உள்ளதைப் பகிர்ந்து விண்ணகம் ஏற்பாய்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

27 மே 2024  

பொதுக்காலம் 8ஆம் வாரம் - திங்கள்

1 பேதுரு  திருமுகம் 1: 3-9

மாற்கு 10: 17-27

முதல் வாசகம்.

நமது நம்பிக்கையின் முக்கிய கூறுகள் பற்றி இன்றைய வாசகத்தில் அறிவுறுத்துகிறார் திருத்தூதர் பேதுரு. பேதுருவின் முதல் திருமுகத்தை நாம் வாசிக்கத் தொடங்கும் போது,  இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மற்றும் தூய ஆவியாரின்  தூண்டுதலின் மூலமாக  நாம் நம்பிக்கையின் கொடையைப்  பெறுகிறோம் என்பதை அறிகிறோம். 

திருத்தூதர்  ஆரம்பகால திருஅவை உறுப்பினர்கிடம்  உரையாற்றுகிறார். இப்புதிய கிறிஸ்வர்கள் யாரும் இயேசுவை நேரில் கண்டறியாதவர்கள். அவர்கள் சந்திக்கத் தொடங்கும் சோதனைகள் மற்றும் இன்னல்களை அவர் அறிவார்.   இயேசுவின் மீதுள்ள நம்பிக்கைன் நிமித்தம்  அவர்கள் பெற்ற வரங்களுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும், அறிவுத் தெளிவுடையவர்களாகவும்  இயேசு கிறிஸ்து வெளிப்படும்பொழுது அவர்களுக்கு அளிக்கப்படும் அருளை முழுமையாக எதிர்நோக்கி இருப்பவர்களாகவும் இருக்க  அவர் அவர்களை ஊக்குவிக்கிறார்.    

நற்செய்தி.

நற்செய்தியில் ஒரு பணக்கார இளைஞருக்கும் இயேசுவுக்குமிடையே நிகழ்ந்த ஓர் உரையாடலைக்  கேட்கிறோம். ஒருமுறை செல்வராயிருந்த இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ‘நல்ல போதகரே!  நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?’என்று கேட்டபோது, இயேசு மறுமொழியாக, ‘உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? அதன்படி வாழ முற்படு என்றார்.
 
அந்த இளைஞர் உடனே, ‘இவை அனைத்தையும் இளமையிலிருந்தே நான் கடைப்பிடித்து வருகிறேன் என்று பதில் சொல்லவே, இயேசு கனிவுடன் அவரை நோக்கி, ‘உமக்கு இன்னும் ஒன்று குறைவுப்படுகிறது. உமக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்போழுது விண்ணகத்தில் நீர் செல்வராய்  இருப்பீர்' என்று பதிலுரைத்தார். இதைக் கேட்ட இளைஞர்   வருத்தமுற்று   அங்கிருந்து சென்றுவிட்டார். ஏனென்றால், அவர் மிகுந்த செல்வந்தராயிருந்தார்.


சிந்தனைக்கு.

நற்செய்தியில் முதலில், அந்த இளைஞர் அவர் இயேசுவிடம் ஓடி வருகிறார். அவர் ஆண்டவருடன் தனிப்பட்ட முறையில்  பேச மிகவும் விரும்பினார் என்பதை இது காட்டுகிறது. அவர் இயேசுவின் முன் மண்டியிட்டார், இது அவரது பணிவையும் மரியாதையையும் சுட்டிக்காட்டுகிறது. பின்னர் அவர் இயேசுவிடம் நேரடியான முக்கியமான கேள்வியைக் கேட்டார். யாரோ ஒருவரைக்  குணப்படுத்தும்படி அவர் இயேசுவிடம் கேட்கவில்லை. அவர் இயேசுவிடம் பிறர் போன்று ஓர் அதிசயத்தையோ அல்லது தனிப்பட்ட உதவியையோ கேடகவில்லை. மாறாக, நாம் ஒவ்வொருவரும் இயேசுவிடம் தினமும் கேட்க வேண்டிய கேள்வியை இந்த இளைஞன் கேட்டான். "நல்ல போதகரே, நிலைவாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?" என்பது அவனது கேள்வியாக உள்ளது.

