சீடத்துவம்- தீயோனுடனான போராட்ட வாழ்வு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

24 செப்டம்பர் 2025
பொதுக்காலம் 25ஆம் வாரம் – புதன்
எஸ்ரா 9: 5-9
லூக்கா 9: 1-6
சீடத்துவம்- தீயோனுடனான போராட்ட வாழ்வு!
இன்றைய முதல் வாசகத்தில், "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின்" குருவாகிய எஸ்ரா, கடவுள் யூதர்களின் பிரமாணிக்கமற்ற வாழ்வுக்காகப் பாபிலோனுக்கு அடிமமைகளாக நாடு கடத்த அனுமதித்தது மட்டுமல்லாமல், அவர்கள் தவற்றை உணர்ந்து புலம்பி அழுந்தபோது, மனமுருகி, அவர்கள் சொந்த நாடான யூதேயாவுக்கு திரும்புவத்தற்கும் எருசலேமில் உள்ள ஆலயத்தை மீண்டும் கட்டுவதற்கும் உதவியதை நினைவுகூர்கிறார். இந்த கடவுளின் திட்டம் என்பதை உணர்கிறார்.
நாடு கடத்தப்பட்ட பிறகு, புறவினத்து பாரசீக மன்னர் சைரஸின் உதவியால் யூத மக்கள் தங்கள் தாயகத்திற்குத் திரும்பியதையும், ஆலயம் மீண்டும் கட்டப்படுவதையும் காணும் பாக்கியம் எஸ்ராவுக்குக் கிடைக்கிறது. நடக்கும் நிகழ்வுகளில் கடவுளின் கரம் இருந்து செயல்படுவதை எஸ்ரா காண்கிறார். கடவுள் தமது மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற சைரஸ் போன்ற புறவினத்தாரையும் கொண்டு கடவுள் செயல்பட முடியும் என்பதை அவர் அறிந்துணர்ந்தார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு பன்னிருவரையும் (திருத்தூதர்களை) பேய்களையெல்லாம் ஓட்டவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்ததோடு, இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்புகிறார். ‘திருத்தூதர்கள்’ என்றாலே, அனுப்பப்பட்டவர் என்று பொருள்.
இவர்களுக்கு முக்கியமாக சில நிபந்தனைகளை முன்வைக்கிறார். பன்னிருவரும் கூடுதல் பொருட்களை எடுக்கக்கூடாது, ஆனால் உணவு, உடை மற்றும் பிற எல்லா வழிகளிலும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடவுளை நம்பியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்புகிறார். மேலும், அவர்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருக்கவும், அவர்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிட்டுச் செல்வும் பணிக்கிறார்.
நிறைவாக, திருத்தூதர்கள் செல்லும் ஊர்களில் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்க வேண்டும் என்பது அவர்களின் தலையாயக் கடமை என்று அறிவுறுத்தி அனுப்புகிறார்.
சிந்தனைக்கு.
நாம் திருமுழுக்கால் அழைக்கப்பட்டவர்கள் என்றால், நாம் இயேசு கிறிஸ்துவின் பணியைத் தொடர வேண்டியவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த வாசகங்கள் கடவுள் நமக்கென்று ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டலாக உள்ளன. கடவுள் அவரது படைப்பான எல்லா மக்களும் அவரை அறிந்து அன்பு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அதற்கு அவர் அறிவிக்கப்பட வேண்டும். அதற்கு அவருக்குப் பணியாள்கள் தேவை.
முதல் வாசகத்தில் கடவுள் நாடுகடத்தப்பட்டவர்களை அவர் அளித்த நாட்டிற்கு மீண்டும் அழைத்து வந்தார் என்றும், அதற்குப் புறவினத்து மன்னரான சைரசை அவர் பயன்படுத்தினார் என்றும் அறிந்தோம். கடவுள் எளிதில் நம்மை கைவிடுபவர் அல்லர். கடவுளின் திட்டத்தின் ஒரு பகுதி.
