உலகப் பற்றை வெல்லும் மனோபலத்தை ஏற்போம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil
18 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 20ஆம் வாரம் – திங்கள்
நீதித்தலைவர்கள் 2: 11-19
மத்தேயு 19: 16-22
உலகப் பற்றை வெல்லும் மனோபலத்தை ஏற்போம்!
முதல் வாசகம்.
முழுமையான கீழ்ப்படிதல் கடவுளுடன் நெருக்கமான உறவுக்கு வழிவகுக்கிறது. முதல் வாசகம் யோசுவாவின் காலத்திற்குப் பிறகு இஸ்ரயேலர்களையும், அவர்களை மீண்டும் நேர்வழிக்குக் கொண்டு வர ஆண்டவரராம் கடவுள் நீதிபதிகளை எழுப்பும் வரை அவர்கள் கடவுளிடமிருந்து எவ்வாறு விலகிச் சென்றார்கள் என்பதையும் விவரிக்கிறது.
யோசுவாவின் மரணத்திற்குப் பிறகு, இஸ்ரவேலர் பல்வேறு கடவுள்களை வணங்கும் பூர்வீக கானானியர்களுடன் கலக்கத் தொடங்கினர். ஆண் கடவுள் ஆண்டவர்" என்று பொருள்படும் "பால்" என்று அழைக்கப்பட்டார். பெண் தெய்வம் "அஷ்டார்ட்" என்று அறியப்பட்டது, அதன் பன்மை "அஷ்டரோத்" ஆகும். இதனால், இஸ்யேலர் தங்களைக் காப்பாற்றிய கடவுளை மறக்கத்தொடங்கினர்.
இருப்பினும் அவர்களை நேர்வழிப்படுத்த கடவுள் "நீதித்தலைவர்களை’ அனுப்பினார். இஸ்ரயேல் மக்களை ஒடுக்குபவர்களை வீழ்த்த உதவுவதும், கடவுள் அவர்களைக் கவனித்துக் கொள்ளத் தயாராக இருப்பதைக் காண்பிப்பதும் நீதிபதிகளின் முதல் பணி என்று தெரிகிறது.
நற்செய்தி.
நற்செய்தியில், செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “போதகரே, நான் நலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
இயேசு அந்த இளைஞரிடம், “விரும்பினால் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடியும்” என்றார். அந்த இளைஞர் அவரிடம், “இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?” என்று வினவியபோது, இயேசு, “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார். ஏழைகளுக்குக் கொடும் என்று சொன்னதும், வருத்தத்தோடு திரும்பிச் சென்றதாக மத்தேயு குறிப்பிட்டுள்ளார்.
சிந்தனைக்கு.
"நீ நிலைவாழ்வை விரும்பினால், போய், உன்னிடம் உள்ளதை விற்று, ஏழைகளுக்குக் கொடு, அப்பொழுது பிறகு வந்து, என்னைப் பின்பற்று’ என்று பதில் கூறுகிறார். ஒன்றை அடைய ஒன்றை இழக்க்தான் வேண்டும். இங்கே, செல்வம் என்பது உலகப்பற்று என்று நாம் பொருள் கொள்ளலாம். உலகப் பற்றை அல்லது உலகம் சார்ந்த ஆசைகளில் நாட்டம் கொள்வோருக்கு விண்ணுலக நிலை வாழ்வு என்பது எட்டா கனியாகும்.
இதைத்தான் இயேசு, சுருக்கமாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையால்,
‘மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்; செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றுரைத்தார் (மத் 19:24) ஆனால், உலக மக்கள் மனதில் செல்வம்தான் எல்லாம். நற்செய்தியில் மத்தேயு குறிப்பிடும் இளைஞர், 'சேர்த்து வைத்த செல்வத்தை வைத்துக்கொண்டு இம்மை வாழ்வை அனைத்து சுகபோகங்களோடு மகிழ்ந்திருக்கலாம். ஏன் இத்தகைய எண்ணம்? பணத்தைக் கொண்டு இவ்வுலகில் பத்தும் செய்யலாம் அல்லவா?
செல்வம், அழகு, புகழ் மற்றும் இன்பம் ஆகியவைதான் முக்கியம் என்று நமக்குச் சொல்லப்படுகிறது அல்லது காட்டப்படுகிறது. இவை அனைத்தும் தன்னளவில் மோசமானவை அல்ல. ஆனால் அவை ஆண்டவராகிய இயேசுவுடனான நமது உறவிலிருந்தும், மற்றவர்களுடன் அன்பான கிறிஸ்தவ உறவிலிருந்தும் நம்மை விலக்கினால், அதுவே நிலைவாழ்வுக்கான பெரும் தடை. இது நமக்கான பெரும் சவால்,
உலகம் நமக்கு உயர்த்திக்காட்டும் பொய்யான தெய்வங்களான செல்வம், புகழ், அதிகாரம் அல்லது சுய இன்பங்கள் என எதுவாக இருந்தாலும், நாம் அவற்றை அடைய விழைக்கிறோம். இது நமது பலவீனம் என்கிறோம். மலேசியாவில் பெரும் செல்வதர்கள் பட்டியிலில் முதலிடம் வகித்தவர் டத்தோ ஆனந்த கிறிஷ்ணன் என்பவர். அவருடய இரு பிள்ளைகளில் ஒருவர் அனைத்தையும் துறந்து, புத்த சமய பிக்குவாக தன்னை அர்ப்பணித்துகொண்டார். தந்தை இறந்தும் அவர் சொத்தில் உரிமைக்கொண்டாடவில்லை. அவரது துறவறத்தை இன்றும் தொடர்கிறார். காவியுடை அணிந்து திரிகிறார்.
இவரே, உன்னத சீடர். 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் விண்ணரசுக்காக சொத்தை இழக்க மறுத்த அந்த இளையவர்விட பல மடங்கு உயர்ந்த பற்றற்ற ஓர் இளைஞரை இக்காலத்தல் நேரில் கண்டேன். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது உணமை என்றுணர்ந்தேன்.
நாம் ஆண்டவராகிய இயேசுவைப் பின்பற்றவும், எல்லாவற்றிற்கும் மேலாக அவரை நம்பியிருக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறோம். விண்ணரசை நோக்கிய நமது நம்மைச் சுற்றியுள்ள மக்களால் - செல்வம், புகழ், உடைமைகள் மற்றும் அதிகாரம் என்று அழைக்கப்படும் தெய்வங்களை - வணங்குபவர்களால் – நாம ஆளப்படுவது எளிது. ஆனால், உலகப்பற்று அற்றவர்களால் நாம் கவரப்படுவதுதான் சிரமம். இது ஒரு போராட்டம். வெற்றியும் தோல்வியும் நம் கையில்தான் உள்ளது.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உமது தூய ஆவியைத் தொடர்ந்து என்னில் பொழிந்தருளும், இதனால் நான் ஞானம், திடம் மற்றும் பொறுமை இவற்றின் வாயிலாக உலகப்பற்றை துறக்கும் மனோபலம் என்னை ஆட்கொளுவதாக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452