நாம் உலக மீட்பரின் அடையாளம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

தவக்காலம் முதல் வாரம் – புதன்
யோனா 3: 1-10
லூக்கா 11: 29-32
நாம் உலக மீட்பரின் அடையாளம்!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகமானது, இன்றைய ஈராக் நாடு இருக்கும் இடத்தில் ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வினை நினைவுகூர்கிறது.
அசீரியா, அதன் தலைநகர் நினிவே. அதன் அரசர்கள் மற்றும் மக்களின் பாவத்தின் காரணமாக அந்தப் பகுதியின் அழிவை அறிவிக்க இறைவாக்கினர் யோனா கடவுளால் அனுப்பப்படுகிறார்.
நமது முதல் வாசகத்தில், ஒரு பெரிய கடல் மீன் வயிற்றில் மூன்று நாட்கள் கழித்த பிறகு, யோனா ஆண்டவுடைய திருவுளத்தை நிறைவேற்ற தன்னில் இருந்த அச்சத்தையும், தடைகளையும் கைவிட முடிவு செய்கிறார். கடவுள் விரும்புவதைச் செய்ய அவர் ஒப்புக்கொள்கிறார். அவர் நினிவேயின் அழிவை அறிவிக்கத் தொடங்குகிறார்.
நினிவே என்பது இன்றைய ஈராக்கில் டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு நகரம். நினிவே வழியாக அவர் மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின் முதல் நாளில், மக்களும் நினிவேயின் ஆட்சியாளரும் தங்கள் பாவ வழிகளை விட்டு விலகி மனந்திரும்ப முடிவு செய்கிறார்கள். அவர்கள் யோனாவின் செய்தியை நம்பி ஏற்றனர். அவர்களுக்கு மனமாற்றம் ஏற்படுகிறது. அவர்கள் கடவுளை நோக்கி, தங்களையும் தங்கள் நாட்டையும் அழிக்க வேண்டாம் என்று கடவுளிடம் கெஞ்சி மன்றாடினார்கள்.
நிறைவாக, கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை. அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு மனமாற்றத்தைப் பற்றி தொடர்ந்து அறிவுறுத்துகிறார். அவர் யூதர்கள் பாவமுள்ளவர்கள் என்றும், தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறார். நினிவேயின் விசுவாசமற்ற மக்கள் மனமாறியதால், கடவுளால் மீட்கப்பட்டதை அவர் அவர்களுக்கு நினைவூட்டுகிறார்.
இறுதி தீர்ப்பு நாளன்று, மனம் திரும்பாத யூதர்கள் முன்னிலையில் மனம் தரும்பிய நினிவே மக்கள் வருவார்கள் என்று இயேசு முன்னறிவிக்கிறார், ஏனென்றால் இயேசு யோனாவை விட பெரியவராக இருந்தபோதிலும், யூதர்கள் மனம் திரும்பவில்லை. இன்னமும் அடையாளம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனவேதான இயேசு அவர்களைத் தீய தலைமுறையினர் என்று விவரிக்கிறார்.
சிந்தனைக்கு.
மற்றவர்களை விமர்சிப்பதும் தீர்ப்பளிப்பதும் மிகவும் எளிதான செயல். நமது நம்பிக்கை மற்றும் செயல் முறை மற்றவர்களை விட சிறந்தது என்று நாம் தப்பட்டம் அடிக்கிறோம். நாம் கடவுளின் மக்கள் என்றும், மற்றவர்களிடமிருந்து நாம் வேறுபட்டவர்கள் என்றும் அக்காலத்து யூதர்களைப்போல் பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.
தவக்காலத்தின் போது, நாம் மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும் தூய கடவுளின் அழைப்புக்கு மனமாற வேண்டும் என்று அழைப்பு விடப்படுகிறது. நாம் அனைவரும் நமது சொந்த, சுயநல வழிகளிலிருந்து மனதை, சிந்தனையை, வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும். நமது வாழ்நாளில் கடவுள் நமக்கு மீண்டும் மீண்டும் ஆண்டுதோறும் வாய்ப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். நினிவே மக்களைப்போல் அவரது அழைப்புக்குச் செவி சாய்த்தால் தூய ஆவியார் நம்மை புதுப்படைப்பாக மாற்றுவார்.
இயேசு ஏற்கனவே ஏராளமான அற்புதங்களைச் செய்திருந்தார். ஆனால் அது போதாது என்று தெரிகிறது. யூதர்கள் இன்னும் அதிகமாக விரும்பினார்கள். அவர்களின் அந்த ஆசை இதயத்தின் பிடிவாதத்திற்கும் நம்பிக்கையின்மைக்கும் தெளிவான அறிகுறியாகும். எனவே அவர்கள் விரும்பிய அடையாளத்தை இயேசு வெளிப்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் அவரும் அவர் ஆற்றிய வல்ல செயல்களுமே பெரிய அடையாளம்.
மேலும், அவரது துன்பமிகு மரணம், உயிர்ப்பு ஆகியவை மேலான அடையளங்களாக அமைய உள்ளநு. ‘யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார் (மத் 12:40) என்பது மிகப் பெரிய அடையாளம்.
இயேசுவை கடவுள் உயிர்த்தகழச் செய்தார் என உள்ளூர நம்மினால் (உரோ 10:9), ‘இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டால் இவ்வலகிற்கு அதுவே இன்று பெரிய அடையாளமாக மாறும். நாம்தான் இதற்குப் பொறுப்பு. தென்னாட்டு அரசி சாலமோனை நம்பினார், அவரைத் ஏதடி வந்தார். நினிவே மக்கள் யோனாவை நம்பினார்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்வோம்.
மேலும், இன்று, திருஅவைக்கு இயேசு தன்னையே உயிருள்ள அடையாளமாகத் தந்துள்ளார். ஆம், நாமே இயேசுவுக்கான அடையாளம். ஆனாலும், நம்மில் பலர் இன்னும் அடையாளங்களைத் தேடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம். இது நமது அறியாமை. நற்கருணையைவிட ஆண்டவர் வேறென்ன அடையாளத்தைத் தரக்கூடும்?
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, அன்றைய யூதர்களைப் போல் நானும் விண்ணக அடையாளங்களைத் தேடி அலையாமல், நீரே கடவுளின், எனது மீட்பின் அடையாளம் என்பதை ஏற்று, வாயார அறிக்கையிட்டு வாழ வரமருள்வீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
