முட்டாளாக்குவதில் மகிழ்ச்சி | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
சிறுமி ஜாக்கி இரண்டாம் வகுப்பு படித்தபோது வகுப்பில் மிகவும் பின்தங்கிய மாணவியாக இருந்தார். “நீ ஒரு முட்டாள், சோம்பேறி! பள்ளியில் கனவா காண்கிறாய் ? உனக்கு ஆயிரம் தடவை சொல்லியிருப்பேனா?'' என வகுப்பு ஆசிரியர் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் திட்டுவார்.
தன்னால் பேசவே முடியாது என்று உணர்ந்த சிறுமி வாசிக்க எழுந்து நின்றாலும், ஒரு வார்த்தையும் வாசிக்க முடியாமல் திணறுவார். நூலகம் சென்று நூல்கள் வாசிக்க முயல்வார். ஆனால், முடியாமல் அவமானத்தால் கூனிக் குறுகிவிடுவார். கடைசியில் 15வது வயதில் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தினார்.
பின்னர் திருமணம் செய்துகொண்ட ஜாக்கி, கணவர் கொடுத்த ஊக்கத்தால் அவரது வாழ்வு முழுவதும் மாறத்தொடங்கியது. எட்டுக் குழந்தைகளுக்குத் தாயானார். இவரது கணவர் இவரை எப்போதும் தான் கண்டிராத மிகத் திறமையான ஒரு பெண்ணாகவே நடத்தினார்.
பல ஆண்டுகள் சென்று ஜாக்கியின் மூத்த மகள் உயர்நிலைப் பள்ளியை முடிப்பதற்கு ஓராண்டுக்கு முன்னதாக, ஜாக்கி பள்ளிப் படிப்பை முடித்தார். தனது மகளிடமிருந்து கணக்குப் பாடம் கற்றுக்கொண்டார். தனது ஐம்பதாவது வயதில் கல்லூரிப் படிப்பில் பட்டம் பெற்றார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாசிக்கத் திணறும் சிறார்களுக்கு உதவி செய்யும் திட்டத்தை நடத்தி வருகிறார்.
இந்தச் சமூகம் பலரையும் அறிவாளியாக்க விரும்பவில்லை, காரணம் கேள்விகள் கேட்டுத் தம்மை முட்டாள்களாக்கி விடுவார்களோ என்கின்ற அச்சம்!
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
