ஆயன் குரலுக்கு அடிபணிவீர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

22 ஏப்ரல் 2024                                                                                          

பாஸ்கா 4 ஆம் வாரம் - திங்கள்

தி. பணிகள்   11: 1-18                                 

யோவான்  10: 1-10

முதல் வாசகம்.

இயேசுவின் சீடர்களில் ஒருவரான பேதுரு, ஏன் புறவினத்தாரருக்கு  நற்செய்திப் போதித்தார்    என்பதை மற்ற நம்பிக்கையாளர்களுக்கு விளக்கினார். இது தொடக்கக் கால திருஅவை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைகிறது.

புறவினத்தார் ஊர்களில் இருந்து பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்தசேதனம் சேய்திருந்த யூத கிறிஸ்தவர்கள் “நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதாரோடு உறவு கொண்டு  அவர்களுடன் உணவு உண்டீர்?” என்ற கேள்வியைப் பேதுருவின் முன்வைத்து, பதிலுக்குக் காத்திருந்தனர். இது ஒரு பெரும் பிரச்சனையாகத் தலைத் தூக்கியது.  அவர்களுக்கு பேதுரு பின்வருமாறு விளக்குகிறார். 
பேதுரு இறைவேண்டல்  செய்துகொண்டிருந்தபோது  கடவுளிடமிருந்து ஒரு காட்சி பெற்றதாகவும், அக்காட்சியில், தீட்டு மற்றும் தீட்டற்ற  பல்வேறு விலங்குகளைக் கொண்ட ஒரு பெரிய விரிப்பு வானத்திலிருந்து இறங்குவதைக் கண்டதாகவும் கூறினார். தொடர்ந்து,  விண்ணிலிருந்து  ஒரு குரல், பேதுருவை நோக்கி, அவற்றை கொன்று சாப்பிடச் சொன்னது என்றும், முதலில் அவர் உண்ணத் தயங்கினார் என்றும் விவிரித்தார்.  

இருப்பினும் ‘தூய்மையானது எனக் கடவுள் கருதுவதைத் தீட்டாகக் கருதாதே’ என்று அக்குரல் கூறவே,  அக்காட்சியின் வழி  நற்செய்தியானது  யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்குமானது என்பதைப் புரிந்துகொண்டதாகப் பேதுரு எடுத்துரைத்தார். 

பேதுரு தனது விளக்கத்தைத் தொடரும் வேளை, செசரியாவிலிருந்து அவரிடம்  அனுப்பப்பட்ட மூவர் பேதுரு தங்கியிருந்த வீட்டின் முன் வந்து நின்றதாகவும்,  தூய ஆவியார் பேதுருவிடம்  “தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு செல்” என்று கூறியதாகவும் தெரிவித்தார்.  இங்கே   பேதுரு தூய ஆவியாரை முன்நிறுத்துகிறார்.  அடுத்து, பேதுருவை புறவினத்தாரான  கொர்னேலியுவை தூய ஆவியார் சந்திக்கச் செய்ததால்,  பேதுரு  அவருக்கு நற்செய்தியை எடுத்துரைத்தார்.  
அப்போது, தூய ஆவி   அவர்கள் மீதும் இறங்கி வந்தது’ என்று கடவுளின் செயல்பாட்டை எருசலேம் யூதக் கிறிஸ்தவர்களுக்கு மேலும்  விவரித்தார் பேதுரு.   இதன்வழி அவர் புறவினத்தாருக்கு நற்செய்தி கொண்டு சென்றதும் திருமுழுக்குக் கொடுத்ததும் முற்றிலும் கடவுளின் ஏற்பாடு என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைத்துத் தெளிவுப்படுத்தினார்

நற்செய்தி.

இயேசு தன்னைப் பற்றியும் தம்மைப் பின்பற்றுபவர்களுடனான உறவைப் பற்றியும் எளிதில் புரிந்துகொள்ளும்படி விவரிக்க இந்த ‘ஆட்டுக் கொட்டில்’ உவமையைப் பயன்படுத்தினார். அவர் தன்னை ஆட்டுக் கொட்டில்   வாசலுக்கும், தன்னைப் பின்பற்றுபவர்களை ஆடுகளுக்கும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.   இந்த உமையில், அவர் நூழை வாசல்  வழியாக நுழைபவர்கள், அதாவது அவரை நம்புபவர்கள் மற்றும் அவரது போதனைகளைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே மீட்பையும் நிலைவாழ்வையும் பெறுபவார்கள் என்று வலியுறுத்தினார்.

