மனம் மாறிய திருடன்... | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
துறவி ஒருவர் குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, அருகில் உள்ள ஆற்றங்கரையில் குளித்து விட்டு குடிசைக்குத் திரும்புவார். இதைக் கவனித்த திருடன் ஒருவன், ஒரு நாள் துறவி குளிக்கச் சென்ற நேரத்தில் குடிசைக்குள் சென்றான். ஆனால் திருடுவதற்கு அங்கு விலையுயர்ந்த பொருள் எதுவும் இல்லை. ஏமாற்றத்தோடு குடிசையை விட்டு வெளியே வந்தான்.
திருடன் வெளியே வரும் நேரத்தில் துறவி அங்கு வந்துவிட்டார். திருடன் கையில் காலை உணவுக்காக வைத்திருந்த ரொட்டியிருப்பதைப் பார்த்தார். குடிசைக்கு உள்ளே சென்ற துறவி சிறிது நேரத்தில் வெளியே வந்தார்.
துறவியைப் பார்த்ததும் திருடன் ஓட ஆரம்பித்தான். அவனுக்குப் பின்னாலேயே துறவியும் தொடர்ந்து ஓடத் தொடங்கினார். திருடனுக்குப் பின் துறவி ஓடுவதைப் பார்த்த கிராம மக்கள், துறவியைப் பார்த்து பரிதாபப்பட்டனர். இளைஞர்கள் வேகமாக ஓடிச் சென்று திருடனைப் பிடித்தார்கள். அவனிடம், "உனக்குப் பின்னாலேயே துறவி ஏன் ஓடிவருகிறார்?" என்று கேட்டனர். அதற்கு அவன், "துறவியின் குடிசையிலிருந்து இந்த ரொட்டியைத் திருடி விட்டேன்" என்றான். "அற்பமான இந்த ரொட்டிக்காகவா திருடனைப் பிடிக்க துறவி ஓடி வரவேண்டும்' என்ற கேள்வியும், அவர் மீது வைத்திருந்த நல்ல மதிப்பும் மரியாதையும் கேள்விக்குறியாக மாறியது.
திருடனைப் பிடித்துக் கொண்டு வந்து, துறவியின் முன் நிறுத்தினார்கள். துறவி திருடனைப் பார்த்து. "நீ ரொட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு வந்துவிட்டாய். ஆனால் ரொட்டியோடு சேர்த்து சுவைத்து சாப்பிடுவதற்குரிய ஜாம், வெண்ணெய் எடுத்துக் கொள்ள மறந்துவிட்டாய். அதை உன்னிடம் கொடுப்பதற்காக ஓடிவந்தேன். இதோ அவற்றைப் பெற்றுக் கொள்" என்று கூறி திருடனிடம் கொடுத்தார் துறவி.
ரொட்டியைப் பெற்றுக் கொண்ட திருடன், "ஐயா, உங்கள் தியாகச் செயலைப் பார்த்து நான் மனம் மாறிவிட்டேன். இன்றிலிருந்து திருட்டுத் தொழிலை விட்டு விடுகிறேன்" என்றான்.
"யாராவது உங்கள் அங்கியை எடுத்துக் கொள்ள விரும்பினால், உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டுவிடுங்கள்" (மத் 5:40).
ஞானம் மூடருடைய அறிவெல்லைக்கு அப்பாற்பட்டது; எனவே, அவர் வழக்கு மன்றத்தில் வாய் திறக்கமாட்டார்.
( நீமொ 24:7)
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
