ஆண்வரின் வல்லமை நம்மை ஆட்கொள்வதாக! | ஆர்கே. சாமி | Veritas Tamil

2 செப்டம்பர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 22ஆம் வாரம் – செவ்வாய்
 
1 தெசலோனிக்கர்  5: 1-6, 9-11
லூக்கா  4: 31-37

ஆண்வரின் வல்லமை நம்மை ஆட்கொள்வதாக!

முதல் வாசகம்.

முதல் வாசகத்தில், ஆண்டவராகிய இயேசுவின் உடனடி வருகையைப் பற்றிய புனித பவுலின் பார்வை சிறிது மாறியிருந்தது.  பவுல் முதலில் நினைத்தது போல் இயேசு அவ்வளவு விரைவாக திரும்பி வரமாட்டார் என்பதை அவர் உணர்ந்தாலும்,  எதிர்பார்க்காத நேரத்தில் இயேசு திரும்பி வருவார் என்பதால் விழிப்புடன் இருக்குமாறு அவர் தெசலோனிக்கேயர்களை இன்னும் வலியுறுத்துகிறார். நம்பிக்கையாளர்கள் இருளின் (தீமையின்) மக்களாக இல்லாமல் ஒளியின் (நல்ல) மக்களாக இருக்கவும், இயேசுவைச் சந்திக்கும் நேரம் எந்த நேரத்திலும் இருக்கலாம் என்று செயல்படவும் பவுல் வலியுறுத்துகிறார். 

இந்த எச்சரிக்கையை அவர் பயப்பட வேண்டிய ஒன்றாக முன்வைக்கவில்லை, மாறாக ஆறுதலளிக்கும் மற்றும் உறுதியளிக்கும் ஒன்றாக நம்பிக்கையாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஏனெனில் அவர்கள் ஆண்டவரகிய இயேசு எந்த நேரத்திலும் திரும்பி வர முடியும் என்பது போல் மகிழ்ச்சியுடன் செயல்பட அழைப்புவிடுக்கிறார். 


நற்செய்தி.


நற்செய்தியில், இயேசு மரண அச்சுறுத்தலுக்குப் பிறகு, தனது சொந்த ஊரான நாசரேத்தை விட்டு விரைவாக வெளியேறி, கலிலேயா கடலைச் சுற்றியுள்ள பகுதியான, கப்பர்நநாகூம் நகரத்திற்குச் செல்கிறார். அங்கு அவர் சில  வல்ல செய்ல்களை (அற்புதங்களை)  செய்கிறார்: நற்செய்தி அறிவித்தல்,  தீய ஆவிகளை விரட்டுதல்  மற்றும் குணமளிப்பு ஆகியவை நிகழ்கின்றன. 

அக்காலத்தில், இந்த மூன்று செயல்களும் மெசியாவின் வருகைக்கும் காலத்தின் இறுதிக்கும் முன்னர் அவசியமான நிகழ்வுகளாக நம்பப்பட்டன. பல யூத நம்பிக்கையாளர்கள் மெசியாவின் வருகையின் போது, கடவுள் தீமையின் மீது வெற்றி  பெறுவார் என்று நம்பினர்.  மெசியாவின் வருகை மூலம் கடவுள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கப் போகும் காலத்தை இது குறிக்கிறது என்று பலர் எண்ணியிருக்கக்கூடும்.


சிந்தனைக்கு.


இன்றைய வாசகங்களைப் பற்றி சிந்திக்கும்போது, கடவுளில்  நம்பிக்கை கொண்டவராக இருப்பது என்பது இயேசு வாக்களித்த அவரது இரண்டாம் வருகைமீது நம்பிக்கையுட்ன விழிவைத்துக் காத்திருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன். 

எல்லா நேரங்களிலும் இயேசுவின் வருகைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். கடவுள் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றுவார் என்ற நமது மகிழ்ச்சியான நம்பிக்கையை பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்பதே இதன் பொருள்.  நாம் என்றென்றும் ஒளியின் ஆட்சியின் மக்கள்  என்பதை நமது செயல்களும் எண்ணங்களும் பிரதிபலிக்க வேண்டும்.


உலகத்தின் ஒளியான இயேசுவும், அவரது உயிர்த்தெழுதலும்  காலை சூரிய உதயத்தை விட நமது நிலைவாழ்வுக்கு  நம்பிக்கையூட்டுவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்கிறது.  


கப்பர்நாகூம், கலிலேயா கடலுக்கு வடக்கே உள்ள ஒரு நகரம். இது அவரது பொது பொதுப் பணியின் போது அவரது புதிய மையமாக மாற இருந்தது. கப்பர்நாகூமில் அவருக்குக் கிடைத்த ஆதரவு நாசரேத்தில் அவருக்குக் கிடைத்ததை விட மிகவும் வித்தியாசமானது.  

கப்பர்நாகூமில் உள்ள தொழுகைக்கூடத்தில் அவர் கற்பித்துக் கொண்டிருந்தபோது, பேய் பிடித்த ஒரு மனிதன் அவரிடம் வந்தான், இயேசு அந்தப் பேயை அதட்டி துரத்தினார், மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். இயேசுவைப் பற்றிய செய்தி விரைவாகப் பரவியது. இதற்குப் பிறகு, இயேசு வேறு பல அற்புதங்களைச் செய்தார், மக்கள் அவரது அதிகாரத்திலும், மனிதநேயப் பணியிலும் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினர்.

இயேசு நாசரேத்திலும் நற்பணி செய்தார். அங்கு மக்கள் அவரை நம்பத் தவறிவிட்டனர். கப்பர்நாகூம் மக்கள் பார்வையில் இயேசு வேறுபட்டவராகத் தோன்றினார். இங்கே வேறுபட்டவர் இயேசு அல்ல, மக்கள்.  

கப்பர்நாகூமில் மக்கள் நம்பிக்கை எனும் கொடையை ஏற்றுக்கொள்ள உள்ளம்  திறந்திருந்ததால், இயேசு பலரின் இதயங்களை வென்றார். நம்மிலும், நற்கருணையிலும் இதர அருளடையாளங்களிலும் நாம் ஏற்கும் இயேசு நமது நம்பிக்கையின்  மையமாகத் திகழ்கிறார். முதல் வாசகத்தில் ஆண்டவரின் மறுவருகையில் நம்பிக்கை வைக்க பவுல் அழைப்புவிடுத்ததை நினைவில் கொள்வோம்.

இயேசு, அன்பின்  அதிகாரத்தை நம்மிலும்  பயன்படுத்த விரும்புகிறார். ஆகவே, அவரது அதிகாரத்தை அவர் நம்மில் வெளிப்படுத்த எவை தடையாக உள்ளன? என்பதைக் குறித்து சிந்திப்போம்

இறைவேண்டல்.

என் ஆண்டவரே, நீர் ஒருவரே என் என்னில் அதிகாரம் செலுத்தி, ஒழுங்கையும் அமைதியையும் கொண்டு வர முடியும். உமது திருவுளப்படி,  என்னை வழிநடத்துவீராக. ஆமென்.
 

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452