லாவ்டாட்டோ சி' 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை தேசிய விழாவாகக் கொண்டாடிய இந்தோனேசியா.| Veritas Asia

இந்தோனேசியா - போகோர் பிரிவு மற்றும் இந்தோனேசியா லாவ்டாட்டோ சி’ இயக்கத்தின் தேசிய செயற்குழு (GLSI) இணைந்து நடத்திய லாவ்டாட்டோ சி’ அறிவுரையின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் 2025 செப்டம்பர் 5 முதல் 7 வரை நடைபெற்றது. இவ்விழா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

விழாவில், பல சிறப்பு உரைகள் இடம்பெற்றன. அதில் பங்கு பெற்றவர்களில் பிதா மார்ட்டின் ஹரூன், OFM, மற்றும் பிதா யோசேப் இரியாண்டோ சேகு ஆகியோர் அடங்குவர். மேலும், இந்தோனேசியாவில் லாவ்டாட்டோ சி’ ஆசிரியர்கள் என அங்கீகரிக்கப்பட்டவர்கள் அருட்தந்தை மார்ட்டின் ஹரூன், OFM, அருட்தந்தை இஸ்மார்டோனோ, SJ, அருட்தந்தை பெர்ரி சுடிஸ்னா விஜயா, அருட்தந்தை மார்தென் ஜெனருட் (இந்தோனேசிய கத்தோலிக்க திருச்சபையின் நீதியும் அமைதியும், குடிபெயர்ந்தோர் மற்றும் அலைந்து திரிபோர் ஆணையத்தின் செயலாளர்) மற்றும் டாக்டர் சன்னி கெராஃப் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

இவ்விழாவை பசுமை பொருளாதார சந்தை மற்றும் அனிமேட்டர்கள் நடத்தும் பயிலரங்குகள் சிறப்பித்தன. நிகழ்ச்சி, போகோர் மறைமாவட்ட ஆயர் பாஸ்கலிஸ் புருனோ சியூகூர், OFM மற்றும் தஞ்சுங் காராங் மறைமாவட்ட ஆயர் விந்சென்சியுஸ் செட்டியாவன் திரியாட்மோஜோ ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவு பெற்றது.

ஆய்வு மற்றும் தியான அமர்வுகள் சென்துல் நகரின் பதேபோகன் வாலி மற்றும் போகோர் மறைமாவட்டத்தின் கிராஹா பினா ஹியூமானியோரா வளாகங்களில் நடைபெற்றன. இந்தச் சந்திப்பில் 11 மறைமாவட்டங்களைச் சேர்ந்த 150 அருட்தந்தையர்கள், 20 துறவற சபையை சார்ந்த அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள் மற்றும் பொதுமக்கள் சமூகப் போராளிகள் ஆகியோர் இணைந்தனர். மேலும், இந்தோனேசிய கத்தோலிக்க மகளிர் அமைப்பு (WKRI), இந்தோனேசிய துறவியர் அருட்சகோதரிகள்  அமைப்பு (IBSI), மற்றும் இந்தோனேசிய கத்தோலிக்க திருச்சபையின் பாலின மற்றும் மகளிர் வலிமைப்படுத்தல் செயல்மன்றம் (SGPP-KWI) ஆகிய அமைப்புகளும் பங்கேற்றன.

திருப்பலி கொண்டாட்டத்தில் ஜாபோடெடபெக் (பெரும் ஜகார்த்தா பகுதி) முழுவதிலுமுள்ள பங்குத் திருச்சபைகளில் இருந்து வந்த மக்களும், லாவ்டாட்டோ சி’ செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், இந்நிகழ்ச்சி, இந்தோனேசியா லாவ்டாட்டோ சி’ இயக்கத்தின் கல்வித் துறை குழு தயாரித்த லாவ்டாட்டோ சி’ கல்வி தொகுப்பின் வெளியீட்டையும் சிறப்பித்தது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்தோனேசிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பொதுச்செயலாளர் திருமதி ரோசா விவியன் ரத்னாவதி, SGPP KWI சார்பில் அருட்சகோதரி ஸ்டெஃபானி, SJMJ, மற்றும் KWI கல்விக் குழுவிலிருந்து அருட்தந்தை விகோ ஆகியோர் பங்கேற்றனர்.