ஆண்டவரின் திருபெயரால் அகிலம் வெல்வோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

22 மே 2024  

பொதுக்காலம் 7ஆம் வாரம் - புதன்

யாக்கோபு திருமுகம் 4: 13-17

மாற்கு 9: 38-40


முதல் வாசகம்.

நமது முதல் வாசகத்தில், திருத்தூதர் யாக்கோபு,  இயேசுவின் சீடர்களுக்கு ஓரு முக்கிய செய்தியை  நினைவூட்டுகிறார். அடுத்த நாள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே! நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள்’ என்கிறார்.  

ஆகவே, வாழ்க்கையை நமது விருப்பத்திற்குத் திட்டமிடாமல், ஆண்டவரின் திருவுளத்திற்கு ஏற்ப வாழ வேண்டும் என்கிறார்.  வீம்புக்கு ஒருவரையொருவர் போட்டாபோட்டியோடு,  தற்பெருமைக்கு இடம்கொடுத்து வாழ்வது தீமையானது என்றும், நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம் என்றும் எடுத்துரைக்கிறார்.


நற்செய்தி.

இது இயேசுவின் சீடர்களில் ஒருவரான யோவானுக்கும் இயேசுவுக்கும் இடையிலான உரையாடலை முன்வைக்கிறது.  

யோவான் இயேசுவை அணுகி, இயேசுவின் பெயரில் பிசாசுகளைத் துரத்திய ஒருவரை அவர் சந்தித்ததாக அறிவிக்கிறார். இருப்பினும், அந்த நபர் அவர்களின் உடனடி சீடர்களின் குழுவில் இல்லாதவர் என்றும், எனவே அவர்கள் அவரைத் தடுக்க முயன்றதாகவும்  கூறுகிறார். 

இயேசு அவருக்கு பதில் கூறும் வகையில், அவரைத் தடுக்க வேண்டாம் என்றும், "நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்" என்றும் அறிவுறுத்துகிறார். 


சிந்தனைக்கு.

நற்செய்தியில் இயேசு, ‘அவரைத் தடுக்க வேண்டாம் என்றும்,  "நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்’ என்று கூறியதை வைத்து நம்மில் பலர், பிரிந்த சகோதரர் சபைகளில் இணைவதை  இயேசு ஆதரிக்கிறார் என்று நியாயப்படுத்தி வாதிடுவதுண்டு. ஒருமுறை என்னை எனது பங்கில் ஒரு சகோதரர் இயேசுவின் கூற்றின்படி, பிரிந்த சகோதரர் சபையில் சேருவதை இயேசு தடுக்கவில்லையே என்றார்.  

நற்செய்தியில், "நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்’ என்று கூறிய இயேசு, யோவானிடம் ‘உண்மைதான், எல்லாம் ஒன்றுதான், நீங்களும் போய் அவரோடு சேர்ந்துகொள்ளுங்கள் என்று கூறவில்லை. அவர்களைத்  “தடுக்க வேண்டாம் என்றுதன் கூறினார். தனக்குரியவர்கள், தான் தேர்ந்துகொண்டவர்கள் தன்னோடு ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் இயேசு விரும்பினார், விரும்புகிறார் (யோவான் 17:21).  இயேசுவின் பெயரைப் பயன்படுத்துபவர்கள் எல்லாம் இயேசுவுக்குரியவர்கள் ஆகிவிட முடியாது.  ஏனெனில், அலகையும் அதன் ஏமாற்று வேளைக்கு, இயேசுவின் பெயரை பயன்படுத்துகிறது. 

நற்செய்தியில் இயேசு  பெயரால் பேய்களை ஒட்டிய அந்த ஒருவர் திருமுழுக்கு யோவானின் சீடராக இருக்கலாம் என்று ஒருசில விவிலிய அறிஞர்கள் கூறுகிறாரகள். ஏனெனில், இயேசவுக்கு முன்பாக,  மெசியா  வரவிருக்கிறார் என்றும், அவர் ஆற்றக்கூடிய வல்ல செயல்கள் குறித்தும்   திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களுக்குத் தெரிவித்திருக்கலாம்.   அதை அடிப்படையாகக் கொண்டு, நற்செய்தியில் சொல்லப்படுகின்ற ‘ஒருவர்’ இயேசுவின்  பெயரால் பேய்களை ஓட்டியிருக்கக் கூடும் என்பதும் ஏற்கக் கூடியதே. அது இயேசுஉக்கு முற்பட்ட காலம். நாம் இப்போது இயேசுவுக்கு பிற்பட்ட காலத்தில் வாழ்கிறோம். 

மற்றும் சில விவிலிய அறிஞர்கள், இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டிய அந்த ஒருவர்,   இயேசுவின்  மீது அளவற்ற நம்பிக்கைக் கொண்ட சீடர்களில்  ஒருவராக இருக்கலாம் என்கின்றனர்.   இந்த கருத்து மோதலை இன்றைய சூழலில் பார்த்தால் கத்தோலிக்கர் அல்லாத ஒருவரோடு  அன்று இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டியவரை ஒப்பிடலாம். 

பிரிந்த சபையினரோடு நட்பு கொண்டிருப்பது வேறு, அவர்களோடு இணைந்திருப்பது வேறு.  ஆம், பிரிந்த சபையினரோடு பகைமை கொண்டிருக்க வேண்டும் எற்று நம் திருஅவை போதிப்பதில்லை. முதல் வாசகத்தில் அறிந்ததைப்போல், கடவுளின் திருவுளத்திற்கு நாம் அடிபணிய வேண்டும். மனிதர் ஆயிரம் கூறலாம், அவரவர் விருப்பத்திற்குக் கருத்துரைக்கலாம், அனைத்திற்கும் ‘ஆமாம்’ என்று ஒப்புதல் தெரிவிப்பதில் ஆபத்து உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும். எல்லாம் ஒன்றுதான் என்றால், இயேசு அன்றே யோவானைப் பார்த்து ‘நீங்களும் அவரோடு இணைந்துகொள்ளுங்கள்’என்றிருப்பார்.

ஆனாலும், இன்றைய நற்செய்தியின் வழி, இயேசு நமக்கு அறிவுறுத்த விழைவது ‘ஒருவர் நல்லது செய்யும்போது அவர்மீது பொறாமைகொண்டு, அவரது செயலைத் தடுக்க நினைக்க வேண்டாம் என்பதாகும்.  ஆத்திச்சூடியில் ‘ஈவது விலக்கேல்’ என்று நாம் படித்ததுண்டு. இதற்கு, ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பதை தடுக்காதே என்று பொருள் கூறலாம்.

நிறைவாக, இன்று நமது திருஅவைக்குள்ளும் பங்குகளிலும்  நிறுத்தப்பட வேண்டிய உள் பிளவுகள் ஏராளம். இதற்கு ஒருவர் மற்றவரில் வெளிப்படுத்தும் பொறாமை முக்கிய காரணமாக உள்ளது.  ஒருவர் ஒருவருக்குத் தோள் கொடுப்போம். நாம் அனைவரும் இயேசுவின் திருவுடலில்  அங்கம் வகிக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம். கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு வழிவிடுவோம்.


இறைவேண்டல்.

ஆற்றல் மிக்க ஆண்டவரே,  உமது திருப்பெயரால்  உமது மக்களுக்கு நன்மைகள் செய்யும் வரத்தை எனக்கருள்வீராக. ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452