தாழ்ச்சியில் மாட்சியுறும் சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | VeriatsTamil

9 மார்ச்  2024                                                                                          

தவக்காலம் 3ஆம் வாரம் - சனி

ஓசேயா 6: 1-6                                                                                                    

லூக்கா   18: 9-14

முதல் வாசகம்

இந்த வாசகப் பகுதி,  மனந்திரும்புதல், மன்னிப்பு மற்றும் கடவுளுடன்  ஆழமான உறவுக்கான ஏக்கத்தைப்  பிரதிபலிக்கின்றது.

ஆண்டவரிடம்  திரும்ப அழைப்பு: 

இறைவாக்கினர் ஓசேயா மக்களைக் குறிப்பாக, எப்ராயிம் மற்றும் யூதாவின் வழிமரபினரை கடவுளிடம் திரும்புமாறு வேண்டுகிறார். அவர்கள் பல்வேறு  சவால்கள் மற்றும் துன்பங்களை எதிர்கொண்டபோதும், கடவுள் அளிக்கவுள்ள விடுதலையிலும் மறுசீரமைப்பிலும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டுகிறார். மேலும்  ஓசேயா இஸ்ரயேல் மக்களின் போலித்தனமான இரட்டை வாழ்வை  வெட்ட வெளிச்சமாக்குகின்றார். 

ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்’ என்று இஸ்ரயேல் மக்களுக்கு அழைப்பு விடுக்க  அவர்களும் ஓசேயாவின்  அழைப்பினை ஏற்று ஆண்டவரிடம் திரும்பி வந்தார்கள். ஆனால் அது உண்மையான மனம் திரும்புதலாக இல்லாமல், போலியாக  இருந்தது. அவர்களுடைய இறையன்பு காலை நேர மேகம் போன்றும் கதிரவனைக் கண்ட பனிபோன்றும் நிலையற்றதாய் இருக்கக் கண்டார். அவர்களில் உண்மையான மனமாற்றம் காணப்படவில்லை. இறைவன் பலியை அல்ல இரக்கத்தையும் எரிபலிகளை விட தன்னை உண்மையாக அன்பு செய்தலையே  விரும்புகின்றார் என்று போதிக்கலானார்.

மனந்திரும்பினால், கடவுள் அவர்களைக் கைவிடமாட்டார் என்றும்,  இறுதியில் அவர்களின் காயங்களைக் குணப்படுத்துவார் என்ற நம்பிக்கையையும் ஓசேயா அளிக்கிறார்.


நற்செய்தி : 

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, இறைவனிடம் எத்தகைய மனநிலையோடு இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பதை  ஓர் உவமையின் வாயிலாக எடுத்துரைக்கிறார். இதை  பரிசேயர்- வரிதண்டுபவர் உவமை என்கிறோம்.
கடவுள் நம்மை படைத்தாள்பவர். அவரின் முன் நமது இறுமாப்பு எடுபடாது. கடவுள் அன்பாய் இருக்கிறார். அவர் நம்மீது தயவுகாட்டுகிறார். எனவே, கடவுள் முன் நின்று இறைவேண்டல் செய்பவர்   தன்னைத் தாழ்த்த வேண்டும்; ஆனால்,யு உவமையில் வரும் பரிசேயரின் இறைவேண்டலில் தாழ்ச்சி இல்லை, இறுமாப்பு வெளிப்பட்டது.

அந்த பரிசேயர் இறைவனுக்கு முன்பாக தன்னைப் பற்றித் தம்பட்டம் அடித்துக்கொண்டு,  அதே இறை சந்நிதியில் சற்று தொலைவில் இருந்து தன்னைத் தாழ்த்தி கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருந்த இரண்டாவது நபரான வரிதண்டுபவரைப் பற்றி,  கடவுளிடமே ஏளனமாகக் குறைகூறிக்கொண்டு இறைவேண்டலில் ஈடுபடுகிறார். 

வரிதண்டுபவரோ,  இறைவனிடம் வேண்டுகின்றபொழுது, வானத்தை அண்ணார்ந்து பார்க்கக்கூடத் துணியாமல், தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே! பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்று சொல்லி உருக்கமாக மன்றாடுகின்றார்.