இயேசுவோ, அவர் விரும்பிய நிலைவாழ்வுக்கு இரு வழிகளை எடுத்துரைக்கிறார். முதலில், அவர் அந்த இளைஞனின் கேள்விக்கு அடிப்படையான பதிலைக் கொடுக்கிறார். நிலைவாழ்வுக்கு  கடுமையான பாவத்திலிருந்து விலகி, அன்பு மற்றும் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்துக்  கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்கிறார்.  ஆனால் அந்த இளைஞன் அப்படியே வாழ்ந்து வருவதால், இரண்டவது  அவன் போய், அவனிடம்  இருப்பதை விற்று, ஏழைகளுக்குக் கொடுப்பதுவே சிறந்தது என்கிறார். இதைக் கேட்டபோது, மனம் வாடி மறைகிறான்.

நமக்குள்ளதை விற்று ஏழைகளுக்குக் கொடுத்தால் இவ்வுலகில் நாம் பலரின் நகைப்புக்கு ஆளாவோம். இறுதியில் மதிப்பிழந்து மானமிழந்து தெருவில் ஓட்டாண்டியாகச் சுற்றித்திரியும் நிலை ஏற்படும். எனவே, நமக்குள்ளதை விற்று பிறருக்குக் கொடுப்பதற்கு மனம் வராது. இயேசுவைச் சந்தித்த அந்த செல்வந்தர் நல்லவர்தான். செல்வச்செழிப்புமிக்க அவர் இயேசுவின் காலடியில் முழந்தாள்படியிட்டு வேண்டுவது அவரது எளிமையைக் காட்டுகிறது. ஆனாலும். அவரது செல்வம் மனமாற்றத்திற்கு இடம் கொடுக்கவில்லையே!  

நாமும் அப்படிதான். இரவும் பகலுமாக இறைவேண்டலிலும், ஆலயப் பணிகளிலும் மும்முறமாக இருப்போம். ஆனால், உள்ளதில் கிஞ்சிற்றும் கிள்ளிக் கொடுக்க மாட்டோம். அது வேறு, இது வேறு என்போம். இத்தகைய மனப்போக்கை இன்று இயேசு சுட்டிக்காட்டுகாறர். 

மத்தேயு நற்செய்தியில் வசனம் 24-ல், ‘எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது........ நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது’ என்று இயேசு கூறியதை மறக்க இயலாது. அத்துடன், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது கடினம்” (மாற்கு 10:23) என்றும்  இயேசு சொல்கிறார். அப்படியென்றால் இயேசுவின் எதிர்ப்பார்ப்புதான் என்ன? என்ற கேள்வி நமக்கு எழக்கூடும். ஆம்,   நாம் நமது உழைப்பால் கொண்ட   செல்வத்தால் வளமை பெற்று, மற்றவர்களுடைய வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும் என்றுதான் இயேசு  எதிர்பார்க்கிறார்.

தர்மம் செய்யும்  போது பெறுபவர்கள் விழிகளில் நன்றி தெரியவேண்டும் என்று கூட எதிர்பார்க்காமல் கொடுப்பவர்களே சிறந்த மனிதர். ”தர்மம் தலைகாக்கும்.  இருப்பதைச் சிறப்புடன் பகிர்ந்து வாழ்ந்தால் போதும், அது நிலைவாழ்வுக்கு வழி காட்டும்.
 
இறைவேண்டல்.

இரக்கத்தின் ஆண்டவரே, செல்வத்தால் வாழ்வு வந்துவிடாது என்று நீர் எனக்கு அறிவுப்புகட்டினீர். அதன்படி நான் என்றும் என்னில் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்து வாழும் மனதைத் தொடர்ந்து அருள்வீராக. ஆமென்.

 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452