அஞ்சாதீர், கடவுள் கைக்கொடுப்பார்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

22 மார்ச்  2024                                                                                          

தவக்காலம் 5ஆம் வாரம் - வெள்ளி

எரேமியா 20: 10-13                                                                                      

யோவான் 10: 31-42

முதல் வாசகம் :

எரேமியா இறைவாக்கினர்  தனது சம காலத்தவர்களிடமிருந்து எதிர்ப்பையும் துன்புறுத்தலையும் எதிர்கொள்ளும் போது, அவர் கொண்டிருந்த உணர்வை இன்றைய முதல் வாசகம்  பிரதிபலிக்கிறது.

எரேமியா தன்னைச் சுற்றியுள்ளோர் அவருக்கு எதிராகக் கொண்ட முனுமுனுத்தலை கேட்கிறார்.  அவர்கள் ‘பழி சுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்’ என்று, அவருக்கு எதிராக வீண் பழி சுமத்த கிளம்புகிறார்கள்.  இவர்களில் பலர்  ஒரு காலத்தில் அவருடைய நண்பர்களாக இருந்தவர்கள். ஆனால் இப்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.  அவரை இந்த உலகைவிட்டு அனுப்பிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டினர்.

இருப்பினும், எரேமியா தனது கடவுள்  நம்பிக்கையில்  ஆறுதலையும் ஆற்றலையும் காண்கிறார். அவரைத் துன்புறுத்துபவர்களின் சதித்திட்டங்கள் கண்ணெதிரே இருந்தபோதிலும், ஆண்டவர்   வலிமைமிக்க வீரரைப் போல தன்னுடன் இருக்கிறார் என்று அவர் நம்பினார்.  கடவுள் அவரைத் துன்புறுத்துபவர்களைத்  தோல்வியடையச் செய்வார் என்ற கடவுளுடனான  உறவில் நிலைத்திருந்தார்,    

துன்மார்க்கரின் அதிகாரத்திலிருந்து ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களையும் காப்பாற்றியதற்காக இறைவனைப் போற்றுவதற்கும் நன்றி செலுத்துவதற்கும் ஒரு அழைப்புடன் வாசகம் முடிவடைகிறது. கடவுளின் நீதி மற்றும் விடுதலையில் எரேமியாவின் அசைக்க முடியாத நம்பிக்கையை வாசகம் மேலும்  எடுத்துரைக்கிறது.  


நற்செய்தி :

இன்றைய  நற்செய்தி, இயேசுவுக்கும் யூதத் தலைவர்களுக்குமிடையிலான நேர்முக மோதல் ஒன்றை சித்தரிக்கிறது.  

1.இயேசு மீது கல்லெறிய யூதர்கள் கற்களை  எடுக்கிறார்கள்: 

இந்த நடவடிக்கை இயேசுவை கொல்ல வேண்டும் எனும்  அவர்களின் நோக்கத்தைக் குறிக்கிறது. இயேசுவுக்கு  எதிரான அவதூறு குற்றச்சாட்டு இதற்கு காரணமாக இருந்தது.

2.அவருடைய நற்செயல்களைப் பற்றி இயேசுவின் பதில்: 

இயேசு தனது தெய்வீக அதிகாரத்தை வெளிப்படுத்தக்கூடிய  பல நற்செயல்களைச் செய்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். அதை அவர் தந்தையின் சொற்படி அவர்கள் முன் செய்து காட்டியதாகவும்  கூறுகிறார். 
 
3.யூதர்களின் அவதூறு குற்றச்சாட்டு: 

யூதத் தலைவர்கள் இயேசு தன்னை கடவுளுக்குச் சமமானவர் என்று இறை நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். யூத பாரம்பரியத்தில், கடவுள் அல்லது கடவுளுக்குச் சமமானவர் என்று கூறுவது கடுமையான குற்றமாகக் கருதப்பட்டது.

4.குற்றச்சாட்டிற்கு இயேசுவின் பதில்: 

நீதிபதிகள் அல்லது ஆட்சியாளர்கள் "தெய்வங்கள்" என்று கூறும் திருப்பாடல்  82:6-உள்ள  வசனத்தை மேற்கோள் காட்டி இயேசு பதிலளிக்கிறார். கடவுளின் வார்த்தையைப் பெற்றுக்கொண்டவல்கள்  ‘தெய்வங்கள்’  என்று அழைக்கப்படுப்போது,  தந்தையிடமிருந்து புறப்பட்டு வந்தவரை  ‘கடவுளின் மகன்’  என்று கூறுவது எவ்வளவு பொருத்தமானது என்று அவர்களோடு  வாதிடுகிறார்.

