நம் கடவுள் வாழ்வோரின் கடவுள்! | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil

பொதுக்காலம், வாரம் 33 சனி    மறையுரை 22.11.2025
மு.வா: 1 மக்:  6: 1-13
ப.பா: திபா 9: 1-2. 3,5. 15,18
ந.வா: லூக்: 20: 27-40 

 நம் கடவுள் வாழ்வோரின் கடவுள்! 

இன்றைய நற்செய்தி நம்முடைய கடவுளை வாழ்வோரின் கடவுளாக சுட்டிக்காட்டுகிறது. சதுசேயர்கள் இயேசுவை ஏளனம்  செய்யும் நோக்குடன்  உயிர்த்தெழுதல் பற்றிய கேள்வியை கேட்டனர். சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தனர். இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்று  கூறியதால் அவரைக் கேலி செய்யும் நோக்குடன் கேள்வி கேட்டனர்.  ஆனால் இயேசு மிகவும் சாமர்த்தியமாக அவர்களுக்கு  பதில் கொடுத்தார். 

இயேசு சதுசேயர்களின் குறைக்காணும் மனநிலையை அறிந்தவராய்  உயிர்ப்பின் மேன்மையைப் பற்றி எடுத்துரைத்தார். உயிர்த்தெழுதல் இல்லை என்பது கடவுளை மறுப்பதற்கு சமம் என்ற சிந்தனையையும் சுட்டிக்காட்டினார்.  தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்தி உயிர்த்தெழுதல் பற்றிய போதனையை மிகச் சிறப்பாக விளக்கி கூறினார். 

உயிர்ப்பை பற்றிய நம்பிக்கை இல்லாதவர்களாய் சதுசேயர்கள் வாழ்ந்ததால், இவ்வுலக வாழ்க்கையை சிறப்பாக வாழவில்லை. ஆனால் நாம் வாழும் இந்த உலக வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ வேண்டுமெனில், உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கை வேண்டும். அப்படி நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே அறநெறியோடு வாழ்வர். இந்த உலக வாழ்க்கையில் உண்மையோடும் நேர்மையோடும் நீதியோடும் வாழ முயற்சி செய்வர். எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நிச்சயம் நமக்கு உயிர்ப்பு உண்டு. இறப்புக்கு பின் வாழ்வு உண்டு என்று ஆழமாக நம்புவோம். நாம் வாழும்  சிறந்த வாழ்க்கைக்கு  இறைவன் நிச்சயமாக கைமாறு கொடுப்பார். நல்லதை விதைப்பவர்கள் நல்லதை அறுவடை செய்வார்கள். தீயதை விதைப்பவர்கள் தீயதை மட்டுமே அறுவடை செய்வார்கள். எனவே நிச்சயம் இறப்புக்குப் பின்பு உயிர்ப்பு  என்ற வாழ்வு உண்டு என்று ஆழமாக நம்பி நம்முடைய வாழ்வை சிறந்த முறையில் வாழ முயற்சி செய்வோம்.

 இறைவேண்டல் 

வல்லமையுள்ள ஆண்டவரே!  உயிர்ப்பின் நாயகனே! எங்களுடைய வாழ்வில் இறப்புக்குப் பின்பும் சிறந்த ஒரு வாழ்வு உண்டு என்பதை அறிந்தவர்களாய் இவ்வுலக வாழ்வை சிறந்த வாழ்வாக வாழ அருளைத் தாரும்.  ஆமென்.