இறைவார்த்தையை ஏற்போர் வாழ்க்கை வளம்பெறும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 16ஆம் வாரம் – வெள்ளி
எரேமியா 3: 14-17
மத்தேயு 13: 18-23
இறைவார்த்தையை ஏற்போர் வாழ்க்கை வளம்பெறும்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில் தொடர்ந்து எரேமியாவின் செய்தியை வாசிக்கிறோம்.
கடவுள் தம்மை விட்டு விலகிச் சென்ற இஸ்ரயேல் மக்களை மனந்திரும்பி
தம்மிடம் திரும்பி வருமாறு அன்போடு அழைக்கிறார் என்றும், அவர்கள்
திரும்பி வந்தால், அவர்களுக்கு நல்ல மேய்ப்பர்களை வழங்கி,
ஞானத்தாலும் அறிவாலும் அவர்களை வழிநடத்துவேன் என்று
வாக்களிக்கிறார் என்று எரேமியா முழுங்குகிறார்ய
மேலும், வருங்காலத்தில் மக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப்
பேழையைப் பற்றியே சிந்திக்காமல், ஆண்டவரின் நேரடியான
உடனிருப்பை அனுபவிப்பார்கள் என்றும் அறிவிக்கிறார்.
எருசலேமானது "ஆண்டவரின் அரியணை" என்று அழைக்கப்படும்;
அனைத்து மக்களும் ஆண்டவரை வழிபட அங்கு கூடுவார்கள். இனி
அவர்கள் தங்கள் பிடிவாதமான தீய இதயத்தின் வழியில் நடக்காமல்,
ஆண்டவரின் வழியில் வாழ்வார்கள் என்று எரேமியா முன்னுரைக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு விதைப்பவரின் உவமையின் பொருளைத் தமது
சீடர்களுக்கு விளக்குகிறார். இறைவார்த்தை விதையைப் போன்றது;
மனிதர்களின் இதயம் அது விழும் நிலத்தைப் போன்றது. சிலர்
இறைவார்த்தையைக் கேட்டாலும் புரிந்துகொள்ளாமல் இருப்பதால்
தீயவன் அதை அவர்களிடமிருந்து பறித்துக்கொள்கிறான். சிலர்
மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாலும், துன்பங்களும் துன்புறுத்தல்களும்
வரும்போது விசுவாசத்தில் நிலைத்திருக்க முடியாமல் விலகிச்
செல்கிறார்கள். இன்னும் சிலர் உலகக் கவலைகள் மற்றும் செல்வத்தின்
மயக்கத்தில் சிக்கி, இறைவார்த்தை பலனளிக்காமல் போகிறது என்கிறார்.
அடுத்து நல்ல நிலத்தைப் பற்றி பகிரும்போது, நல்ல நிலத்தைப் போன்ற
இதயமுள்ளவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு, அதை உணர்ந்து,
தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று பொருள் தருகிறார்.
அதன் விளைவாக அவர்கள் முப்பது, அறுபது, நூறு மடங்கு பலன் தரும்
வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று முடிக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய இரு வாசகங்களையும் ஆழ்ந்து தியானிக்கும் வேளையில்,
இறைவன் நம்மீது கொண்டிருக்கும் அன்பையும், அந்த அன்பிற்கு நாம்
எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதையும் அழகாக நமக்கு
எடுத்துரைக்கின்றன
முதல் வாசகத்தில், இறைவன் தம்மைவிட்டு விலகிச் சென்ற மக்களை
மீண்டும் அன்போடு அழைக்கிறார். "என்னிடம் திரும்பி வாருங்கள்" என்று
அவர் இருகரம் விரித்து அழைப்பதை அறிகிறோம். இது, தவறு
செய்தவர்களைக் கூட இறைவன் ஒருபோதும் கைவிடுவதில்லை; மனம்
மாறி அவரிடம் திரும்பிவரும் அனைவரையும் அவர் ஏற்றுக்கொள்கிறார்
என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
நற்செய்தியில், இறைவார்த்தை எல்லோருடைய இதயத்திலும்
விதைக்கப்படுகிறது. ஆனால் அதன் பலன், விதையின் தரத்தைப்
பொறுத்தது அல்ல; அது விழும் நிலமான நம் இதயத்தின் தன்மையைப்
பொறுத்தது என்று இயேசு தெளிவுப்படுத்துகிறார்.
நாம் ஒவ்வொரி வாரமும் திருப்பலிக்குச் செல்கிறோம். முதல் பாகத்தில்
கண்டிப்பாக இறைவார்த்தை அறிக்கையிடப்படுகிறது. அனைவரது
செவிகளிலும் அவ்வாரத்தைகள் (விதைகள்) விழுகின்றன. இங்கே,
கடினமான இதயம் கொண்டோர், இறைவார்த்தையைக் கேட்பதோடு
நின்றுவிடுகிறார்கள் அதை அசைப்போடுவதில்லை. அவரகளில்
மலிந்துள்ள உலகக் கவலைகளும் செல்வ ஆசைகளும் அதை
நெரித்துவிடுகிறது. சிலர் திருப்பலிக்கு நற்கருணை பெறுவதற்காகவே
வருகிறார்கள். தாமதமாக வருவதைப் பற்றி அவர்கள்
கவலைப்படுவதில்லை.
இந்த இரு வாசகங்களும் ஒரே அழைப்பை நமக்குத் தருகின்றன.
இறைவன் எப்போதும் நம்மைத் தேடுகிறார்; ஆனால் அவரிடம் திரும்பி,
அவருடைய வார்த்தையை நல்ல நிலமாகிய இதயத்தில் ஏற்றுக்கொள்வது
நமது பொறுப்பு. திருப்பலியில், விவிலிய வாசிப்பில் நாம் கேட்கும்
இறைவார்த்தை நமது வாழ்க்கையை மாற்றுகிறதா என்பதை நாம் சிந்திக்க
வேண்டும்.
உண்மையில், இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை
அடைவதற்கு முயற்சியும், தாழ்மையும், இறையருளும் அவசியம் என்பதை
இயேசு எடுத்துக்காட்டுகிறார். முதல் மூன்று வகையான நிலங்கள்,
இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையின் படிப்படியான
வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன; ஆனால் அவை ஒவ்வொன்றும்
ஏதோ ஒரு வகையில் குறைவுடையவையாகவே உள்ளன. நம்மில்
பலவீனம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதன் காரணமாக,
வாழ்நாள் முழுவதும் பலவீனத்தைக் காரணம் காட்டி, சாக்குப்போக்குக்
கூறி வந்தால் நாம்தான் ஏமாளிகள் ஆவோம்.
இறைவார்த்தை நற்கருணைபோல், நமக்கான ஆன்மீக உணவு. அது
வல்லமையுடையது. நம்பிக்கையால் நிறைந்த உள்ளதில் அந்த விதை
ஏற்றுக்கொள்ளப்படும்போது, அது நன்கு பேணப்பட்டு வளர்ச்சியடைந்து
மிகுந்த பலனைத் தரும் எனும் நம்பிக்கை நம்மில் வேரூன்றட்டும்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, என் இதயமாகிய நிலத்தை உழுது பண்படுத்தி, நீர்
வெளிப்படுத்தும் ஒவ்வொரு இறைவார்த்தையையும் ஏற்றுக்கொள்ளும்
மனப்பக்குவத்தை எனக்கு அருள்வீராக ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452
