மன்னிப்பது தான் மனிதத்தின் அடையாளமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் -மூன்றாம் வாரம் செவ்வாய் 
I: தானி: 1: 2, 11-19
II: திபா: 25: 4-5, 6-7. 8-9
III: மத்:  18: 21-35

இன்றைய நாளில் மன்னிப்பைப் பற்றி சிந்திக்கவும் அதை வாழ்வாக்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். "மன்னிப்பு"என்ற தெய்வீகப் பண்பைக் குறிந்து நாம் பலமுறை சிந்தித்திருக்கிறோம். ஆயினும் அதை வாழ்வாக்க நாம் தடுமாறிக்கொண்டேதான் இருக்கிறோம். மன்னித்தல் என்ற அருங்குணம் அடிப்படையான ஒன்றாகும். மன்னிப்பு என்ற ஒன்று இல்லையென்றால், நாம் கிறிஸ்துவின் மீட்பைப் பெற்றிருக்க முடியாது. கடவுள் இந்த உலகத்தைப் படைத்த பொழுது,  அனைத்தையும் நல்லதெனக் கண்டார். ஆனால் மனிதர்கள் தங்களுடைய சுயநலத்தின் காரணமாக கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தனர். பல நேரங்களில் மனிதர்கள் மீதுகோபப்படுவது போல் விவிலியம் சித்தரித்தாலும், இயல்பிலே கடவுள் தன் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட மனிதரை மன்னிப்பவராகவே இருந்தார். கீழ்படியாமை என்ற பாவத்தால் கடவுளின் அருளை இழந்த  முதல் பெற்றோரை அழிக்காமல், மனம் மாறி வாழ வாய்ப்புக் கொடுத்தார்.

இம்மண்ணுலகில் முதல் கொலை செய்த காயினை, கடவுள் அழிக்காமல் மனம் மாறி வாழ வாய்ப்புக் கொடுத்தார். நோவாவின் காலத்தில் கடவுள் எல்லா மனிதரையும் அழிக்காமல், நோவாவின் குடும்பத்தின் வழியாக மனித இனம் இம்மண்ணுலகில் வாழ   வாய்ப்புக் கொடுத்தார். எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்களுக்கு மோசேயின் வழியாக  கடவுள் விடுதலை கொடுத்தார். செங்கடலைக் கடந்த  பிறகு, பாலைநிலத்தில்  பயணம் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில்  கடவுளுக்கு எதிராகவும் மோசேவுக்கு  எதிராகவும் பலவாறு முணுமுணுத்தனர். இருந்தபோதிலும் கடவுள் அவர்கள் மனமாற பல வாய்ப்புகளைக் கொடுத்தார். கானான் தேசத்தை அடைந்த பிறகு பலநேரங்களில் இஸ்ரயேல் மக்கள் கடவுளின் அன்பை மறந்து அவருக்கு எதிராகச் சென்றனர். எனவே அவர்கள் மீட்பை முழுமையாக சுவைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நீதித்தலைவர்கள், அரசர்கள், மற்றும் இறைவாக்கினர்கள் வழியாக வழிநடத்தினார். இவர்கள் வழியாக இஸ்ரயேல்  மக்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும், அவர்கள் கடவுளின் அன்பை மறந்து விலகிச் சென்றனர்.

எனவேதான் தன்னுடைய ஒரே மகனை பாவக் கழுவுவாயாக இந்த உலகத்திற்கு அனுப்பினார். இந்த மனநிலை கடவுளின் மன்னித்தல் மனநிலையின் உச்சத்தைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேதுரு இயேசுவை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?'' எனக் கேட்டார். அதற்கு ஆண்டவர் இயேசு "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்" எனக் கூறியுள்ளார்.  மன்னித்தல் என்பது அளவு பார்த்து கொடுப்பதல்ல ; மாறாக,  தேவையுள்ள அனைவருக்கும்  கொடுப்பதாகும். 

மன்னித்தல் என்பது உளவியல் ரீதியாக உடல் நலத்திற்கு நல்லது. நமக்கு எதிராக ஒருவர் சூழ்ச்சிகளைச் செய்யும் பொழுது, அவற்றை நம் மனதில் உள்வாங்கி  கோபத்தோடு இருந்தால் நமக்கு மன அழுத்தம் ஏற்படும். நமக்குத் தீங்கு செய்தவர்களை மன்னிக்க முன்வரும் பொழுது, நாம் மன அமைதியைப் பெறுகிறோம். மன இறுக்கத்திலிருந்து விடுதலை பெறுகிறோம். மன இறுக்கம் இல்லாத மனிதர் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். ஆண்டவர் இயேசு தான் செய்த மூன்றாண்டு இறையாட்சிப் பணியில் பல்வேறு இடையூறுகளும் சூழ்ச்சிகளும் இருந்தாலும்  மகிழ்ச்சியோடு அனைத்தையும் செய்தார்.  இதற்கு அடிப்படைக் காரணம் அவர் அனைவரையும் மன்னிக்கக் கூடியவராக இருந்தார்.

மன்னித்தல் வழியாக பிறர் மட்டும் பயனடைவதில்லை. மாறாக,  நாம் முதலில் பயனடைகிறோம். மேலும் நாம் எந்த அளவுக்குப் பிறரை மன்னிக்கின்றோமோ, அந்த அளவுக்கு இறைத் தந்தையின் இரக்கத்தைப் பெற முடியும். கடவுளின் இரக்கத்தை முழுமையாகப் பெறுவதற்கு அடிப்படை நாம் பிறரை மன்னிப்பதாகும். நாம் பிறரை  மன்னிப்பது ஒரு சில  நேரங்களில் கடினமாகத்தான் இருக்கும். இருந்தபோதிலும் கடவுள் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார் என்பதை ஆழமாக உணர்ந்து மன்னிக்க அழைக்கப்பட்டுள்ளோம். இந்த தவக்காலம் மன்னித்தலின் காலமாகும். தவக்காலத்தில் மன்னித்தல் வழியாக கடவுளின் அருளையும் இரக்கத்தையும் நிறைவான மகிழ்ச்சியையும் பெறுவோம்.  நாம்  மன்னித்தலின் வழியாகத்தான், கிறிஸ்தவ வாழ்வுக்கும் மானுட வாழ்வுக்கும் சான்று பகர முடியும். மன்னித்தல் வழியாக இறைத் தந்தையின் அன்பையும் இரக்கத்தையும் பெற நம்மையே தகுதி படுத்துவோம்.
 
 இறைவேண்டல் : 

எங்களை மன்னித்து வழிகாட்டும் இறைவா! எங்களுடைய மனித பலவீனத்தின் காரணமாக அறிந்தும் அறியாமலும் செய்யும் எல்லா பாவங்களையும் மன்னித்தருளும். எங்களுடைய பலவீனத்தை அறச்செயல்களில் வழியாக வென்று, கிறிஸ்தவ வாழ்வுக்கும் மானுட வாழ்வுக்கும் எந்நாளும் சான்று பகிர்ந்திடத்  தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

10 + 8 =