இறைவேண்டலில் நேர்மையே, இறைவேண்டலின் வலிமை! | ஆர்.கே. சாமி | VeriatsTamil

20 பிப்ரவரி  2024,                                                                                          

தவக்காலம் முதல் வாரம் -செவ்வாய்

எசாயா 55: 10-11                                                                      

மத்தேயு  6: 7-15 

முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகப் பகுதியானது,  இறைவார்த்தையின்  ஆற்றலையும்  செயல்திறனையும் வெளிப்படுத்தும் ஓர் உருவகமாக உள்ளது. கடவுள் அவரது படைப்பைக் கொண்டு அவரது வார்த்தையின் ஆற்றலை வெளிப்படுத்துகிறார். 
அவர்  தமது  வார்த்தையை வானிலிருந்து இறங்கி வரும் மழை மற்றும் பனியின் பயன்பாட்டுக்கு  ஒப்பிடுகிறார், 

மழையும் பனியும் பூமிக்குப் பலன் தராமல்  வானத்தை நோக்கிச் செல்லாதது போல, கடவுளுடைய வார்த்தை வெறுமையாகவோ அல்லது பயனற்றதாகவோ இருக்காது. அது என்ன செய்ய வேண்டுமோ அதை நிறைவேற்றும் என்பதை இந்த உருவகத்தின் வழியாக இறைமக்களுக்கு எளிதில் புரியும்படி எடுத்துரைக்கிறார் கடவுள்.


நற்செய்தி.
  

இன்றைய நற்செய்திப் பகுதி, இயேசு தம்  சீடர்களுக்கு, எவ்வாறு அவர்களின் இறைவேண்டல் அமைய வேண்டும் என்பதற்கு, முன்மொழிந்த ஓர் எடுத்துக்காட்டு இறைவேண்டலைக் கொண்டுள்ளது. வழக்கமாக, இதை ‘ஆண்டவரின் இறைவேண்டல்' என்போம.  இவரது அறிவுறுத்தலன்படி, முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, நமது இறைவேண்டலில் வெற்று வார்த்தைகளைத் தவிர்ப்பதாகும்.

இறைவேண்டலை அழகுப்படுத்துவதோ, அதில் நமது மொழித்திறனை வெளிப்படுத்துவதோ முதன்மையான நோக்கமாக இருப்பதை அகற்ற வேண்டும். இவ்வாறு ஊர் மெச்ச இறைவேண்டல் செய்வதால் கடவுள் மயங்கிவிடமாட்டார் என்பதும், வார்த்தைகளின் எண்ணிக்கையால் கடவுள் ஒருபோதும் ஈர்க்கப்படுவதில்லை என்பதும் தெளிவாகிறது. 


சிந்தனைக்கு.

இறைவேண்டலில் நேர்மையே இன்றியமையாதது என்பதை இயேசு தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார். நேர்மையான இறைவேண்டலுக்கு ஒரு எடுத்துக்காட்டையும் சொல்லிக்கொடுக்கிறார்.  

மேலும், தந்தையாம் கடவுள் நமது  தேவைகளை நன்கு அறிவார் என்பதை இயேசு சீடர்களுக்கு  நினைவூட்டுகிறார். இதுபோன்ற ஓர் இறைவேண்டலை இதுவரை இவ்வுலகில் தோன்றிய எந்த மகானும் தந்ததில்லை.  இது ஒரு பொதுவுடமை கொள்கையைக் கொண்ட இறைவேண்டல். 

முதலில் நம் அனைவருக்கும் தந்தை ஒருவர் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். எனவே, நம்மில் எவரும் வேற்றுமை பாராட்ட இயலாது. இங்கே பேதங்களுக்கு இடமில்லை. உலகில் பல இனங்கள், பல மொழிகள் பேசுவோர், பல பண்பாடுகளைக் கொண்டோர் இருக்கலாம். ஆனால், மூவொரு இறைவன் பெயரில் திருமுழுக்குப் பெற்றவர் யாராகிலும் அனைவரும்  சகோதர சகோதரிகள். இது உலகில் இயேசு விதைத்த மாபெரும் புரட்சி என்றால் மிகையாகாது.  

நமது உள்ளத்தில் அலகையின் ஆட்சி அல்ல, மாறாக என்றுமுள கடவுளின் நீதி, நேர்மை மற்றும் அமைதி நிறைந்த ஆட்சி நிலவ வேண்டும் என மன்றாட இயேசு பணிக்கிறார். அத்துடன், ‘எல்லா மனிதரும் மீட்புப் பெற வேண்டும்' ( 1திமொ 2:4) என்பதே அவரது திருவுளம் என்பதை,  நிறைவேற்றும் மக்களாக நாம் வாழ வழிகாட்டுகிறார்.  பேராசை என்பது அலகையின் தூண்டுதல். ஆகவே, ஒவ்வொரு நாள் உணவுக்காக மட்டும் மன்றாட வேண்டும் என்பது அடிப்படை படிப்பினையாக இயேசு முன்வைக்கிறார். இதனால், இவ்வுலகின் செல்வங்கள் சுரண்டப்படாமல், பதுக்கப்படாமல் ஏழைகளுக்கும் ஒருவேளை உணவு கிடைக்கும் என்ற ஆழ்ந்த தந்துவம் இதில் அடங்கியுள்ளதை உணராலம். 

