தன்னலமற்ற தலைவர் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
பணத்துக்காக ஓட்டுகள் விற்கப்படும்வரை அரசியல் வாழ்வில் நேர்மையான மனிதர்களைப் பார்ப்பது கடினம்.
இந்தியாவில் முதலமைச்சர்கள், துறைஅமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி சாதாரண வார்டு உறுப்பினர்கள்வரை நேர்மையான அதிகாரிகளைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. லஞ்சம், ஊழல் மலிந்த இச்சமூகத்தில் கறைபடியா மனிதர்களும் உள்ளார்கள் என்பதற்கு திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றார்.
இந்தியாவின் வடகிழக்கிலுள்ள திரிபுரா மாநில முதலமைச்சராக பணியாற்றிய மாணிக் சர்க்கார் அவர்களின் மொத்த சொத்தின் மதிப்பு வெறும் 10,800 ரூபாய்தான்.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக முதலமைச்சராகத் தொடர்ந்து பணியாற்றிய மாணிக் சர்க்கார் அவர்களுக்குச் சொந்தமாக வீடோ, வாகனமோ, கைபேசியோ இல்லை என்று சொன்னால் நம்ப முடிகின்றதா?'அரசியல் ஒரு சாக்கடை' என்று சொல்லக்கூடிய இவ்வுலகில், அதையும் புனிதமாகப் போற்றி வாழும் தலைவர்கள் இன்னும் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
1949ஆம் ஆண்டில் பிறந்த மாணிக் சர்க்கார் அவர்கள், முதலமைச்சர் ஊதியம் முழுவதையும் கட்சிப் பணிகளுக்காகக் கொடுத்துவிட்டு, கட்சி கொடுக்கும் வெறும் ஐந்தாயிரம் ரூபாயைக் கொண்டு இவர் குடும்பம் நடத்தினார் என்று சொன்னால் நம்ப முடிகின்றதா?
அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற இவரது மனைவி பாஞ்சாலியின் ஓய்வூதியம் இவர்களது எளிய வாழ்க்கைக்குப் போதுமானதாக உள்ளதாம். தான் உடுத்தும் ஆடைகளைத் தானே துவைத்துப்போடும் எளிய முதல்வர் இவர்.
மனிதர் தன்னுடைய சகமனிதரின் உயர்வுக்காகவும் நன்மைக்காவும் பாடுபடுவதன் மூலமே அவர் தன்னை உயர்த்திக்கொள்கிறார்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
