தூய ஆவியார் அருளிய ஞானம் நம்மில் ஒளிரட்டும் | ஆர்.கே. சாமி | VeritasTamil

7 பிப்ரவரி 2024
பொதுக்காலம் 5ஆம் வாரம் - புதன்
முதல் அரசர் 10: 1-10              
மாற்கு 7: 14-23
    

தூய ஆவியார் அருளிய ஞானம் நம்மில் ஒளிரட்டும்.


முதல் வாசகம்.

சாலமோன் ஒரு தலைச்சிறந்த ஞானி என்ற புகழ் அவருடைய ஆட்சி காலத்தில்  உலகம் முழுவதும் பரவியது. சாலமோனின் ஞானத்தைப் பற்றி பலர் கூறக் கேள்விப்பட  சேபா நாட்டு அரசி அவரது ஞானத்தின் ஆழத்தைச்  சோதித்துப் பார்க்கக் கடினமான கேள்விகளுடன் நேரில் வருகிறார்.  

அவர் வெறுங்கையுடன்  வராமல், அவரது  பரிவாரங்களோடும், நறுமணப் பொருள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை உடன் கொண்டு வந்தார்.  அரண்மனையில்,  சாலமோனின் ஞானத்தின் ஆழத்தை நேரில் கண்டறிந்த அரசி, சாலமோனின் ஞானத்தைப்பற்றி  அவர் கேள்விப்பட்டதைவிட பன்மடங்கு ஞானம் சாலமோனிடம் இருந்ததைக் கண்டுணர்ந்து வியப்புறுகிறார்.  

இதனிமித்தம், சாலமோனின்  மனைவியர், பணியாளர், மற்றும் அவர்மீது பரிவு கொண்டு அவரை இஸ்ரயேலின் அரசராக ஏற்படுத்திய  கடவுளையும்  போற்றிப் புகழ்கிறார். 


நற்செய்தி


இன்றைய நற்செய்தியில் ஒரு மனிதரை உண்மையில் எது தூய்மைப்படுத்துகிறது அல்லது  தீட்டுப்படுத்துகிறது  என்பதை தெளிவுப்படுத்துகிறார் இயேசு.   யூதர்கள் கடைப்பிடித்து வந்த  திருச்சட்டத்தில் எவை உண்ணக்கூடிவை, எவை உண்ணத்தகாதவை என்பதன் அடிப்படையில் அவரது போதனை அமைக்கிறது. இயேசு, இங்கே உண்ணும் உணவு குறித்த யூதர்களின்  திருச்சட்டத்தைப் புரட்டிப்போடுகிறார் என்றால் மிகையாகாது. 

ஆம்,   வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை என்றும், மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியவை என்றும் விளக்கி,  கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்  என்று அறிவுறுத்துகிறார்.   முதலில் இந்த படிப்பினையை அவரது சீடர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்’ 


சிந்தனைக்கு.


‘ஆண்டவர் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்; அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்; அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது’ (திபா 111:10) என்று திருப்பாடலில் வாசிக்கிறோம்.  இதே ஞானத்தை நமக்கும் வழங்கியுள்ளார் தூய ஆவியார். நமக்கான அவரது கொடைகளை வரிசைப்படுத்தும்போது, ஞானமே முதலாவதாக உள்ளது (எசாயா 11:2-3). ஆகவே, சாலமோனைப்போல ஞானத்தை சிறப்பு கொடையாகப் பெற்றுள்ள  நமது நம்பிக்கை மற்றும் சாட்சிய வாழ்வானது, இதர மக்களினும் வேறுபட்டதாக இருக்க வேண்டும். பத்தோடு பதினொன்று என்பதல்ல கிறிஸ்தவம்.

இவ்வுலகில் வாழ்ந்தாலும், இவ்வுலகத்தைச் சாராத மக்கள் நாம். இத்தகைய வேறுபட்ட வாழ்க்கை வாழ்வதற்கு இறைஞானமே நமக்கு அருளப்பட்டுள்ள சிறந்த கொடை.  

‘ஞானம்’ எனும் உயர்ந்தக் கொடையைப் பெற்றுள்ள நாம், நமது சொல், செயல் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.  நமது உள்ளத்திலிருந்து  வாய் வழியாக வெளி வருபவையே  நம்மை தீட்டுப் படுத்துகின்றன என்கிறார் ஆண்டவர்.  பல நாள் நட்பு பகையாக மாறுவதற்கும், உறவுகள் பிரிந்து பகைவர்களாக  வாழ்வதற்கும் கடினச் சொற்களே காரணமாக உள்ளன.  

இதையே திருவள்ளுவர், ‘சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். (குறள்- 200) என்று   அறத்துப்பாலில்   கூறியுள்ளார். மனக்கசப்பையும், வெறுப்பையும், பகைமையையும்  மூட்டும் பயனற்ற சொற்கள் நம் வாயிலிருந்து வெளிவராமலிருக்க நாவடக்கம் மிகவும் தேவை. 

அடுத்து, கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் ‘சைவம்', ‘அசைவம்’ என்றெல்லாம் உணவு வகைகைளைப் பிரித்துப் பார்த்து உண்ண அறிந்துள்ளோம்.   இவ்வாறு உண்பதில் பெருமை கொள்கிறோம்.  ஆனால் இயேசு இங்கே ஒரு புரட்சிக்கு வழிவகுக்கிறார்.  

''எல்லா உணவுப் பொருள்களும் தூயன'' (மாற் 7:19) என்று  இயேசு ஒரு முடிவான போதனையைத் தருகிறார். நமக்குத்  தீட்டு என்பது உணவில் அல்ல, மாறாக நமது உள்ளத்திலிருந்து தோன்றும் தீய எண்ணங்கள் தான் என்பதை   உணர்ந்து திருந்த வேண்டும்.  எண்ணங்களை வெளிப்படுத்தும் நமது  உள்ளத்தின் தூய்மை காக்கப்பட வேண்டும். 

 
இவ்வாறு உணர்ந்து திருந்துவதற்குக் கடவுள் அருளிய ஞானம் இன்றியமையாதது. கடவுளின் ஞானம்  நம்மில்  இருக்கும்போது நாம் அழகாகத்  தெரிவோம். நமது சொல், நடத்தை மேன்மையானதாக இருக்கும். சேபா அரசி சாலமோனின் அரண்மணை மக்களைப் போற்றியதுபோல நாமும் சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படுவோம். நமது சொல்லும் செயலும் சமூகத்தில் நமக்கு நன்மதிப்பைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.


இறைவேண்டல்.


உள்ளத் தூய்மையின் மேன்மையை எடுத்துரைத்த ஆண்டவரே, உலகம் சாராத உம் சீடராக வாழ,  தூய எண்ணத்தால் எனது சொல், செயல் அனைத்தும் நீர் தந்த ஞானத்தின் வெளிப்பாடாக இருக்க தூய ஆவியார் எனக்குத் துணைபுரிவீராக. ஆமென். 


   

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452