

 

இயேசுவைப் பற்றிய குழப்பத்தில் உழல்வோருக்கு நாமே விடிவெள்ளி!

 முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகம் ஆகாய் இறைவாக்கு நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆகாய் எனும் இறைவாக்கினர் யூதர்கள் பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்டு, சொந்த நாடான யூதேயாவிற்குத் திரும்பிய காலக்கட்டத்தில் இறைவாக்குரைத்தார். பாபிலோனியர்களால் அழிக்கப்பட்ட எருசலேம் ஆலயத்தை விரைவில்  மீண்டும் கட்டி எழுப்ப இவரது இறைவாக்குகள் தூண்டின. 

இன்றைய வாசகத்தில்,  நாடுகடத்தப்பட்டவர்கள் திரும்பி தாயகம் வந்தவர்கள்  கடவுள் விரும்புவதைச் செய்யத் தவறிவிட்டு அவர்களது சொந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை இறைவாக்கினர்  ஆகாய் காண்கிறார். பாபிலோனிலிருந்து நாடு திரும்பிய காலக்கட்டத்தில்  ஆலயம் கட்ட ஊக்குவித்த முதல் இறைவாக்கினராக ஆகாய்  கருதப்படுகிறார். மக்கள் சொந்த  நாடான யூதேயாவுக்குத்  திரும்பத் தொடங்கியுள்ளனர். அவர்கள் கடவுளின் வீட்டை (ஆலயத்தை) பழுதுபார்ப்பதில் தங்களை அர்ப்பணிக்காமல், தங்கள் சொந்த வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் குறியாக உள்ளனர். 

மக்களை, குறிப்பாக செல்வந்தர்களுக்கு  முதலில் கோவிலை மீண்டும் கட்டியெழுப்புமாறு ஆகாய் சவால் விடுகிறார்.  “படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்று இந்த மக்கள் சொல்கிறார்கள். இந்தக் கோவில் பாழடைந்து கிடக்கும் இந்நேரத்தில், நீங்கள் மட்டும் மாட மாளிகைகளில் குடியிருக்கலாமா? ஆதலால், இப்பொழுது படைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: ‘உங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள்’ என்று ஆலயத்தின் அவலநிலையைச் சுட்டிக்காட்டுகிறார் ஆகாய். ஏனெனில், எருசலேம் ஆலயமானது முன்பு, கடவுளின் மாட்சி வெளிப்படும் இடமாக இருந்தது.

நற்செய்தி.

இயேசு அற்புதங்களைச் செய்து வருகிறார், போதித்து வருகிறார், மக்கள் கூட்டத்தால் பின்தொடரப்படுகிறார். அவரைப் பற்றிய வதந்திகள் பரவி வருகின்றன. கலிலேயா மற்றும் பெரேயாவின் ஆட்சியாளரான ஏரோது அந்திப்பா, இயேசுவைப் பற்றிய இந்த செய்திகளைக் கேள்விப்படுகிறார்.

மக்கள் வெவ்வேறு விவிதமாகப் பேசிக்கொள்கிறார்கள்.  ஏரோதுவால் தலை வெட்டப்பட்டு இறந்த திருமுழுக்கு  யோவான் உயிரத்து வந்துவிட்டார் என்றும், சிலர் இவர்தான் எலியா, அல்லது பண்டைய இறைவாக்கினர்களில் ஒருவராகத்தான் இயேசு இருக்க வேண்டும் என்றும் பலர் கூறுகிறார்கள். இது இயேசுவின் மீது ஏரோது கொண்டிருந்த ஆர்வத்தையும், இயேசு யார் என்பது குறித்த ஏரோதுவின் குழப்பத்தையும் நற்செய்தி காட்டுகிறது.   

ஏரோதுவின் இந்த முரண்பாடான கவலை பின்னர் லூக்காவின் நற்செய்தியில் (அதிகாரம் 13) மீண்டும் வெளிப்படுகிறது, மேலும் கைது செய்யப்பட்ட இயேசு ஏரோதுவின் முன் கொண்டுவரப்படும்போது (அதிகாரம் 23) அதன் உச்சத்தை அடைவதைக் காணலாம். ஏரோது மீது கவனம் செலுத்துவது  இதன் நோக்கம் அல்ல, மாறாக இயேசுவின் மீது கவனம் செலுத்துவதாகும். ஏரோதின் கேள்வி (“அப்படியானால் நான் கேள்விப்பட்ட இந்த நபர் யார்?”) என்பது லூக்காவின் நற்செய்தியின் மீதமுள்ள பகுதிகளில் பதிலளிக்கப்படும் கேள்வி.   

சிந்தனைக்கு.

இன்றைய நற்செய்திப் பகுதி இயேசு உண்மையில் யார் என்ற கேள்வியை எழுப்புகிறது. மக்கள் அவரை வகைப்படுத்த முயற்சிக்கிறார்கள்: அவை, உயிர்த்தெழுப்பப்பட்ட யோவான், ஓர் இறைவாக்கினர், எலியா என்பனவாகும். இவை அனைத்தும் எதிர்பார்ப்பை, மேசியாவின் நம்பிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றன, ஆனால் எதுவும் முழுமையான விவரிப்பு  அல்ல.   மத்தேயு 16:18-ல், இயேசு, மக்கள் என்னை யார் என்று கூறுகிறார்கள்? என்ற கேள்விக்குச் சீடர்களும் இப்படிதான் பதிலுரைத்தார்கள்.

