இறைவனின் திருவுளம் நம்மில் ஆகட்டும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

12  ஏப்ரல் 2024                                                                                          

பாஸ்கா 2ஆம் வாரம் - வெள்ளி

தி. பணிகள்  5: 34-42                                                    

யோவான் 6: 1-15

முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகம் சிறைப்படுத்தப்பட்ட திருத்தூதர்களான பேதுருவும் யோவானும்  தலைமைச் சங்கத்தாரால் விடுவிக்கப்படுகிறார்கள்.  இதற்கு, கமாலியேல் என்ற புகழ்பெற்ற பரிசேயர் வழியாக கடவுள் செயல்படுவதை அறிகிறோம்.   அவர், எழுந்து  திருத்தூதர்களின் போதனையும் செயலும்  கடவுளிடமிருந்து வந்ததில்லையென்றால், அது தானாகவே அழிந்துவிடும் என்று அவர் தலைமைச் சங்கத்தாருக்கு அறிவுரை கூறுகிறார். அவர், இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்’என்று பொது எச்சரிக்கையும்  விடுக்கிறார்.  

கமாலியேல் தோடர்ந்து,  தெயுதா மற்றும் லிலேயனான யூதா என்பவர்கள் செய்த கிளர்ச்சிகள் தோல்வியில் முடிந்தன, ஏனெனில் அவை  கடவுளின் திட்டமாக இல்லை என்றும், அவ்வாறே, திருத்தூர்களின் இயேசுவைப் பற்றிய முழக்கமும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும்,  அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது என்றும் பலத்த எச்சரிக்கை விடுத்தார்.

நிறைவாக, கமாலியேலின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தலைமைச் சங்கத்தார் திருத்தூதர்களை எச்சரித்து விடுவித்தனர்.
 

நற்செய்தி.

யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகப் பகுதி, இயேசு ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்கள் கொண்டு  ஒரு பெரிய கூட்டத்திற்கு உணவளிக்கும்  நிகழ்வை   விவரிக்கிறது. நோயுற்றவர்களைக் குணப்படுத்துவது போன்ற இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்ததால், ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.

மக்கள் கூட்டத்தைக் கண்ட இயேசு மக்கள் அனைவருக்கும் உணவளிப்பதற்குத் தேவையான உணவை எங்கே வாங்கலாம்  என்று,  தம் சீடர் பிலிப்பைச் சோதிக்கும்படி கேட்டார். பிலிப்புவோ   இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் அனைவருக்கும் உணவளிக்க போதுமானதாக இருக்காது என்றார். மற்றொரு சீடரான அந்திரேயா, ஐந்து அப்பங்களையும்  இரண்டு மீன்களையும் வைத்திருந்த ஒரு பையன் இருப்பதாகக் குறிப்பிட்டார், ஆனால் அது போதுமா என்று அவரே கேள்வி எழுப்பினார்.

இயேசு  மக்களை அமரச் செய்ய தம் சீடர்களைப் பணித்தப் பின்,  அப்பங்களை எடுத்து, நன்றி செலுத்தி, மீன்களுடன் மக்களுக்கு  விநியோகித்தார். அதிசயமாக, அனைவரும் வயிறு நிரம்ப உண்டனர், மிச்சம் கூட இருந்தது.  இயேசு, “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்” என்று அறிவுறுத்தவே, அவர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய எஞ்சிய அப்பம்  மற்றும் மீன்களை சேகரித்தனர்.

இந்த நிகழ்வு பெரும்பாலும் 5,000 பேருக்கு உணவளிக்கும் அதிசயம் என்று குறிப்பிடப்படுகிறது. இது இயேசுவின் வல்லமையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தியது.


சிந்தனைக்கு.

முதல் வாசகத்தையொட்டி சிந்திக்கையில், கமாலியேலின் ஞானம் அல்லது புத்திக் கூர்மை என்னைக் கவர்ந்தது. அவருடைய வார்த்தைகள் எவ்வளவு உண்மையானது!  நாம் முன்னெடுத்துச் செய்யும் செயல்கள், திட்டங்க்ள  கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப அமையாவிடில்,  அதன் முக்கியத்துவம் என்றாவது ஒரு நாள் முடிவுக்கு வரும். அது உண்மையாகவே கடவுளுடையது என்றால், அதைத் தடுக்க எதுவும் இல்லை என்று தெள்ளத் தெளிவாக விவரிக்கிறார்.