எளிமையான சொற்களில், "எங்கள் தந்தையே" என்று கூறும்போது, நாம் தனியாக மன்றாடவில்ல  என்பதை நாம் ஏற்க வேண்டும். "எங்கள் தந்தையே" என்று   நாம்  தனியாகச் சொன்னாலும், அது ஒரு கூட்டு இறைவேண்டலாகத்தான் வெளிப்படுகிறது.   கடவுளை ‘எங்கள் தந்தையே' என்றும் அழைக்கும் நாம் ஒவ்வொருவரும் இறைமக்கள்  சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை வலியுறுத்துகிறது. இயேசு கற்றுத் தந்த இந்த இறைவேண்டலுக்கு இணையான  இறைவேண்டல் வேறொன்று  உலகில் இல்லை. 
 
இயேசு கற்றுத்தந்த இறைவேண்டலில், நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம்  மன்னிப்பு. மன்னிப்பின் முக்கியத்துவத்தை இயேசு வலியுறுத்துகிறார். நாம் கடவுளிடமிருந்து பெறும் மன்னிப்பை மற்றவர்களை மன்னிக்கும் விருப்பத்துடன்   இணைக்கிறார். முக்கியமாக, நாம்  மற்றவர்களை மன்னித்தால், கடவுள் நம்மை மன்னிப்பார் என்பது ஒரு நிரந்தர நிபந்தனையாக வெளிப்படுகிறது.  உண்மையான மன்னிப்பு யாதெனில், ‘நம் எதிரி  என்னை மன்னித்துவிடு’ என்று சொல்வதற்கு முன்னால், ‘உன்னை மன்னித்துவிட்டேன்' என்று நாம் சொல்வதில்தான்  மேலோங்கி நிற்கும். இத்தவக்காலத்தில் நமக்கான முக்கிய நினைவுறுத்தல் இது. 

நிறைவாக, அலகை இவ்வுலகில் அலைமோதிக்கொண்டிருக்கிறான். அலைகள் போன்று நமது ஆசைகளும்  ஓயாதிருக்கையில், நம்மை வீழ்த்த தகுந்த நேரத்ததுக்காகக் காத்திருக்கிறான்.   நமது சொந்த ஆற்றலால் அவனை வீழ்த்துவது கடினம். எனவே, சோதனை மற்றும் தீமையிலிருந்து நமக்கு ப் பாதுகாப்பைத் தேடுவதற்கு தந்தையிடம் மன்றாட அழைக்கிறார். ஏனெனில் அவரே நமது கேடயமும், அரணுமாக உள்ளார். 

ஆகவே, முதலில் கடவுளுக்குரியப் போற்றுதலையும் வாழ்த்தையும் செலுத்த வேண்டும். நமக்கான அவருடைய திட்டம் நம்மில் நிறைவேற இடமளிக்க வேண்டும். அதன் பின்னர்   நாம் நமது தேவைகளுக்காவும் பாதுகாப்புக்காகவும் இறைஞ்ச வேண்டும்.  

இயேசு எவ்வாறு இறை வேண்டல் செய்ய வேண்டும், எவ்வாறு இறைவேண்டல் செய்யக்கூடாது என்று இன்று  கற்பித்துள்ளார். (மத்தேயு 6:5-14). பலர் அறிய, நீண்ட நேரம் இறைவேண்டல் செய்தால்தான் ‘பக்திமான்’ என்று பொருள்படும் என்பது தவறு. நேர்மையான இறைவேண்டலுக்கு  பலன் உறுதி.

முதல் வாசகத்தில், இறைவார்த்தையின் இன்றியமையாத் தன்மையை  மழை,  பனி ஆகிய இரண்டையும் கொண்டு கடவுள் வெளிப்படுத்தினார். மழையும், பனியும் மனிதால் உண்டாக்கப்படுவதல்ல. அது இயலாதக் காரியம். அவ்வாறே, இறைவார்த்தையும். அது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என்பது உணரப்பட வேண்டும். நமது வார்த்தை அல்ல, இறைவார்த்தையே வலிமைமிக்கது. நமது ஆட்சியல்ல, நம்மில் இறையாட்சிக்கு மன்றாடுவோம். நாம் மன்னிக்கப்பட பிறரை மன்னிப்போம். 


இறைவேண்டல்.


இறைவேண்டல் செய்ய எங்களுக்குக் கற்றுத் தந்த அன்பு இயேசுவே,  உம்மைப் போல தந்தையின் விருப்பத்தின்படி வாழ எனக்கு துணைபுரிவீராக.  ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452