இயேசு அன்றும் இன்றும் நம் மூத்த சகோதரர்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

23 செப்டம்பர் 2025
பொதுக்காலம் 25ஆம் வாரம் – செவ்வாய்
எஸ்ரா 6: 7-8, 12b, 14-20
லூக்கா 8: 19-21
இயேசு அன்றும் இன்றும் நம் மூத்த சகோதரர்!
முதல் வாசகம்.
கடவுளின் திருவுளத்திற்குக் கீழ்ப்படியும்போது, பெரிய காரியங்கள் நடக்கும். முதல் வாசகம், திரும்பி வரும் நாடுகடத்தப்பட்டவர்கள் கடவுளின் இல்லமான எருசலேம் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் எவ்வாறு ஆர்வம் காட்டினார்கள் என்பதையும், அவர்கள் எவ்வாறு கடவுளின் கட்டளைகளைச் சரியாகப் பின்பற்றினார்கள் என்பதையும் விவரிக்கிறது.
பாபிலோனில் அடிமைப்பட்ட யூதர்களுக்கு விடுதலை அளித்த பாரசீக மன்னர் சைரஸ் மட்டுமல்ல, அவரது வாரிசும் (டேரியஸ்) முன்னாள் நாடுகடத்தப்பட்டவர்களால் ஆலயத்தை மீண்டும் கட்டுவதற்கு உதவுகிறார். அவர்கள் புறவினத்தார்கள், ஆனாலும் ஆலயம் எழுப்பப்பட அனுமதி அளித்தது மட்டுமல்லாமல், ஆலயத்தை அதன் முந்தைய மகிமைக்கு மீட்டெடுக்கும் முயற்சிக்கு நிதி உதவி செய்யுமாறு மற்றவர்களிடம் கூறி ஆதரவு நல்கினர்.
ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, யூதர்கள் மகிழ்ச்சியடைந்து, கைவிட்ட பண்டிகைகளைக் குறிப்பாக, பாஸ்கா பெருவிழா போன்றவற்றை மீண்டும் கொண்டாடுகிறார்கள்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு குடும்ப உறவு என்ற கருத்தை உயிரியல் (biological) உறவுகளிலிருந்து (அவரது தாய், சகோதரர்கள்) நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலில் வேரூன்றியவர்களுக்கு மாற்றுகிறார்: கடவுளுடைய வார்த்தையைக் கேட்பது மட்டும் போதாது; அதன்படி செயல்படுவதே (அதை வாழ்ந்து காட்டுவது) ஒருவரை உண்மையான இறை குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறுகிறது எனும் கருத்தை வலியுறுத்துகிறார்.
கடவுளின் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதை ஒருவர் ஏற்றுக்கொள்வதற்கான அடையாளம் இயேசு மற்றும் அவரது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதாகும் என்கிறார் ஆண்டவர்.
சிந்தனைக்கு.
நற்செய்தியில் காணப்படும் இயேசுவின் பதிலானது, இறையரசுக்குரிய இறைமக்கள் சமூகமானது, கடவுளுடைய வார்த்தைக்கு உட்பட்ட சமுகத்தாலும் அர்ப்பணிப்பாலும் உருவாகிறது என்பதைக் குறிக்கிறது. இது பரந்த உறவுமுறையை வரவேற்கிறது: இறைவனின் சொல் கேட்டு கீழ்ப்படிபவர் எவரும் கிறிஸ்துவின் குடும்பமாகிறார்கள் என்பதை ஆண்டவர் வலியுறுத்துகிறார்.
ஆகவே, கிறிஸ்தவ சமூகத்தில் உள்ள மற்றவர்களை நாம் எப்படி நடத்துகிறோம்? அவர்களை சகோதர சகோதரிகளாக ஏற்கிறோமா அல்லது, வேறுபடுத்தி வெறுக்கிறோமா? போன்ற கேள்களுக்குப் பதில் தேவை. சேவை, அன்பு, நீதி, இரக்கம் ஆகியவற்றின் மூலம் நாம் இயேசுவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை எந்த வழிகளில் வெளிப்படுத்த முடியும்? என்பதும் மனதில் தோன்றும் மற்றொரு கேள்வியாகும்.
இந்தப் பகுதியில் "சகோதரர்கள்" என்ற வார்த்தையை இயேசுவுக்கு இரத்த சகோதரர்கள் இருந்தார்கள் என்று புரிந்து கொள்ளக்கூடாது என்பது தெளிவாகிறது. இயேசு மரியாவின் ஒரே குழந்தை என்பது நமது நம்பிக்கையின் ஒரு கோட்பாடு. அந்தக் காலத்தில், ஒருவரின் நீட்டிக்கப்பட்ட குடும்பத்தை "சகோதரர்கள்" என்று குறிப்பிடுவது பொதுவான நடைமுறையாக இருந்தது. இது குறிப்பாக இயேசுவின் உறவினர்களுக்கும், ஒருவேளை இரத்தத்தால் தொடர்பில்லாத ஆனால் ஒரே குடியிறுப்புப் பகுதியை (நாசரேத்துவை) சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.