கொள்ளை புறமாக வருபவர்களைத் திருடர்கள் என்றும்  கொள்ளையர்கள் என்றும் அவர் வர்ணிக்கிறார். கொள்ளை புறமாக வருபவர்கள்  ஆடுகளின்   நலன்களில் உண்மையான    அக்கறை  கொண்டிருக்கமாட்டார்கள்  எனக் கூறி தன்னை  வேறுபடுத்திக் காட்டுகிறார். 

தன்னை வாசல் என்று அழைப்பதன் மூலம், கடவுளை அணுகுவதற்கும் வாழ்க்கையில் உண்மையான நிறைவைக் காண்பதற்கும் தானே ஒரே வழி என்று இயேசு குறிப்பிடுகிறார்.  திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்” என்று திட்டவட்டமாக எடுத்துரைக்கிறார். 

 
சிந்தனைக்கு.

யாவான் 14:6-ல்,  “வழியும் உண்மையும் வாழ்வும் நானே.⁕ என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்ற இயேசு, இன்றைய நற்செய்தியில், அவரே ஆடுகளின் வாசல் என்று கூறுகிறார். இயேசுவின் காலத்தில், மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை இரவில்  கொட்டிலுக்குக்   கொண்டு வந்து அடைப்பார்கள்.   இந்த கொட்டில்  ஆடுகளை வன விலங்குகள் மற்றும் திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும். 

மேய்ப்பர்கள் ஆடுகளை வாசல் வழியாகத்தான் வெளியே மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வதும் பின்னர் பொழுது சாய்ந்ததும் உள்ளே அடைப்பதுமாக இருப்பார்கள்.   ஒரு திருடன் ஆடுகளைத் திருட விரும்பினால், நுழைவாயிலில் உள்ள முதன்மை "வாசலை" கடந்து செல்ல முயற்சிப்பதை விட, அடைப்பின் சுவர்களில் ஏறி உள்ள  குதித்து ஆடுகளைக் களவாடுவான். . ஆடுகளை இரவும் பகலுமாகப் பேணி காப்பவரே நல்ல ஆயன், சிறந்த தலைவன். 

தலைமைத்துவம் என்பது தேவையானதைச் செய்வதில் அடங்கியுள்ளது. தம் மக்களுக்காக  தலைவர் எதையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.  முதல் வாசகத்தில் தூய ஆவியாருக்குக் கட்டுப்பட்டு பேதுரு புறவினத்தாருக்குத் தேவையானதைச் செய்தார். சொந்த யூத மக்களின் குறைகூரலுக்கு அவர் அஞ்சவில்லை. அவர்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு உண்மையை எடுத்தியம்பினார். கடவுளின் சொல் கேட்டு தனது வழக்கத்தை விட்டொழித்து, அனைத்து உணவையும் ஏற்க முன்வந்தார். அவரது பார்வையில் அனைவரும் கடவுளின் மக்களாகத் தென்பட்டனர். திருமுழுக்கால் அனைவரையும் ஒரு குலத்தவராகப் படம்பிடித்துக்காட்டினார். நல்ல தலைமைத்துவம் பேதுதருவில் வெளிப்பட்டது. 

ஆகவே, கடவுளுடனான நேர்மையான நெருங்கிய உறவு முக்கியமானது. அதை நிலைநாட்ட வேண்டும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.  ஆயன் ஆடுகளைப் பெயர் சொல்லி அழைப்பது  போலவே இயேசுவும் நம்மை தேர்ந்துகொண்டு,  பெயர் சொல்லி அழைக்கிறார். அவ்வாறே, நாம் பிறரையும் அழைக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். திருடனைப்போல் சந்தர்ப்பவாதியாக மாறிவிடக்கூடாது. நம் சமூகத்தில் நம் பணி ஆயனைப்போல் உள்ளதா அல்லது திருடனைப்போல் உள்ளதா? நம்மை நானே ஆய்வு செய்து பார்க்க வேண்டும். திருஅவை ஓர் அரசியல் மேடை அல்ல. சந்தர்ப்பவாதிகளுக்கு திருஅவையில் இடமில்லை என்பதை இயேசு இந்த உவமையியின் வழியாக மேலும் எடுத்துரைக்கிறார். கிடைத்தவரை இலாபம் என்று பணி செய்வோர் கொள்ளை புறமாக நுழைவோராவர்.   
ஆகவே, 'ஆயன்', ‘திருடன்' எனும் இரு தேர்வுகளில் தமது தேர்வு நம் கையில் உள்ளது.   சிந்திப்போம்..

இறைவேண்டல்.

‘ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன் என்றுரைத்த ஆண்டவரே’, நான் வாழ்வு பெறும்பொருட்டு எம்மை உமது பாதுகாப்பில் வைத்து வழிநடத்த உம்மை இறைஞ்சி மன்றாடுகிறேன். ஆமென்.

 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452