இங்கே கடவுளின் விருப்பத்திற்கும் மனிதரின் விருப்பத்திற்குமான வேறுபாடு சுட்டிக்காட்டப்படுகிறது. எது நிறைவேறும் எது நிறைவேறாது அல்லது எது முழுமைப்பெறும் எது இடையிலேயே முடக்கம் பெறும் என்பதை நாம் அறிந்துணர வேண்டும்.

திருஅவையை எடுத்துக்கொண்டால், கடந்த 2000 ஆண்டுகளாக, திருத்தந்தையர், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவற அருள்சகோதர சகோதரிகள், பொதுநிலையினர் என எண்ணில்டங்கா இறைமக்கள் பல்வேறு திட்டங்களைத் தீட்டி தூய ஆவியாரின் தூண்டுதல் என செயல்படுத்தி வந்தாலும், அனைத்தும் நிறைவேறுவதில்லை. சில சமயங்களில் திருஅவவை திட்டங்கள் முழுமையாகவும்  நிறைவேறுவதில்லை. இதற்கு எடுத்தக்காட்டாக, முதாலம் வத்திக்கான் சங்கம் உலகப் போரின் காரணமாக இடையிலேயே முடக்கம் கண்டது.

ஆகவே, நமது குடும்பங்கள் உட்பட எங்கும் எப்பொழுதும் கடவுளின் திருவுளத்திற்கு அடிப்பணிய நாம், நம்மையும் நமது திட்டங்களையும் கையளிக்க வேண்டும். மிரட்டலூலும்   அச்சுறுத்தலாலும் நம்மால்  எதையும் நிலையாகச் சாதிக்க முடியாது. 

ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம் கவனத்தை ஒருமுகப்படுத்தி, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற  எண்ணுபவரின் பணிகள் ஒருபோதும் தோல்வியடைவதில்லை. அதற்கு தலைச்சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பவர்  இயேசு. அவர், “தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” (லூக்கா 22:42) என்று முழுமையாகத் தந்தையில் சரணடைந்தார். அடுத்து, அன்னை மரியாவும் யோசேப்பும் இருவருமே தங்களை கடவுளின் திருவுளத்திற்குக் கையளித்தனர்.

மேலும், இந்நிகழ்ச்சியானது பழைய ஏற்பாட்டிலுள்ள ஓர் அருளடையாளத்தை  நமக்கு நினைவூட்டுகிறது.  எலிசாவால் இருபது வாற்கோதுமை அப்பங்களை நூறு பேருக்குத்தான் தரமுடிந்தது (2 அர 4: 42-44). இயேசுவால் ஐந்து அப்பங்களைக்கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்க முடிந்தது. எலிசாவால் எப்படி அப்பங்கள் பலுகின என்பதற்கு விளக்கமில்லையோ, அப்படியே நற்செய்தியிலும் அப்பம் பலுகின விதம் பற்றி விளக்கம் தரப்படவில்லை. இது கடவுளின் செயல் என்பது புலனாகிறது.

மக்கள் பசியுடன் இருப்பதை இயேசு அறிந்தவராக, அவர்களின் பசியைப் போக்க, தம்மை நாடி வந்தோரின்  தேவைகளைப் பூர்த்திச் செய்ய  விரும்பினார்.  அவரது விருப்பத்தை சீடர்களிடமே விட்டுவிட்டு அவர் ஒதுங்கிவிடவில்லை.  சீடரோடு இருந்து அனைவருக்கும் உணவளித்து திடப்படுத்தினார்.    மீதம் 12 கூடைகளில் உணவு இருந்தது. இதன்வழி தம் 12 திருத்தூதர்களையும் நம்பிக்கையில் திடப்படுத்தினார் என்பது தெளிவாகிறது.

இன்று, இயேசு நற்கருணையை நமது உடலாக அளிப்பதற்கு முன்னடையாளமாகவும் இந்த அப்பம் பலுகுதல் நிகழ்வை இயேசு அன்று வெளிப்படுத்தினார் என்றால் மிகையாது. 

நிறைவாக, ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ என்று, அன்று வானதூதர் அன்னை மரியாவுக்கு  கூறிய வாரத்தைகள் எத்துணை உண்மையானவை என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. ‘ஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு – ஈசன் போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு’  என்ற ஒரு சினிமா பாடலின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.  நம் விருப்பப்படி எதையும் சாதிக்கலாம் என்று எண்ணி செயல்பட்டால் தோல்விதான் மிஞ்சும். 


இறைவேண்டல்.

ஆண்டவரே, உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுவதாக. ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452