யார் இந்த ஏரோது? இந்த ஏரோது  கலிலேயாப் பகுதியில் இப்போது அதிகாரத்திலும் பொறுப்பிலும் இருக்கிறார், ஆனாலும் இயேசுவைப் பற்றில மக்களின் எண்ணங்களால் அவன் கலக்கமடைகிறான். ஏரோதுவின் உள்ளமும் பதைபதைக்கிறது. ஏனெனில், குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும்! இவன்தானே தலைவெட்டி திருமுழுக்கு யோவானைக் கொன்றான். 

இவன் ஏரோது அந்திப்பா. இவனது தந்தைதான் மூன்று ஞானிகளைச் சந்தித்தவன், இயேசுவைக் குழந்தைப் பருவத்தில் கொல்ல முயற்சித்தவன். இவன் கலிலேயா பகுதியில் இயேசு சென்ற இடங்களுக்குச் சென்றிருந்தால் இயேசுவின் நற்செய்தி போதனை காதுகளில் விழுந்திருக்கும். கொஞ்சமாவது மனமாற்றம் ஏற்பட்டிருக்கும். காதுகளையும் மனதையும் உண்மைக்குத் திறக்காவிடில் குழப்பமும் கலக்கமும்தான் மிஞ்சும் என்பதற்கு இந்த ஏரோது நல்ல எடுத்துக்காட்டு. இயேசு இந்த ஏரோதுவைதான் 'குள்ளநரி' என அழைத்தார்.  ( லூக் 13:32). 

கடவுள் நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும், நாள் முழுவதும் நம்மிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் தொடர்ந்து நமக்கு முழு நற்செய்தியின் செய்தியை வழங்கி வருகிறார். கடவுள் சொல்வதில் பலவற்றை நாம் வெளிப்படையாகக் கேட்டாலும், அவற்றில் கவனம் செலுத்துவதில்லை. பாறை, முட்புதர் மேல் விழுந்த விதைகளைப்போல் ஆகிவிடுகிறோம்.  

முதலில், இயேசுவின் மீது  ஏரோதுவின் ஆர்வத்தைப் பற்றி சிந்தித்தால், அவனில் இயேசுவைப் பற்றி மேலும் அறிந்திட ஆர்வம் இருந்ததை அறிகிறோம். அலட்சியமாக இருப்பதை விட அறிந்து தெளிந்திட ஆர்வம் காட்டுவது ஒரு படி மேல் அல்லவா? அவனின் அந்தஸ்தும், பதவியும் அவனை இயேசுவிடம் நெருங்கவிடவில்லை. ஆர்வம் இருந்தென்ன, செயலில் அவன் பூஜியமாக இருந்தான். 'இவர் யாரோ?' என ஏரோது கேட்கும் கேள்வியை, சற்றுமுன் சீடர்களும், 'இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகின்றார். அவை கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?' என்று கேட்டதை யும் நாம் ஒப்பிட்டுப்பார்க்கலாம் (லூக் 8:25). 

இன்று நாம் எந்நளவுக்கு இயேசுவை அறிந்து வைத்துள்ளோம்?  நம்மிலும் பல ஏரோதுகள் இருக்கத்தான் செய்கிறார்கள்? ஏரோதுவைப் போல (நற்செய்தியில் உள்ளபடி) இயேசுவைத் தேடிக்கொண்டிருப்போர் பலர். அதே இயேசுவுக்குப் புறம்பாகப் பேசித் திரிவோரும் பலர். 

முதல் வாசகத்தில், சொந்த நாடு திரும்பிய யூதர்கள் கண்ணெதிரே இடிந்துகிடக்கும்  ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஆர்வம் காட்டாமல்,  சொந்த காரியங்களில் ஆர்வம் காட்டியதை ஆகாய் கடிந்துகொள்கின்றார். இவ்விரு வாசகங்களும் இன்று நமக்கு நல்ல செய்தியைத் தருகின்றன. நம்மில் வாழும் ஆண்டவரை நாம் ஆழமாக அறிந்துணர்ந்து அவரது பணிகளில்  ஆர்வம் காட்டவும், அவரை நம்மைச் சுற்றிய உலகிற்கு வெளிப்படுத்தவும் வேண்டும். அவரைப் பத்திரமாகப் பூட்டிவைத்து, நம்மைப்பற்றிய  தன்னலக் காரியங்களில் அக்கறை காட்டினால்,  மிஞ்சுவது ஏமாற்றமும், குழப்பமும், கலக்கமும்தான். 

இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே, ஏரோதுபோல் ‘நீர் யார்?’ என்ற குழப்பதில் உழல்வோரைத் தெளிவுப்படுத்தும் விடிவெள்ளியாக நான் விளங்கிட உதவுவீராக. ஆமென்.
   
 

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452