5.இயேசுவின் செயல்களின் முக்கியத்துவம்: 

அவருடைய வார்த்தைகளை அவர்கள் நம்பவில்லை என்றாலும், குறைந்தது  அவருடைய செயல்களையாவது அவர்கள் நம்ப வேண்டும் என்று இயேசு வலியுறுத்துகிறார்.

6.இயேசுவைக் கைது செய்ய முயற்சி: 

யூதத் தலைவர்கள் அவரை மீண்டும் கைது செய்ய முயற்சிக்கிறார்கள், ஆனால் அவர் அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்கிறார்.
 

சிந்தனைக்கு :

இன்றைய வாசகங்கள் அடுத்து வரக்கூடிய   நமது  புனித வாரப் பயணத்திற்கான  தயாரிப்பாக உள்ளன.  இயேசுவின்  பாடுகள் மற்றும் அவரது மரணம் ஆகியவற்றில் உணர்வுப் பூர்வமாகப் பங்கெடுக்க நமக்கான முன் தயாரிப்பாக வாசங்கள் அமைந்துள்ளன.   நெருங்கிய நண்பர்களால் அவர் காட்டிக் கொடுக்கப்படுவதற்கும்,  எதிரிகளிடம்  ஒப்படைக்கப்படுவதற்கும், அவருடைய நற்செய்தியை ஏற்காதவர்களின் கைகளில் அவர் துன்புறவும்  இயேசுவின் நேரம் நெருங்கி வருகிறது என்பது தெளிவாகிறது. 

ஆனாலும், தந்தையாகிய கடவுளுடன் நெருங்கிய உறவை வெளிப்படுத்துவதற்கு இயேசு தயங்கவில்லை.   கடவுள் தம் மக்களை  எவ்வளவு அன்பு செய்கிறார் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார் என்பதை அவர்கள்  புரிந்து கொள்ள வேண்டும் என்று தந்தையாம் கடவுள்  விரும்புவதை  வலியுறுத்துகிறார் இயேசு. 

ஆயினும்கூட, அவர்களின் எதிர்ப்பைக் கண்டு இயேசி  அஞ்சி ஓடி பதுங்கவில்லை.  சில சமயங்களில் நம்மில் பெரும்பாலானவர்கள்  பச்சோந்திகளாகிறோம். கடவுளுடனான உறவில் நிலைத்திருப்பதில்லை. ஞாயிறுதோறும் தவறாமல் திருப்பலிக்குப் போவதால் நாம் மற்றவர்களைவிட நல்லவர்கள் என்ற எண்ணத்தில் மூழ்கிவிடுகிறோம். இயேசுவின்  நற்செய்தியுடன் நம்மையும் நம் எண்ணங்களையும் இணைத்துக்கொள்வதற்குப் பதிலாக, நம்முடைய சுய விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வை அமைத்துக்கொள்ள முற்படுகிறோம்.
 

முதல் வாசகத்தில்,  எரேமியா தனது நம்பிக்கையில்  கடவுளின் ஆறுதலையும் ஆற்றலையும் கண்டார். அவரைத் துன்புறுத்துபவர்களின் சதித்திட்டங்கள் கண்ணெதிரே இருந்தபோதிலும், ஆண்டவர்   வலிமைமிக்க வீரரைப் போல தன்னுடன் இருக்கிறார் என்று அவர் நம்பினார். கடவுள் அவருக்குத் துணை நின்றார். 

இதே கருத்தைத்தான் இயேசுவும் வலியுறுத்துகிறார். கடவுளோடு எப்போதும் ஒன்றித்திருப்பவர்களே அவரது நம்பிக்கைக்குரிய மக்களாக இருக்க முடியும். எவையெல்லாம் முக்கியம் என கருதுகிறோமோ அவற்றுக்கு ஒதுக்க நமக்கு நேரம் நிச்சயம் இருக்கும் போது, கடவுளோடு கூடிய உறவு முக்கியம் என்று நினைத்தால், அவரோடான  உறவை நிலைநிறுத்த வேண்டும். இதுவே, ஆண்டவரின் எதிர்ப்பாரப்பு. 


இறைவேண்டல் :

நீங்கள்  என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது என்றுரைத்த ஆண்டவரே, எந்நாளும் உமதன்பில் நான் ஒன்றித்திருக்க எனக்கு உதவிப்புரிவீராக. ஆமென்.

 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments

David (not verified), Mar 21 2024 - 6:11pm
Let us prepare for our Holy Week
ELIZABETH (not verified), Mar 22 2024 - 6:22am
அருமையான பதிப்பு.எனக்கு நல்ல தெளிவை தந்தது.