திரு அவையின் ஒற்றுமையின் அடையாளமாகப் பாடகர் குழுக்கள் திகழவேண்டும் -திருத்தந்தை லியோ வலியுறுத்தல்! | Veritas Tamil
திரு அவையின் ஒற்றுமையின் அடையாளமாகப் பாடகர் குழுக்கள் திகழவேண்டும் -திருத்தந்தை லியோ வலியுறுத்தல்!
வத்திக்கான், நவ. 26: கிறிஸ்து அரசர் பெருவிழா அன்று பாடகர் குழுக்களின் யூபிலி நிகழ்வு, தூய பேதுரு பெருங்கோவிலில் கொண்டாடப்பட்டது. அப்போது, பாடகர் குழுவினரைச் சந்தித்த திருத்தந்தை, பாடகர் குழுக்கள் திரு அவையின் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழவேண்டும் எனவும், நம்பிக்கையில் ஒன்றாகப் பயணிக்கும் மக்களாக விளங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
"பாடுபவர்கள் நட்பு மற்றும் அமைதியைத் தாங்கிப் பிடிப்பவர்களாக இருக்கவேண்டும்"
மேலும், நம் வழிபாட்டு இசை ஒற்றுமையை வளர்க்கவேண்டும் எனவும் முழுத் திரு அவையும் முன்னோக்கிப் பயணிக்க உதவவேண்டும்" எனவும் திருத்தந்தை வலியுறுத்தினார். திரு அவைக்குள் அன்பு, ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைந்த பிணைப்பைத் தங்கள் பணியின் மூலம் மீண்டும் கண்டுபிடிக்கவேண்டும் என்று பாடகர் குழுக்கள் மற்றும் இசைக்கலைஞர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
"பாடுவது நேசிப்பவர்களுக்குச் சொந்தமானது" என்ற புனித அகுஸ்தினாரின் வாக்கை நினைவு கூர்ந்த அவர், பாடுபவர்கள் அன்பையும் மென்மையையும் விருப்பத்தையும் மட்டுமல்லாமல், இதயங்களில் உள்ள வலிகளையும் வெளிப்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாததை வெளிப்படுத்தும் மனிதகுலத்தின் பரிசு இசை என்று குறிப்பிட்ட திருத்தந்தை, திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் கிறிஸ்துவில் புதிய வாழ்க்கையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அருளின் பாடகர்களாகத் திகழவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாடகர் குழு உறுப்பினர்களின் பணி, தயாரிப்பு, அர்ப்பணிப்பு, ஆகியவை உண்மையான பணி எனவும், எல்லாவற்றிற்கும் மேலாக, "அது ஓர் ஆழமான ஆன்மிக வாழ்க்கை" என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, அவர்கள் பாடுவதன் மூலம் மற்றவர்கள் செபிக்க உதவுகிறார்கள் என்றும் பாராட்டினார்.
"வழிபாட்டு இசையை ஒரு நிகழ்ச்சியாக மாற்றுவதை எச்சரித்துள்ள திருத்தத்தை, "பாடகர் குழு வழிபாட்டில் ஒரு சமூகத்தின் அங்கமாக இருக்கிறார்கள்; ஆகவே, ஆடம்பரங்களைத் தவிர்த்து அது ஒற்றுமையை வளர்க்கக் கூடியதாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.