குறைகாணா மனம் கேட்போம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 24 ஆம் புதன்
I: 1 திமொ: 3: 14-16
II: திபா: 111: 1-2. 3-4. 5-6
III: லூக்: 7: 31-35
நாம் வாழும் இன்றைய அறிவியல் உலகில் ஒருவரை மற்றவரை கவனிக்கவே நேரமில்லை, பார்த்து சிரிக்கவும் ஓரிரு வார்த்தைள் கூறி நலம் விசாரிக்கவும் கூட நேரமில்லை, மனதுமில்லை என்ற ஒருசூழ்நிலை நிலவி வந்தாலும் , குறை காணும் மனநிலை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேதான் செல்கிறது. இம்மனநிலை காலமாய் காலமாய் நம்மிடையே குடியிருக்கிறது. அக்கம் பக்கத்திலோ, சமூக வலை தளங்களிலோ ஒரு மனிதரைப்பற்றிய செய்தி வந்தால் அதைப்பற்றி நாம் எவ்வாறெல்லாம் விவாதிக்கிறோம் என சிந்திக்க வேண்டும். இயேசு வாழ்ந்தகாலத்து மக்களும் கூட அவ்வாறுதான் இருந்தார்கள்.
ஒருவர் நல்லது செய்தால் அவரை பாராட்டுவதும், தவறு செய்தால் அவரை அன்பாகவும் அவர் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் திருத்துவதும் தான் நல்ல முதிர்ச்சியான பண்பு. ஆனால் பல வேளைகளில் இப்பண்பினை வளர்க்காமல் நல்லது செய்தாலும் எதிர்மறை விமர்சனம் ,தவறு செய்தாலும் எதிர்மறை விமர்சனம் என்றாகிவிடுகிறது நம்மில் பலரின் மனநிலை.
இயேசு இம்மனநிலையைக் கண்டிக்கிறார். யூதர்கள் யோவான் உண்ணாமல் குடிக்காமல் இருந்த போது அவரை எதிர்மறையாக விமர்சித்தார்கள். இயேசு நண்பர்களோடு உண்டு மகிழ்ந்த போது அவரையும் எதிர்மறையாக விமர்சித்தார்கள். குறை கண்டார்கள்.
பிறரிடம் குறை காணும் மனநிலை எதைக் குறிக்கிறதென்றால் நம்மிடம் நிறைவு இல்லல என்பதையே. நமது உள்ளத்தில் நம்மைப்பற்றியே நாம் குறைவு பட்டுக்கொள்ளும் போது, அதை மறைக்க நம்மை நிறைவாகவும் பிறரை குறைவாகவும் நாம் பேச ஆரம்பிக்கிறோம். பிறர் செய்கின்ற அனைத்திலும் தவறுகளை கண்டுபிடிக்க துடிக்கிறோம். விமர்சிக்கிறோம். இத்தகைய மனநிலையை நாம் நிச்சயம் மாற்ற முயல வேண்டும். இல்லாவிட்டால் நம்மை நாம் சரிசெய்ய வாய்ப்பில்லாமலேயே போய்விடும். எனவே சிந்தித்து செயல்படுவோம். குறைகாணா மனம் வேண்டி இறைவனிடம் செபிப்போம்.
இறைவேண்டல்
அன்பு இயேசுவே! பிறரின் குறைகளைக் காணாது எமது நிறைகளை வளர்த்துக்கொள்ள வரம் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்