வாழும் கடவுளில் வாழ்வதே வாழ்வு! | ஆர்.கே. சாமி |VeritasTamil

8 மே 2024  

பாஸ்கா 6ஆம் வாரம் - புதன்

தி.பணிகள் 17: 15, 22- 18: 1

யோவான்  16: 12-15


முதல் வாசகம்.

 பவுலின் தோழர்கள் அவரை ஏதென்சுக்கு  அழைத்து வந்தனர்.  அங்கு,  அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் கூடியிருந்த மக்களிடம் பவுல் பேசினார். "தெரியாத கடவுளுக்கு" அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பலிபீடத்தை வைத்து   அவர் அவர்களின் ஆழ்ந்த மதப்பற்றைப் புரிந்துகொண்டார்.  பவுல் தனக்குத் தெரிந்த கடவுளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த ஒரு தொடக்க புள்ளியாக இதைப் பயன்படுத்தினார். 

இந்த கடவுள், மனிதர்களால் உருவாக்கப்பட்ட சிலைகளைப் போலல்லாமல், எல்லாவற்றையும் படைத்தவர் என்பைததைத் தெளிவுப்படுத்தினார்.  மேலும், மக்கள் அனைவரும் தம்முடைய படைப்புகளாக  இருப்பதால், மக்கள் தம்மைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்று பவுல் வலியுறுத்தினார். 

இயேசுவின் உயிர்த்தெழுதலை ஆதாரமாகக் காட்டி, நிகழவிருக்கும் நியாயத் தீர்ப்பு நாளைப் பற்றி அவர் பேசினார்.  இது கேட்போர் மத்தியில் வெவ்வேறு எதிர்வினைகளைத் தூண்டியது. சிலர் கேலி செய்தார்கள், மற்றவர்கள் ஆர்வத்துடன் மேலும் கேட்க விரும்பினர். சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்களுள் அரயோபாகு மன்றத்தின் உறுப்பினரான தியோனிசியுவும், தாமரி என்னும் பெண் ஒருவரும் வேறு சிலரும் அடங்குவர். அதன்பின், பவுல் ஏதென்சிலிருந்து புறப்பட்டு கொரிந்துக்குப் பயணமானார் என்று லூக்கா கூறுகிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசு தம்முடைய சீடர்களுக்குக் கற்பிக்க இன்னும் அதிகமாக இருந்தாலும், அந்த நேரத்தில் அவர்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளத் தயாராக இருக்க மாட்டார்கள் என்று சொல்லி அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார். அவர் மறைந்த பிறகு, "தூய ஆவியார்" வந்து அவர்களை எல்லா உண்மையிலும் வழிநடத்துவார்  என்று அவர் அவர்களுக்கு உறுதியளிக்கிறார். 

தூய ஆவியார் தன்னிச்சையாக எதையும் பேசாது, அவர் கடவுளிடமிருந்து கேட்பதைத் தெரிவிப்பதோடு  நிகழவிருக்கும் அனைத்தையும் வெளிப்படுத்தும் துணையாளராக இருப்பார் என்கிறார் இயேசு.  தூய ஆவியானவரின் வரவின் நோக்கம், இயேசுவுக்குச் சொந்தமானவற்றைப் பகிர்ந்துகொண்டு அதை சீடர்களுக்கு அறிவிப்பதன் மூலம் அவரை மாட்சிபடுத்துவதாகும்.  முக்கியமாக, இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு உடல் ரீதியாக அவர்களுடன் இருக்க மாட்டார் என்றாலும், அவர்கள் தொடர்ந்து தூய ஆவியாரின்  மூலம் வழிகாட்டுதலையும் புரிந்துணர்வையும் அளிப்பார் என்பதை உறுதியளிக்கிறார்.


சிந்தனைக்கு.