நற்செய்தியை (இயேசுவை) இவ்வுலகிற்கு அனுப்பிய கடவுள், அதே நற்செய்தியை தொடர்ந்து உலகிற்கு அறிவித்துக்கொண்டிருக்கத் திருஅவையை ஏற்படுத்தினார். இன்றைக்கு, நாமே திருஅவையாக, இப்பொறுப்புக்கு உரியவர்களாக உள்ளோம். இதைதான் புனித பவுல், ‘நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! (1 கொரி 9:16) என்றார்.
நாமும் இயேசு திருத்தூதர்களுக்கு வழங்கிய அதிகாரத்தை நற்செய்தி அறிவிப்புப்ணிக்குக் கொண்டுள்ளோம். நம்மில் பலர் இப்பொறுப்பை அறிவதில்லை. இன்றைய நற்செய்தியில், லூக்கா குறப்பிட்டுள்ளதைப்போல, இயேசு தனது திருத்தூதர்களை பணிக்காக மக்கள் மத்தியில் அனுப்புவது இதுவே முதல் முறை. இந்தப் பணியையே, இயேசு இறந்து, உயிர்த்தெழுந்து, விண்ணேற்றம் அடைந்த பின், பெந்தெகொஸ்தே நாளில் ஏற்க அவர்களைத் தயார்படுத்துகிறார். ஆனால் இப்போதைக்கு, இயேசு இந்த திருத்தூர்களை மூன்று விடயங்களைச் செய்யக் கட்டளையிடுகிறார்: பேய்களை விரட்டுவது, நோயுற்றவர்களைக் குணப்படுத்துவது மற்றும் கடவுளின் அரசை அறிவிப்பது ஆகும்.
இவற்றறில் முதலாவதாக்க் கூறப்பட்ட பேயை ஓட்டும் பணியில் பேய்களையும் எதிர்த்துப் போராட நாம் அழைக்கப்பட்டுள்ளோம். பேய்கள் அவற்றின் தீய செயலால் விண்ணகத்திலிருந்து துரத்தப்பட்ட வானதூதர்கள். அவை வானத்தூதர்களாக இருந்த வேளையில் கொண்டிருந்த ஆற்றலை இழந்துவிடவில்லை. அவற்றைத் தக்கவைத்துக்கொண்டன. மேலும் அவை அந்த இயற்கை சக்திகளைப் பயன்படுத்தி நம்மை ஏமாற்றவும், ஒடுக்கவும், சில சமயங்களில் நம்மை ஆட்கொள்ளவும் முயற்சிக்கிறன. இந்த தீய சக்தியை (பேயை) எதிர்த்துப் போராடுவது ஒரு தொடர் நிகழ்வு.
ஒன்றை நாம் நினைவில்கொள்ள வேண்டும். கடவுளுக்கு முன்பாக பேய்கள் சக்தியற்றவை, மேலும் கடவுள் நமக்கு அவற்றின் மீது ஆன்மீக அதிகாரத்தைக் கொடுத்துள்ளார். இதை பேய்கள் நம்புகின்றன, நாம்தான் ஏற்க மறுக்கிறோம். ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும்’ (லூக்கா 4:34) என்று பேய் இயேசுவுக்குப் பயந்து அறிக்கையிட்டதை நினைவில் கொள்வோம்.
நிறைவாக, நற்செய்தியில், திருத்தூதர்கள் செல்லும் ஊர்களில் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்க வேண்டும் என்பது அவர்களின் தலையாயக் கடமை என்று அறிவுறுத்தி அனுப்புகிறார். அவர்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிட்டுச் செல்வும் பணிக்கிறார் இயேசு. ஆம், நமது நற்செய்திப் பணியை ஏற்க மறுப்போரைப் பற்றி வீணே கவலைப்படவோ, முயற்சியில் சுணங்கவோ தேவையில்லை. சொல்லாலும் செயலாலும் அறிவிக்க வேண்டியதே நமது பணி. கேட்போரில் மனமாற்றம் ஏற்படச் செய்வது தூய ஆவியாரின் பணியாகும்.
இறைவேண்டல்.
எல்லாம் வல்ல ஆண்டவரே, பேய்களின் மீது உமக்கு அதிகாரம் உண்டு என்பதை நம்புகிறேன். தயைக்கூர்ந்து தீயவனின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவித்து, எனது பணிவாழ்வில் சிறந்தோங்கச் செய்வீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
