தாய்மைக்குப் பாலினம் கிடையாது. | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
வலி தந்தவர்களையும் உயிராய் நினைப்பது தாய்மை மட்டும்தான்.
மூன்றாம் பாலினத்தவரை இரயிலில் கைதட்டிப் பிச்சை கேட்பவராகவும், ஆட்களை மிரட்டிப் பணம் சம்பாதிப்பவராகவும் பலர் நினைப்பதுண்டு. திரைப்படங்கள் அவர்களை ஒரு கேலிப் பாத்திரமாகவும் சித்தரிக்கின்றன. ஆனால், அவர்களுக்குள்ளும் தாய்மை உணர்வு உண்டு என்பதைப் புரிந்துகொள்வதில்லை
முப்பத்தேழு வயது நிரம்பிய கவுரி சாவந்த் அவர்கள் மும்பையைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர். இவருக்குப் பதினெட்டு வயது நிரம்பியபோது தந்தையால் வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்டவர். இவர் தன்னைப் பெற்ற தாயைப் பார்த்தது இல்லை.
பாலியல் தொழில் செய்து வந்த இவரது நண்பருக்கு ஆறு வயதில் காயத்திரி என்னும் மகள். தன் அம்மா அடிக்கடி நோயால் சோர்வுற்று படுத்துக்கிடப்பதைக் காயத்திரி பல நாள்கள் பார்த்து வேதனை அடைந்துள்ளார்.
ஒருநாள் காயத்திரியின் அம்மாவை அவசரப் பிரிவுக்கு வண்டியில் அழைத்துச் சென்றார்கள். போனவர் திரும்பி வரவே இல்லை. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி இறந்து போனார். தாய் இல்லாமல் ஆதரவற்ற அந்தக் குழந்தையை மூன்றாம் பாலினத்தவரான கவுரி சாவந்த் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, தன் சொந்த மகளாகப் பாசம் காட்டி வளர்த்து வருகிறார்.
தன் அன்பு மகளை மருத்துவராக்க விரும்புகிறார் கவுரி. ஆனால், காயத்திரியோ வழக்கறிஞராக மாறி, தன் தாயைப்போன்ற மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளுக்காகப் போராட விரும்புகிறார்.
அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லாச் சீரிய உணர்வுகளையும் தாய்மையிடமிருந்து மட்டுமே பெற முடியும்.