சிந்தனைக்கு:

இந்த வாசகங்களை வாசிக்கும் போது, நமது சிந்தனையில் நிழலாடும் ஒரு சொல், ‘தாழ்ச்சி'. ‘ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்’ (யாக்கோபு 4:10)  என்று  வாசிக்கிறோம். தன்னைத் தானே தாழ்த்திக்கொள்பவர்கள் உயர்த்தபடுவர் என்பதுதான் நமக்கான படிப்பினை. 

ஆண்டவர் முன்பாக  நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளும்போது,  அவரது தயவுக்கு வழி பிறக்கும். “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்கா 1:38) என்று தன்னை ஓர் அடிமையாக கடவுளுக்கு அளித்த அன்னை மரியா கடவுளின் தயவைப் பெற்றார்.  அத்துடன், ‘தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்’ (சீஞா 35:17) என்று  சீராக்கின் ஞானநூலில் வாசிக்கிறோம். 

இறைவேண்டலில் ஆனவமும், இறுமாப்பும் பயன் தராது. ஆண்டவர்தான்  என்றும் உலகத்தின் முதலாளி, நாமோ் அவரது தொழிலாளி. முதலாளியான இயேசுவும் இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, சீடர்களின் பாதங்களைக் கழுவினார். 

முதல் வாசகத்தில், இஸ்ரயேலர்களின் இறை உறவில்  போலித்தனம் இருந்ததை ஓசேயா சுட்டிக்காட்டி, மனந்திரும்புதலுக்கு அழைப்பு விடுத்தார்.  அதே அழைப்பு இன்று நமக்கும் விடுக்கப்படுகிறது.

அடுத்து, தாழ்ச்சியுடன்  இருப்பதென்பது கடவுள் நமக்குக் கொடுத்த  திறமைகள் மற்றும் திறன்களை உணர்ந்துகொள்வதோடு,  அவற்றை மிகப் பணிவோடு இறைமக்களின் இறை உறவுக்கும் நல்வாழ்வுக்கும் பயன்படுத்துவதாகும். நாம் பெற்ற   அனைத்து ஆசீர்வாதங்களையும் கொண்டு, நம்மில் உள்ள சிறந்ததை வெளிக்கொணர்ந்து, பிறரோடு பகிர்தலே நமது தாழ்ச்சியின் வெளிப்பாடு.  

இக்காலத்தில், நாம் ஆண்டுதோறும் பங்குகளில்  பல்வேறு திருவிழாக்களைக் கொண்டாடலாம். அவற்றில் நமது  ஆடம்பரம், அகந்தை,  ஆனவம், முன்னுரிமை மற்றும்  பகட்டு மேலோங்கி இருக்குமேயானால், அக்கொண்டாடங்களால் பயன் ஏதும் ஏற்படப்போவதில்லை. 

“எனது பெயரைப் போற்றிடும் என் மக்கள் சிறுமையுற்று, தங்கள் பாவங்களிலிருந்து மனம் வருந்தி, இரந்து மன்றாடி, என் திருமுகத்தை நாடினால், வானகத்திலிருந்து அவர்களது மன்றாட்டுகளைக் கேட்டு அவர்கள் பாவங்களை மன்னிப்பேன்; அவர்களது நாட்டுக்கு நலன் அளிப்பேன்” (2 குறி 7:14) என்கிறார் கடவுள், 

எனவே,   நாம் இறைவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்திக்கொண்டு வேண்டுவோம். அதன்வழியாக இறைவனின் தயவையும், இரக்கத்தையும்  நிறைவாகப் பெற முன்வருவோம். 


இறைவண்டல் :

தாழ்ச்சியின் அன்புருவாகிய ஆண்டவரே, என்னில் தோன்றி மறையும் இறுமாப்பும் அகந்தையும் முற்றிலும் என்னை விட்டகலவும், நீர் உணர்த்தும் தாழ்ச்சியை அணிகலனாகக் கொள்ளவும் எனக்குத் தயைப்புரிவீராக. ஆமென்.


 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452