தோல்வி உனக்கில்லை தோழா! | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

உடல் திடமாக, ஆரோக்கியமாக இருந்தாலும் சோம்பேறியாக முடங்கிக் கிடக்கும் அல்லது எப்போதும் பிறரையும் காலத்தையும் குறைச்சொல்லிக்கொண்டு, காலத்தைக் கழிக்கும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், சென்னையைச் சேர்ந்த ஜஸ்டின் என்னும் இளைஞர் தடைகளையும் தாண்டி சாதிக்கத் துடிக்கிறார். 90 சதவீதத்திற்கும் மேல் உடல் குறைபாடுள்ள ஒரு மாற்றுத்திறனாளியான இவர், 2018இல் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டின் நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெறும் ஆசையில் இருக்கிறார்.

2009இல் நடந்த ஒரு விபத்தில் முதுகுத் தண்டில் ஏற்பட்ட பலத்த அடியால் கழுத்துக்குக் கீழுள்ள உறுப்புகள் செயலற்றுப்போயின. உடல்ரீதியாக இவர் சந்திக்கும் சவால்கள் ஏராளம். உடம்பில் ஏதாவது காயம் ஏற்பட்டுவிட்டால் அவரால் உணர முடியாது. வியர்வைச் சுரப்பிகள் அதிகம் சுரக்காததால் அதிக நேரம் வெயிலில் நின்றால் மயக்கம் வந்துவிடும். இத்தனை சவால்கள் இருந்தும் தன் தாய் நாட்டுக்காகத் தங்கம் வெல்வதற்காகத் தினமும் ஒன்றரைக் கிலோ மீட்டர் நீச்சல் பயிற்சி மேற்கொள்கிறார்.

“நடந்ததை நினைத்து இனிக் கவலைப்பட்டு எந்தப் பயனும் இல்லை; இனி நடக்கப்போவதைக் குறித்து அக்கறை காட்ட வேண்டும்”என்கிறார் ஜஸ்டின். நீச்சல் கற்றுக்கொண்ட சில மாதங்களிலே மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்குப்பெற்று நான்கு தங்கப்பதக்கங்களை வென்றார். மத்தியப் பிரதேசத்தில் நடந்த போட்டியில் பங்கெடுத்து மூன்று தங்கப்பதக்கங்களை வென்றார். 2015ஆம் ஆண்டு கனடாவில் நடந்த சர்வதேசப் போட்டியிலும் கலந்துகொண்டு மூன்று தங்கம் வென்று சாதித்தார்.

"மாற்றுத்திறனாளிகள் சின்னதா ஒரு சாதனை புரிஞ்சாலும் அவர்களைப் பெரிசாப் பாராட்டணும். அவர்களை உற்சாகப்படுத்தணும்" என்று கேட்டுக்கொள்கிறார் தடைகளையும் தாண்டி சாதிக்கத் துடிக்கும் ஜஸ்டின் என்னும் சாதனையாளர்.

 துன்பங்கள் மட்டும் நமக்கு இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.


எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image