உயிர்த்த ஆண்டவர் நம்மை உயிர்ப்பிக்கும் ஆண்டவர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

4 April 2024
பாஸ்கா எண்கிழமை - வியாழன்
தி. பணிகள் 3: 11-26
லூக்கா 24: 35-48
முதல் வாசகம்.
இன்றைய வாசகங்கள் நேற்றைய வாசகங்களின் தொடர்ச்சியாக அமைந்துள்ளன. பேதுருவும் யோவானும் ஊனமுற்றவரைக் குணப்படுத்தியப் பிறகு, மூவரும் கோவிலுக்குள் செல்கின்றனர். ஊனமுற்றவரும், பிச்சையெடுப்பவருமான மனிதர் உடல் நலம் பெற்றதைக் கண்டு ஆலயத்தில் மக்கள் வியப்படைகிறார்கள். ஆனால், பேதுரு “எருசலேம் மக்களே, நீங்கள் ஏன் இதைப் பார்த்து வியப்படைகிறீர்கள்? நாங்கள் எங்கள் சொந்த வல்லமையாலோ இறைப்பற்றாலோ இவரை நடக்கச் செய்துவிட்டது போல் ஏன் எங்களையே உற்றுப் பார்க்கிறீர்கள்?” என்று அவர்களது கவனத்தை கடவுள் பக்கம் திருப்புகிறார்.
கடவுள் தாம் தேர்ந்தெடுத்த மக்களை முழுமையாக மீட்டெடுப்பதாகக் கொடுத்த வாக்குறுதி நிறைவேறுகிறது எனவும் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை எனவும் மக்களை பேதுரு திடப்படுத்துகிறார்.
தொடர்ந்து, “கடவுள் தம் ஊழியரும் மகனுமாகிய இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்து விட்டீர்கள்” என்று உண்மை நிலையை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார். இறந்து உயிர்த்த அந்த இயேசுவின் பெயரால்தான் இந்த உடல் ஊனமுற்றவர் நலமடைந்தார் என்று அவர்களின் அறியாமையைச் சுட்டிக்காட்டி அவர்களது கண்களைத் திறக்கிறார்.
நற்செய்தி
நேற்றைய நற்செய்தியின் தொடர்ச்சியாக இன்றைய நற்செய்திப் பகுதி தொடர்கிறது. எம்மாவு நகரைச் சேர்ந்த இரண்டு சீடர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்று, உயிர்த்தெழுந்த ஆண்டவரைச் சந்தித்ததையும், அப்பம் பிட்கையில் அவரை அடையாளம் கண்டதையும் திருத்தூதர்களுடன் சாட்சியம் பிகர்ந்த வேளையில், அந்த முதல் பாஸ்கா ஞாயிறு மாலையில் ஒன்றாகக் கூடியிருந்த விசுவாசிகள் நடுவில் அனைவருக்கும் இயேசு தோன்றினார். இயேசு அவர்கள் நடுவில் நின்று, ‘‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” (‘ஷாலோம்!) என்று அவர்களை வாழ்த்தினார்.
அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளானார்கள். பின்னர், சிலுவையில் அறையப்பட்டு இறந்தவர், அவர்களிடம் உணவு கேட்டு உண்பதன் மூலம் அவர் ஒரு பேய் அல்ல என்பதை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். பின்னர் எல்லாம் கடவுளின் திட்டத்தின்படி நடந்துள்ளது என்று விளக்கி அதற்கு அவர்கள் சாட்சிகள் என்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய இறைவார்த்தைப் பகுதிகளைக் கூர்ந்துச் சிந்திக்கும்போது, எனக்கு வியப்பாகவுள்ளது. உயிர்த்தவர் மறைந்து போயிருக்கலாம். ஆனால், ஆண்டவர் நம்முடன், தம் மக்களுடன் தொடர்ந்து உறவை வளர்க்கவும், நிலைநாட்டவும் விரும்புகிறார் என்பது புலனாகிறது. கடவுள் நம்மை அண்டி வருகிறார். நமது தேடலுக்குப் பதிலாக வருகிறார்.
இந்த சிறப்பு உறவு பிணைப்பானது, ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியினருக்கும் வாக்களிக்கப்பட்டது. பேதுரு இன்று முதல் வாசகத்தில் வெளிப்படுத்தியதுபோல, மெசியாவாகிய இயேசுவின் மூலமாக ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேறியது. நாம் அனைவரும் ஆபிகாமின் பிள்ளைகளே.
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பால் நாம் கடவுளுடன் நல்லுறவில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே, இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமும் அவர் நமக்கு அளித்த புதுவாழ்வை நாம் அனுதினமும் வாழ வேண்டும். முதல் வாசகத்தில் கால் ஊனமுற்றவர் குணமானதை இயேசுவின் பெயரால் நமக்குக் கொண்டு வரப்படும் மறுவாழ்வுக்கு அடையாளமாக நாம் பார்க்க வேண்டும்.
‘ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா’
என்ற பாதியின் வரிகள் இன்று நமக்குப் பொருத்தமாக உள்ளன. இயேசுவின் உயிர்ப்பு மகதலா மரியாவின் கண்களை முதலில் திறந்ததுபோல், நமது கண்கள் அதே ஒளியைப் பெற்றுள்ளன. நமது நெஞ்சு நம்பிக்கையில் உறுதிகொண்டுள்ளது. இன்று நம்மையும் இறை இரக்கத்தின் சாட்சியாக வாழ, ‘இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்’ என்று அழைக்கிறது நற்செய்தி. ஆகவே, உயிர்த்த ஆண்டவரில் ஒளிப்படைத்த கண்களுடையவர்களாகவும், நெஞ்சுரம் கொண்டவர்காளகவும் வாழ இனியும் தாமதித்தால், உயிர்த்த இயேசுவில் நம் தேடலில் பலனை நம்மால் அடைய முடியாது. ஏமாற்றமே மிஞ்சும். மனமாற்றமா? ஏமாற்றமா? முடிவு செய்வோம்.
இறைவேண்டல்.
‘உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே’ என்று என்னைத் திடப்படுத்தும் ஆண்டவரே. உம்மையே எனது ஒப்பற்ற செல்வமாக எண்ணி, உமது நிபந்தனையற்ற சீடத்துவ அழைப்பில் நிலைத்திருக்க அருள்புரிய வேண்டுகிறேன். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
