மீண்டும் பார்வை பெற வேண்டுமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம் எட்டாம் வியாழன் 
I: சீஞா: 42: 15-25
II: திபா: 33: 2,3. 4-5. 6-7. 8-9
III:மாற்:10: 46-52

நாம் பல நேரங்களில் கண்ணிருந்தும் குருடர்களாய் வாழ்ந்து வருகின்றோம். நம்மோடு வாழக்கூடிய மனிதர்களும் உயிரினங்களும் துன்பப்படும் பொழுது, அவற்றைக் கண்டும் காணாமலும் இருப்பது குருட்டுத்தனத்திற்கு ஓர் முன்னுதாரணம்.   சாலை விபத்துக்கள் நடந்த புள்ளி விவரங்களை  ஆய்வு செய்து பார்த்தால்,  பார்வையற்றவர்களை விட பார்வை உள்ளவர்கள்தான் விபத்துக்களை அதிகமாகச் சந்தித்துள்ளனர். பார்வையற்றவர்களுக்கு புறம் ஒளியாய் இல்லாவிட்டாலும், அகம் ஒளி நிறைந்ததாக இருக்கும். ஆனால் பல பார்வையுள்ள மனிதர்களுக்குப் புறம் பார்வையுள்ளதாக இருந்தாலும், அகம் ஒளி அற்றதாக இருப்பது வேதனை அளிக்கிறது.

ஒருவர் கடவுளைக் காண வேண்டும் என்று பற்பல நாடுகள் சுற்றித் திரிந்தார். பற்பல கோவில்களைச் சந்தித்தார். ஆனால் கடவுளை அவரால் காண முடியவில்லை. கடவுளை உணரவும் முடியவில்லை. பல இடங்களுக்குச் சுற்றி தெரிந்தபிறகு களைப்பாக ஓரிடத்தில் அமர்ந்தார். அப்பொழுது இரண்டு நாட்கள் போதுமான உணவு இல்லாமல் பட்டினியாய் இருந்த முதியவர் ஒருவர் அவரிடம் உணவு கேட்டார். அப்பொழுது அவர் தன்னிடமிருந்த உணவை அந்த முதியவருக்கு வழங்கினார். உடனே அந்த முதியவர் "கடவுளைப் போல எனக்கு உணவு அளித்தீர்கள்" என்று கூறி அந்த இடத்தை விட்டுச் சென்றார். அப்பொழுதுதான் கடவுள் இருக்கும் இடத்தை அந்த நபர் புரிந்து கொண்டார்.

பல நேரங்களில் நம்மில் இருக்கக்கூடிய கடவுளைக் காணமுடியாத பார்வையற்றவர்களாய் வாழ்ந்து வருகின்றோம். ஆனால் நம்முள் இருக்கக்கூடிய கடவுளை நம்முடைய நற்செயல்கள் வழியாக உணரும் பொழுது,  நிச்சயமாக கடவுளின் ஒளியைப் பெற்றுப் புதுப்பார்வை பெறமுடியும்.

இன்றைய நற்செய்தியில் மிக அருமையான ஒரு வல்லச்செயல்  நடைபெறுகின்றது. பார்வையற்ற பர்த்தலமேயு மீண்டும் பார்வை பெற வேண்டும் என்று நம்பிக்கையோடும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடும் கதறிக் கேட்டார். இயேசுவின் இரக்கம் தனக்கு முழுமையாகக் கிடைக்கும் என்று நம்பினார்.  இதன் பயனாக பர்த்தலமேயு மீண்டும் பார்வை பெற இயேசு தன்னுடைய அருளைப் பொழிந்தார். பர்த்தலமேயு இயேசுவைப் புறப்பார்வை இல்லாவிட்டாலும்,  தன்னுடைய அகப் பார்வையால் அடையாளம் கண்டு கொண்டார். ஆனால் புறப் பார்வை கொண்ட பிற மக்கள் இயேசுவை முழுமையாக அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. எனவேதான் அனைவராலும் இயேசுவின் அருளையும் இரக்கத்தையும் அனுபவிக்க முடியவில்லை. மாறாக, பர்த்தலமேயு இயேசுவை சிறப்பாக அடையாளம் கண்டுபிடித்து, அவருடைய  இரக்கத்தையும் அருளையும் பெற்றார்.  

பர்த்தலமேயு மீண்டும் பார்வை பெற்றார் என நற்செய்தியில் வாசிக்கிறோம். இதன் இறையியல் பின்னணி என்னவென்றால் ஒருவேளை ஒருகாலத்தில் இந்தப் பர்த்தலமேயு பார்வை உள்ளவராக இருந்திருக்கலாம். அவருடைய உலகம் சார்ந்த வாழ்வால், ஒளி நிறைந்த அவரது பார்வையை இழந்திருக்கலாம். ஒரு காலத்தில் செய்த பாவத்தின் காரணமாக இத்தகைய தண்டனையைப் பெற்றிருக்கலாம். எனவேதான் பர்த்தலமேயு "தாவீதின் மகனே எனக்கு இரங்கும்!" என்று இயேசுவை நோக்கி குரல் எழுப்பினார். இது அவரின் மனமாற்ற வாழ்வைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே தான் ஆண்டவர் இயேசு பர்த்தலமேயுக்கு  பார்வை கொடுத்து நலம் அளித்தார்.

நம்முடைய அன்றாட வாழ்விலும் இயேசுவின் வழியில் மீண்டும் பார்வை பெற நாம் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு கடவுளை நம்முடைய நற்செயல்களின் வழியாகவும் இறைவேண்டுதலின் வழியாகவும் நாம் உணர வேண்டும். பர்த்தலமேயுவைப் போல,  இறைநம்பிக்கை மிகுந்தவர்களாகவும் இயேசுவை முழுமையாக ஏற்றுக் கொள்பவர்களாகவும் அகம் புறம் போன்றவற்றில் புதிய பார்வை பெற்று இயேசுவைக் காண முயற்சி செய்வோம். அக மற்றும் புறக் கண்களைத் திறந்து இயேசுவை முழுமையாக அனுபவித்து கிறிஸ்தவ நம்பிக்கைக்குச் சான்று பகரத் தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
அன்பான இறைவா!  நாங்கள் மீண்டும் பார்வை பெற எங்கள் அக மற்றும் புற கண்களைத் திறந்து புதிய பார்வை பெற்று வாழ்ந்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்