கலெக்டரான முதல் மாற்றுத்திறனாளி | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
கிருஷ்ணா கோபால் திவாரி என்ற இளைஞர் தமது 18 வயதுவரை நல்ல பார்வையுடன்தான் இருந்தார். 2008 இல் திடீரென்று Retinities Pigmentosa எனும் குணப்படுத்த முடியாத கண் பார்வையைப் பாதிக்கக் கூடிய நோயால் 75 சதவீதப் பார்வையை இழந்தார்.
"ஐயோ ஒளி இழந்து இருளாகி விட்டதே என் வாழ்வு! மடிவதே என் முடிவு!" என்று வாழ்க்கையை ஓர் அபத்தமான ஆபத்தாகப் பார்க்காமல், அதை ஏற்றுக்கொண்டு வாழ்வில் என்ன சாதிக்கலாம் என யோசித்தார். வாழ்வை ஒரு சாபமாகப் பார்க்காமல், வரமாக பார்த்தார். இவரின் தன்னம்பிக்கை இழக்காத முயற்சியும் பயிற்சியுமே இவரை இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி ஆட்சியாளராக 2014ஆம் ஆண்டு வெற்றிபெற உதவியது. தனக்குள் தள் உள்ள குறையைக் குறையாகப் பார்க்காமல் நிறைவாகப் பார்க்கத் துணிந்தார்.
உத்திரப் பிரதேச மாநிலம், அம்பேத்கர் நகர் மாவட்டத்தில், ஒரு சாதாரண ஏழை விவசாயியான சுவாமி நாத் திவாரியின் மகன் கிருஷ்ணா கோபால் திவாரி. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்புவரை வெறும் 25% பார்வைக் குறைபாடு இருந்தது. ஆனால், குடும்ப வறுன காரணமாக குணப்படுத்தப் போதிய வருமானம் இல்லாத சூழ்நிலை. இருப்பினும் சவால்களையும் சோதனைகளையும் கடந்து படித்தார். நண்பர்களின் உதவியுடன் பாடங்களை ஒலிப் பேழையாகப் பதிவு செய்து, அதைத் திரும்பத் திரும்பக் கேட்டு, மனப்பாடமாக்கி முயன்று படித்ததால் இன்று ஓர் ஐ. ஏ. எஸ். அதிகாரியாக ஜொலிக்கிறார். “கடைநிலையில் கடைசி வரிசையில் குரல் இழந்து நிற்கும் ஏழையின் குரலும் அரசால் கேட்கப்பட வேண்டும்” என்பதுதான் இவரின் ஒரே நோக்கமாக இருக்கிறது.
என்னால் “நீ எப்படியும் ஒருநாள் கலெக்டராக வருவாய்" என்று ஆசிரியர்களும் இவரது பெற்றோரும் சொன்ன நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்தான் இன்று இவரை மாவட்ட ஆட்சியாளராக உயர்த்தியுள்ளது. "என்னிடம் திறமை ஒன்றும் இல்லை; என் எதுவும் முடியாது” என்று நினைப்பவர்களுக்குக் கிருஷ்ணா கோபால் திவாரி ஒரு சிறந்த நம்பிக்கையூட்டும் சான்றாக உள்ளார்.
உடல் குறைபாட்டைக் குறைகளாகப் பார்த்துக் குறை கூறாமல், தங்களிடம் உள்ள நம்பிக்கை என்ற மனித வளத்தைப் பயன்படுத்தித் திறமைகளை வளர்த்துக் கொள்பவர்கள் வாழ்வில் சாதிப்பார்கள்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
