உண்மை சீடத்துவம், கடவுளோடும் பிறரோடும் உறவை வலுப்படுத்தும் | ஆர்.கே. சாமி | VeritasTamil

தவக்காலம் 5ஆம் வாரம் –வியாழன்
தொடக்க நூல் 17: 3-9
யோவான் 8: 51-59
உண்மை சீடத்துவம், கடவுளோடும் பிறரோடும் உறவை வலுப்படுத்தும்!
முதல் வாசகம்
இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தி, அவரது பெயரை ஆபிரகாம் என்று மாற்றுகிறார். இந்த உடன்படிக்கை உறவு கடவுளை ஆபிரகாமுடனும் அவருடைய சந்ததியினருடனும் பிணைக்கிறது. கடவுள் ஆபிரகாமின் கடவுளாக இருப்பார் என்றும், ஆபிரகாமுடன் தொடங்கும் உடன்படிக்கை உறவுக்கு உண்மையாக இருக்கும்படி கடவுள் பணிக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு ஆபிரகாமைப் பற்றியும், ஆபிரகாமுடன் இயேசு கொண்டிருந்த உறவைப் பற்றியும் பேசுகிறார். இதனால் யூதர்கள் பலர் கோபப்பட்டனர். இயேசு (யாவே) கடவுளால் அழைக்கப்பட்ட ஆபிரகாமைவிட மேலானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
அவர், ‘என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்’ என்று கூறியதை யூதர்காளல் ஏற்றக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், ஆபிரகாமும் இறைவாக்கினர்களும் இறந்து போனார்கள். ஆகவே, இயேசுவுக்குப் பேய் பிடித்துவிட்டது என்ற முடிவுக்கு வந்தனர். தொடர்ந்து, அவர் ‘என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள். ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப் போல நானும் பொய்யனாவேன்’ என்று கூறியதைக் கேட்டவர்கள் அவர் மீது சொல்லொன்னா கோபம் கொண்டனர்.
நிறைவாக, இயேசு அவர்களிடம், “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். இதைக் கேட்ட அவர்கள், இயேசு கடவுளை இகழ்கிறார் என்று, அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள் என்று யோவான் குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
ஒவ்வொரு மனிதரும் கடவுளுடனும் ஒருவரோடொருவரும் உறவுகொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் கடவுள் மனுக்குலத்தைப் படைத்தார். இயேசுவின் சிலுவையில்கூட, செங்குத்தான மரக்கட்டை கடவுளுடனான உறவையும், குறுக்காக உள்ள மரக்கட்டை பிறரோடு கொண்ட உறவையும் வெளிப்படுத்துவதாக அறிஞர்கள் கூறுவர். ஆகவே, ‘உறவை’ நீக்கிவிட்டால், சிலுவையும் வெறும் மரக்கட்டைதான்.
புனித யோவானின் நற்செய்தியின் இந்த எட்டாம் அதிகாரத்தில் மட்டும், இயேசு தன்னைப் பற்றி நான்கு முக்கிய விடயங்களைக் கூறுகிறார். முதலாவதாக, அவர் உலகத்தின் ஒளி என்று கூறுகிறார் (வச.12). இரண்டாவதாக, அவரது போதனையை ஏற்றுக்கொள்பவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்கிறார் (வச.31-32). மூன்றாவதாக, அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்பவர் ஒருபோதும் இறக்கமாட்டார் என்று உறுதியளிக்கிறார் (வச.51). நான்காவதாக, அவர் "நான் இருக்கிறேன்" என்ற இறை பெயரை ஏற்றுக்கொண்டு, அவர் ஆபிரகாமை விட மூத்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
மேற்கண்ட இயேசுவின் உறுதிபாட்டை கூர்ந்து கவனித்தால், நமக்கு கிறிஸ்து கடவுள் என்பது உண்மை என்பதும், அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பவர் ஒருபோதும் மரணத்தைக் காணமாட்டார் என்று நமக்கு வாக்குறுதி அளிக்க அவருக்கு உரிமை உண்டு என்பதும் புலப்படும். கடவுளால் மட்டுமே இவ்வளவு துணிகரமான வாக்குறுதியைச் செய்து பின்னர் அதை நிறைவேற்ற முடியும். எனவே இயேசுவின் இந்த வாக்குறுதியைப் பற்றி சிந்திக்க வேண்டும். இயேசு வெளிப்படுத்தியதைப்போல் மனுக்குலம் கடவுளுடனான உறவை முழுமையாக ஏற்றுக்கொண்டால், அனைத்தும் நலமாக இருக்கும்.
மோசே கடவுளைச் சந்தித்போது, கடவுள் மோசேயை நோக்கி, “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே” என்றார். (விப 3:14) ஆகவே, நம் கடவுள் என்றும் வாழும் கடவுள். இப்போது, நமக்குக் கிடைப்பது இந்த நிகழ்காலம் மட்டுமே, இந்த தருணத்தில்தான் கடவுள் நம்மைச் சந்திக்க வருகிறார். உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி அவரைக் கட்டி அரவணைக்க முற்படுவோம். பிறர் நலம் பேணுவோம். ஒருவரோடொருவரான உறவை சீர் செய்வோம்.
முதல் வாசகத்தில் வெளிப்பட்ட ஆபிரகாமுடன் தொடங்கும் உடன்படிக்கை உறவுக்கு உண்மையாகவும் சாட்சியாகவும் வாழ நாம் அழைக்கப்படுகிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, நான் கடந்த காலத்தை விட்டு, எதிர்காலத்தை எதிர்நோக்கி இந்த நொடி முதல் உமது வார்த்தையைக் கடைப்பிடித்து வாழ என்னை திடப்படுத்துவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
