‘அடுத்தவர் நலத்தை நினைப்போருக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்’| ஆர்.கே. சாமி | VeritasTamil
பொதுக்காலம் இரண்டாம் வாரம் – புதன்
எபிரேயர் 7: 1-3,15-17
மாற்கு 3: 1-6
‘அடுத்தவர் நலத்தை நினைப்போருக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்’
முதல் வாசகம்.
எபிரேயருக்கு எழுதிய கடிதத்தின் இன்றயைப் பகுதியில், தொடக்க நூலில் 14:17-20ல் குறிப்பிடப்பட்டுள்ள மெல்கிசேதேக்கைப் பற்றி அறிய வருகிறோம். மெல்கிசதேக்கு சாலேம் நகரின் அரசர்; உன்னத கடவுளின் குரு என்று விவரிக்கப்படுகிறார்.
மெல்கிசதேக்குக்கு ஒப்பான இயேசுவிற்கும் இடையே உள்ள குருத்துவத்தின் மேன்மை பற்றி ஆசிரியர் விவரிக்கிறார். அத்துடன், மோசேயின் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆரோனின் அல்லது லேவியர் வழிமரபில் வந்த குருமார்களுக்கும் மெல்கிசதேக்குக்கு இடையே வேறுபாடும் விவரிக்கப்படுகிறது.
மெல்கிசதேக்குவும் இயேசுவைப் போல் திருச்சட்டத்தின் கட்டளைப்படி மனித இயல்புக்கு ஏற்ப தோன்றிய குரு அல்ல என்பதும், மெல்கிசதேக்கு இயேசுவைப்போல், அழியாத வாழ்வின் வல்லமையால் குருவாகத் தோன்றினார் என்றும் இன்று அறிவுறுத்தப்படுகிறோம்.
ஆகவே, இயேசுவும் “மெல்கிசதேக்கின் முறைப்படி என்றென்றும் நிலைத்திருக்கும் குருவாக விளங்குகிறார் என்ற உண்மையை கடிதத்தின் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி.
ஓய்வுநாளில் பணி செய்தல் பற்றிய பிரச்சனை இன்றும் தொடர்கிறது. இன்று, இயேசு தொழுகைக்கூடம் வருகின்றார். அங்கு அவர் கை சூம்பிய மனிதரைக் கண்டு, அவரை குணப்படுத்துகிறார். ‘ஓய்வுநாளில் கை சூம்பிய மனிதரை குணப்படுத்துவதால் எதிர்ப்பு உண்டாகும் என்பது இயேசுவுக்குத் தெரியும். ஆனாலும் அவர் அதைப் பொருள்படுத்தாமல், கை சூம்பிய மனிதரை குணப்படுத்தினார் என்றால், நிச்சயமாகக் காரணம் இருந்திருக்கும்.
அங்கு சிலர், இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர் என்று மாற்கு குறிப்பிடுகிறார். இயேசு, அவரைக் குணப்படுத்துவதற்கு முன்பாக, மக்களைப் பார்த்து, ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று அவர் கேட்டார். இங்கே ஒரு சிந்தனைப் புரட்டி வெடிக்கிறது. உண்மை பேச அவர்களுக்குத் துணிவில்லை. மௌனம் சாதித்தனர்.
தொடர்ந்து, இயேசு அவரைக் குணப்படுத்தினார். இயேசுவுக்கு எதிரான சதி வேலைத்தொடங்கியது. உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர் என்றும் மாற்கு எழுதினார்.
சிந்தனைக்கு.
மெல்கிசதேக்கு என்பவர் சாலேம் நகரின் அரசர்; உன்னத கடவுளின் குரு என்று நாம் அறிய வருகிறோம். சாலேம் என்பதுதான் பிற்காலத்தில் ‘எரு + சாலேம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. இதனால், இது அமைதியின் நகர் ஆனது. இங்குதான் மெல்கிசதேக்கு எனும் குரு இயேசுவுக்கு முன்னோடியாக வாழ்ந்திருக்கிறார். இவர் நீதியின், அமைதியின் அரசர் என்று மறைநூலில் அறிய வருகிறோம்.
அனைத்துக்கும் மேலாக மெல்கிசதேக்குவின் தொடக்த்தையும் முடிவையும் பற்றிய குறிப்புகள் மறைநூலில் காணப்படவில்லை. அடுத்து இவர் ஆபிரகாமுக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார் என்றும், இவர் ‘உன்னத கடவுளின்’ அர்ச்சகராக இருந்தார் என்றும் குறிப்புகள் உள்ளன. (தொ.நூ 14:18) ஆகவே, மெல்கிசதேக்கு ஆரோனின் வழி மரபும் அல்ல. ஏனெனில் மெல்கிசதேக்கு காலத்தில் ஆரோனின் குருத்துவம் தோற்றுவிக்கப்படவில்லை. ஆரோனின் வழிமரபில் வந்த குருத்துவம் மெல்கிசதேக்குக்கும் இயேசுவுக்கும் இடையிலான ஒரு தற்காலிகக் குருத்துவம்.
இயேசுவும் அமைதியின் அரசராகவும், நீதியின் அரசராகவும், என்றுமுள அரசராவும், அப்பமும் திராட்சை இரசமும் ஆகியவற்றை காணிக்கைப் பொருள்களாகவும் கொண்ட தலைமை குருவாக உள்ளார்
இயேசு மெல்கிசெதேக்கின் முறைப்படி என்றும் குரு. அவருக்கு முடிவு இல்லை. அவரை அடியோடு அழிப்பதென்பது மடமை. எனவே, அவர் யாருக்கும் அஞ்சுபவர் அல்ல. ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதைவிட மனிதநேயத்தை மேலாகக் கொண்டவர்.
நமக்கு விதிமுறைகள் தேவை. ஆனால், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் காட்டிலும் தனிநபர்களின் முழு மனித நலனில் அக்கறை காட்டுவது, நமக்கான அடையாளம். இயேசுவின் சீடர்களாகிய நாம், சமூகத்திற்கு நல்லதைச் செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். இயேசுவைப் போல பணி செய்யவும், சேவை செய்யவும், அன்பு செய்யவும், அவருடைய சீடர்களாக அழைக்கப்பட்டுள்ளோம். இது எளிதானது அல்ல.
இயேசு கொண்டிருந்த இறைவாக்குப் பணி, குருத்துவப் பணி மற்றும் அரசப் பணியில் ஈடுபடவே, ‘நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்து விட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல’ என்று இயேசு நம்மை வேறுபடுத்திக் காட்டுகிறார். ஆகவே, இவ்வுலக வாழ்வில் நாம் பத்தோடு பதினொன்று அத்தோடு நானும் ஒன்று என்று வாழ இயலாது. நாம் பத்தோடு பதினொன்று அல்ல. நாம் தனித்து மிளிரும் விண்மீன் என்பதை மனதில் கொள்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, மற்றவர்களுக்காக என்னை கொடுக்க நான் தயாராக இருக்க என்னைத் திடப்படுத்துவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452