நற்செய்தியில், இயேசு தம் சீடர்களுக்கு   கடவுள் யார் என்பதைப் பற்றி உண்மையை தூய ஆவியார் எளிப்படுத்துவார் எனக் கூறுகிறார். ஆம், உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார் என்றும், இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார் என்றும் இயேசு  கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்னும் சில நாள்களில்  பெந்தகொஸ்து பெருவிழாவைக் கண்டாடவுள்ள நமக்கு தூய ஆவியாரின் வருகையால் நாம் பெறவுள்ள நன்மைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். 

முதல் வாசகத்தில், ஏதென்சு நகர மக்களுக்கு பவுல் அடிகள்  அவர்கள் அறியாது வழிபட்டு வரும்  கடவுள் யார் என்பதைப   சுட்டிக்காட்டி, அவர்களைத் தெளிவுப்படுத்தினார் அல்லவா? அவர் சுட்டிக்காட்டியது, தந்தை, மகன், தூய ஆவியாரான மூவொரு கடவுள்தான்.  இந்த மூவொரு கடவுளை நாம் அறிவுப்பூர்வமாக ஒருபோதும் முழுமையாக அறிந்திட முடியாது. ஆனாலும்.   கடவுள் பல நிகழ்வுகள் மூலம் தன்னை அவ்வப்போது வெளிப்படத்திக்கொண்டுதான் இருக்கிறார். அவர் விரும்புவதெல்லாம், நாம் அவரோடு  உறவில் இருக்க வேண்டும் என்பதாகும். 

நற்செய்தியில், எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுள் "உங்களுக்குச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது" என்று இயேசு கூறியதையும்  நம் கவனத்தில் கொள்ள  வேண்டும். கடவுளின் வெளிப்பாடு என்பது ஒரு நாளில் முடிந்துவிடும் ஒன்றல்ல. அது ஒரு தொடர்கதை.
நாம் கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது  இன்னும் எவ்வளவோ இருக்கிறது. கடவுளின் ஞானம் எல்லையற்றது.  அடுத்து அது ஒரு மறைபொருள்.  இந்த மறைபொருளைச்  சிறிது சிறிதாக நமக்கு வெளிப்படுத்தி நம் கண்களைத் திறப்பவர்  தூர் ஆவியார். இதற்கு நம்மில் தாழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்குமேயாகில் கடவுள் பற்றிய பல உண்மைகள் நமக்கு அருளப்படும். 

நாம் கடவுளின் ஆவியால் இயக்கப்படுகின்ற  மக்கள், அவரை 'அப்பா தந்தை ' என அழைக்கும் பாக்கியம் பெற்ற பிள்ளைகள், கிறிஸ்துவின் பங்காளிகள் என்ற புரிந்துணர்வோடு, வாழ்நாள் எல்லாம் அவரில் ஒன்றித்துப் பயணிப்போமானால் கடவுளின் வெளிப்பாடு நம்மில் நிகழ்ந்துகொண்டே இருக்கும். 

நிறைவாக எதேனசுக்கு பவுல் அடிகள்  சென்றதனால் அவ்வூர் மக்கள் உண்மை கடவுளை அறிய வாய்ப்பு ஏற்பட்டது. கடவுள் பிறவினத்தாருக்கு தன்னை வெளிப்படுத்த நம்மையும் அழைக்கிறார். நமது பதில் என்ன? புவுல் அடிகளைப் போல் பெரிய அளவில் முடியாவிட்டாலும் நமது சுற்றுவட்டாரத்தில், நமது கிறிஸ்தவ முன்மாதிரி வாழ்வால், அன்புப் பணியால் வாழும், உண்மை கடவுளை நம்மால் எளிதாக வெளிப்படுத்த முடியும். இதற்குத் துணிவு தேவை. தூய ஆவியார் துணையின்றி நம்மால் இயங்க முடியாது. எனவே, அவரைப் பற்றிக்கொள்ளவும் அவரால் இயக்கப்பட நம்மை கையளிப்போம். 

இறைவேண்டல்.

‘நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன’ என்றுரைத்த ஆண்டவரே, என்னில் நீர் வெளிப்படுத்தும்  அனைத்தையும் நான் பிறரோடு பகிர்ந்து வாழும் வரத்தை அருள்வீராக. ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452