நிலையான நம்பிக்கை நிலைவாழ்வுக்குரியது | ஆர்.கே. சாமி | VeritasTamil

31 சனவரி 2024, பொதுக்காலம் 4ஆம் வாரம் - புதன்
2 சாமுவேல் 24: 2, 9-17                   
மாற்கு  6: 1-6

முதல் வாசகம்

இன்றைய முதல் வாசகம் தாவீதையும் அவரது சுயநல முடிவையும் மையமிட்டிருகிறது.  எதிரிகளின் தாக்குதலை  தன் நாட்டு போர் வீரர்களால் சமாளிக்க முடியுமா என்ற அச்சம் தாவீதுக்கு எழுந்ததால், அவர் இஸ்ராயேல் மற்றும் யூதாவின் அனைத்து மக்கள் தொகையை கணக்கிட  முடிவு செய்கிறார். 

அவர் இவ்வாறு கணக்கெடுப்பில் ஈடுபட்டது,  கடவுள் மேல் அவர் கொண்ட நம்பிக்கையின் தளர்ச்சியை   வெளிப்படுத்தியது. அதாவது, கடவுள் நம் பக்கம் உள்ளார் என்று நம்பத் தவறிவிட்டார். கடவுளில் முழு நம்பிக்கை வைக்கத் தவறிய தாவீது,   “நான் மாபெரும் பாவம் செய்தேன்! ஆண்டவரே! உம் அடியானின் குற்றத்தை மன்னித்தருளும்! ஏனெனில் நான் பெரும் மதியீனனாய் நடந்து கொண்டேன்” என்று  மனம் வருந்தி வேண்டினார்.


ஆயினும், கடவுள் தாவீதுக்கு  அவரது தண்டனையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் வாழங்கினார்.  மூன்று வித தண்டனைகளில் ஒன்றை அவர் தேர்வுச் செய்ய வேண்டும் :

1. நாட்டில் ஏழு ஆண்டுகள் பஞ்சம் ஏற்படும். 
2.அவரது  எதிரிகள் அவரைத் துரத்த   மூன்று மாதங்கள் அவர் தப்பியோட வேண்டும்.  
3.அவர் நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்படும். 

அவர் தனது எதிரிகளால் மூன்று மாதங்கள் துரத்தப்படுவதைவிட  மூன்று நாட்கள் கொள்ளைநோயால் மக்கள் அவதியுறுவதே சிறப்பு என்று மூன்றாவது முன்மொழிதலைத்  தேர்ந்தெடுக்கிறார்.  இதன் மூலம் மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கினார்.  சுமார் எழுபதாயிரம் பேர் கொள்ளைநோயினால் இறந்தனர்.  

நிறைவாக, தாவீது, தனது சுய மதிப்பீடு   மற்றும் முன்னுரிமைகள் இரண்டையும் கலந்துவிட்டதாக ஒப்புக்கொண்டு,   மீண்டும் வருந்தி மன்னிப்பு கேட்கிறார்.


நற்செய்தி


இன்றைய நற்செய்தியில், இயேசு நேற்றைய தொழுகைக்கூடத் தலைவர் யாயீர் வீட்டிலிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊரான நாசரேத்துக்கு வந்தார்.  அங்கு, அவர் அவர் தொழுகைக்கூடத்தில் கற்பித்ததைக் கேட்டு, நாசரேத்தைச் சுற்றியுள்ள மக்கள்   இயேசுவின் அறிவு, திறன்கள் மற்றும் அதிகாரத்தின் ஆதாரம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

அங்கே உடல் நலமற்றோர் சிலர் மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அங்கிருந்து அகன்று போனார்.


சிந்தனைக்கு.


‘நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம் (1 கொரி 5:7) என்பது புனித பவுல் அடிகளின் படிப்பினை. நாம் காண்பவை நாளை மாறக்கூடும். இன்றிருப்போர் நாளை நம்மைவிட்டுப் பிரிக்கூடும். நம்பிக்கை என்பது நிலையற்ற ஒன்றில் வைப்பதல்ல. 

தாவீது, தனது படைவீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் எத்தனைபேர் உள்ளனர் என்று அறிய முற்பட்டார். படைவீரரின் எண்ணிக்கையைக் கொண்டு நாட்டின் வெற்றித் தோல்வயை நிர்ணயிக்க முடிவு செய்தார். இவ்வாறு கடவுள் மேல் கொண்ட நம்பிக்கையில் தளர்ச்சியுற்றார்.

நற்செய்தியில், நாசரேத்து மக்கள் இயேசுவை தங்களது முன்னாள் அண்டை வீட்டாராகவே பார்த்தனர். அவரது போதனை மற்றும் வல்ல செல்களை ஏற்று மெசியாவாக பார்க்கவும் அவரில் நம்பிக்கை வைக்கவும் அவர்களால் இயலவில்லை.

இவ்வாறு, தாவீது மற்றும் நாசரேத்து மக்களின் நம்பிக்கை விண்ணகத்தையல்ல மண்ணகத்தை மையமிட்டிருந்தது.

இறைவார்த்தையை நாளும் வாசித்தறியும், ஞாயிறுதோறும் மறையுரைகேட்டு, நற்கருணை திருவிருந்தில் பங்குபெறும்  நமது நம்பிக்கையின் நிலை என்ன? 
சொத்து, புகழ், பதவி, அதிகாரம் நம்மில் இருப்பதால், நாம் வெற்றி பெற்றோம் என்று நினைக்கிறோம். நமது முன்னுரிமைகள் இந்த மண்ணக செல்வங்களில் மையமிட்டிருக்கும் நிலையில், கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன எனும்  சித்தாந்தத்தை எண்ணிப்பார்க்க வேண்டும்.

உண்மையான இறைநம்பிக்கை நம்மில் இருக்குமேயானால், அது வழிபாட்டோடு இருந்துவிடாது. நற்செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டும். இறை உணர்வை நாள்தோறும் வளர்க்கும். மனிதம் நம்மில் சிறக்கச் செய்யும். 

மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? (மத் 16:26)  எனும் இயேசுவின் கேள்வியை மனதில் நிறுத்தி,  நற்கருணையின் மக்களாக வாழ்வோம்.

இறைவேண்டல்.

‘நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்’ என்றுரைத்த ஆண்டவரே, உம்மை விட்டு என்னை அகற்றும் அனைத்துத் தீய சக்திகளிடமிருந்தும் என்னை பாதுகாப்பீராக  ஆமென்
 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452