பிரிந்த சகோதர சபையினர் இன்றைய நற்செய்தியில் வரும் ‘இயேசுவின் சகோதரர்கள்’ என்ற சொற்றொடரை திரித்தக்கூறுவதுண்டு. இது யூதர்களின் பண்பாட்டுப் பின்னணியை அறியாதவர்களின் புரிதலாகும். இக்காலத்தில் நாம் பலரை ‘uncle’ என்று அழைக்கிறோம். நாம் ‘uncle’ என்று அழைப்போரெல்லாம் அம்மாவின் அண்ணன் அல்லது தம்பி ஆகிவிடமாட்டர்கள்.
அவ்வாறே யூதப் பண்பாட்டில் ‘சகோதரர்’ என்பது உடன் பிறந்தவராகப்பொருள் கொள்ளக்கூடாது. மத்தேயு 28:10ல், “அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்று இயேசு, மகதலா மரியாவிடமும் வேறொரு மரியாவிடமும் கூறுவார். இங்கே ‘என் சகோதரர்கள்’ என்று இயேசு குறிப்பிடுவது அவரது திருத்தூதர்களை என்பது தெளிவாகிறது. மேலும், கல்வாரியில் இயேசு மரியாவை திருத்தூதர் யோவானிடம்தான் ஒப்படைத்தார். இது போன்று இன்னும் சில எடுத்துக்காட்டுகளை முன்வைக்கலாம். அன்னை மரியா என்றென்றும் கன்னி என்பதுதான் தூய ஆவியாரின் திருஅவைக்கான வெளிப்பாடு.
"கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுபவர்கள் என் தாயும் என் சகோதரர்களும்" என்று இயேசு தம் சகோதரர்களிடம், பூமிக்குரிய வழியில் மட்டுமே தம்மைப் பார்ப்பதை நிறுத்துமாறு சவால் விடுத்தார். அவரது உறவினர்கள் உட்பட அனைவரும், விண்ணகத் தந்தையின் மகனாக இயேசுவைப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இயேசுவின் தெய்வீக அடையாளத்தை ஏற்றுக்கொண்டு, தந்தையின் திருவுளத்திற்கு ஏற்ப வாழ வேண்டும். இவ்வாறு இந்த மண்ணகத்தில் வாழ்வோர் அனைவரும் இயேசுவின் சகோதரர்கள். இப்படிப்பினையானது நம் அனவருக்கும் தந்தை ஒருவரே என்று இறையியல் படிப்பினையை ஆழப்படுத்துகிறது. இதன் அடிப்படையில் அன்னை மரியா தம் அனைவருக்கும் தாயாகிறார்.
இயேசு ஒரு யூதர். எனவே, அவரது உறவினர்களில் சில பரிசேயர்களாகவும் இருந்திருக்கக்கூடும். அவர்கள் கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்காமலேயே இருந்திருக்காலம். இன்றைக்கும் நம் மத்தியில் சில கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், கிறிஸ்தவர்களாக வாழ்வதில்லை, அவ்வாறே, இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்களில் சிலர் அல்லது பலர் இயேசுவின் படிப்பினையை உதாசினப்படுத்தினர். அவர் வளர்ந்த ஊரான நாசரேத்தில் இயேசவின் வார்த்தைக்குச் செவிசாய்க்காமல் அவரை விரட்டியடித்தார்கள். இப்படிப்பட்டவர்கள் இயேசுவின் உறவினர்களாக மாறமுடியாது என்பதைச் சுட்டிக்காட்டவும் இயேசு மேற்கண்டவாறு அறிவுறுத்தியிருக்கலாம்.
மேலும், இயேசுவை குடிகாரன் என்றும் பெயல்செபூலைக்கொண்டு பேய் ஓட்டுகிறான் என்றும் பலர் குறைகூறி திரிந்தனர். அதன் விளைவாகவும் இயேசுவின் உறவினர்கள் (சிற்றப்பா, பெரியப்பா பிள்ளைகள்) மரியாவோடு இயேசுவைச் சந்திக்க வந்திருக்கலாம். இப்படியாக நாம் சிந்திக்க வேண்டும். ‘கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு’ என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் கூறியிருப்பார். இப்படியாக மரியாவின் தூய வாழ்வைக் கலங்கப்டுத்த விழைவது கட்டுக்கதை.
முதல் வாசகத்தில் நாடு திரும்பிய மக்கள் மீண்டும் இடிந்துபோன ஆலயத்தைக் கட்டியெழுப்பும் பணியில் இறங்கிறனர். நாமும் சில காரணங்களுக்காக சரிந்து போன நமது நம்பிக்கை வாழ்வை மீண்டும் புதுப்பிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். சிலர் நமக்கான நம்பிக்கையை சீர்குலைக்கலாம். வீழ்ந்துவிடாமல், நமது நம்பிக்கையை நாம் தற்காப்போம், வாழ்வு பெறுவோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உமது வார்த்தைகளைக் கேட்டு கீழ்ப்படிய எனக்கு உதவி செய்வதன் மூலம், என்னை உமது தெய்வீக குடும்பத்தில் ஒருவராக என்றும் இணைத்திருப்பீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
