திறந்த இதயமே இறைவார்த்தையை உணரும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 16ஆம் வாரம் – வியாழன்
எரேமியா 2: 1-3, 7-8, 12-13
மத்தேயு 13: 10-17
திறந்த இதயமே இறைவார்த்தையை உணரும்!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகமானது, எரேமியா இறைவாக்கினரின்
செய்தியைக் கொண்டுள்ளது. இவர் பெரிய இறைவாக்கினர்களில்
ஒருவர். யூதா நாட்டில் இறைவனின் வார்த்தையை அறிவித்தார்.
அப்போது மக்கள் இறைவனை விட்டு விலகி, உருவ வழிபாடு, அநீதி,
ஒழுக்கக்கேடு ஆகியவற்றில் மூழ்கியிருந்தனர். "எனக்குப் பேசத்
தெரியாது; நான் இளைஞன்" என்று தயங்கியபோதும், இறைவன், "நான்
உன்னோடு இருக்கிறேன்; அஞ்சாதே" என்று இவரை அழைத்தார்.
இன்றைய வாசகத்தில், இறைவன் இஸ்ரயேல் மக்கள் தம்மீது
கொண்டிருந்த ஆரம்பகால அன்பையும் உறவையும் நினைவுகூருகிறார்.
அவர்களைப் பாலைநிலத்தில் நாற்பது ஆண்டுகால பயணத்தின்போது
பராமரித்ததை நினைவுபடுத்துகிறார். ஆனால், வாக்களிக்கப்பட்ட
நாட்டிற்குள் வந்த பிறகு, அவர்கள் இறைவனை மறந்து, நாட்டைத்
தீட்டுப்படுத்தி, பிற தெய்வங்களைப் பின்பற்றினர். குருக்களும்,
அரசர்களும், இறைவனைத் தேடாமல் தங்கள் கடமையில் தவறினர்.
இதைக் கண்டு வானங்களே வியந்து நடுங்குமாறு இறைவன் கூறுகிறார்.
ஏனெனில், உயிருள்ள நீரூற்றாகிய இறைவனை விட்டுவிட்டு,
தண்ணீரைத் தக்கவைக்க முடியாத உடைந்த தொட்டிகளை மக்கள்
தேர்ந்தெடுத்தனர். அதாவது, உண்மையான வாழ்வின் ஆதாரமாகிய
இறைவனை விட்டு, பயனற்ற பொய்யான நம்பிக்கைகளையும்
சிலைகளையும் நாடினர் என்பதைக் கண்டித்து எரேமியா அறிவூட்டுகிறார்.
நற்செய்தி.
இப்பகுதியில், இயேசு ஏன் மக்களிடம் உவமைகள் மூலம் பேசுகிறார்
என்று சீடர்கள் கேட்கிறார்கள். அதற்கு இயேசு, இறையாட்சியின்
மறைபொருள்களை அறியும் அருளானது சீடர்களுக்கு
வழங்கப்பட்டிருக்கிறது; ஆனால் அதனை ஏற்க மறுப்போருக்கு அது
வெளிப்படுவதில்லை என்று விளக்குகிறார்.
மக்கள் பார்த்தும் காணவில்லை; கேட்டும் புரிந்துகொள்ளவில்லை.
ஏனெனில் அவர்களுடைய இதயம் கடினமாகிவிட்டது. இதனிமித்தம்,
இயேசு ‘உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார்.
மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ என்றார்.
ஆனால் சீடர்கள் பேறுபெற்றவர்கள்; அவர்கள் கண்கள் காண்கின்றன,
காதுகள் கேட்கின்றன. பல இறைவாக்கினர்களும் நீதிமான்களும் காண
விரும்பியவற்றை அவர்கள் காணும் அருளைப் பெற்றுள்ளனர் என்று
முடிக்கின்றார்.
சிந்தனைக்கு.
இறைவார்த்தையை நம்பிக்கையுடனும் கீழ்ப்படிதலுடனும்
ஏற்றுக்கொள்பவர்களே உண்மையான பேறுபெற்றவர்கள். மேலும்,
திறந்த மனதுடன் இறைவார்த்தையை ஏற்றுக்கொள்பவர்களுக்கே அதன்
ஆழமான உண்மை வெளிப்படும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இன்றைய இரு வாசகங்களும் இறைவனின் குரலைக் கேட்போரின்
இதயம் பற்றிப் பேசுகின்றன. எரேமியா இறைவாக்கினர் வழியாக,
இறைவன் இஸ்ரயேல் மக்களின் மீது அவர் காட்டிய அன்பை
நினைவுகூருகிறார். ஆனால், அவர்கள் பின்னர் இறைவனை விட்டு
விலகி, உயிருள்ள நீரூற்றாகிய ஆண்டவரை விட்டுவிட்டு, தண்ணீர்
தங்காத உடைந்த தொட்டிகளைத் தேர்ந்தெடுத்தனர். இதனால் அவர்கள்
ஆன்மீக வாழ்வு வறண்டுபோனதை இஸ்ரயேல் வரலாற்றில் நாம்
அறிந்துள்ளோம்.
நற்செய்தியில், இயேசு உவமைகளில் பேசுவதற்கான காரணத்தை
விளக்குகிறார். திறந்த இதயமுள்ளவர்கள் இறையாட்சியின்
மறைபொருளைப் புரிந்துகொள்வார்கள்; ஆனால் மனதை
மூடிக்கொள்பவர்கள் பார்த்தும் காணமாட்டார்கள், கேட்டும்
புரிந்துகொள்ளமாட்டார்கள் என்றுரைக்கிறார். இறைவனின் வார்த்தை
அனைவருக்கும் வழங்கப்படுகிறது; ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும்
மனப்பக்குவம்தான் பலனைத் தருகிறது என்று அறிவுறத்தப்படுகிறோம்.
நாமும் இன்று, உலகத்தின் கவர்ச்சிகளையே நம்பி, இறைவனைப்
புறக்கணிக்கும் "உடைந்த தொட்டிகளை" தேடுகிறவர்களாக வாழ்கிறோம்
என்றால் மிகையாகாது. இறைவனை வாழ்வின் ஊற்றாக
ஏற்றுக்கொண்டு, அவரது வார்த்தையைத் திறந்த இதயத்துடன் கேட்டு
வாழ்வோரே வாழ்வு பெறுவோர்.
இறையருளோடு இதயம் ஒத்திசைவாக இருக்கும்போதுதான் நமது மனம்
இறைவனின் அருளை உணர்ந்து காணும் திறனைப் பெறுகிறது. இதுவே
ஞானம் என்னும் கொடை. இதை எளிதில் நாம் பெற இயலாது. அவரது
வார்த்தைக்கும் படிப்பினைக்கும் கீழ்படிதலில் மட்டுமே அவரது அருள்
வாழ்வை அனுபவிப்பது சாத்தியம்.
நற்செய்தியில், “எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும்
உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும்
அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்” என்கிறார் ஆண்டவர். நமது
இதயம் எவ்வளவு கடினமான நிலமாக இருந்தாலும், தமது
இறைவார்த்தை என்னும் விதையை ஒவ்வொரு இதயத்திலும் விதைக்க
இயேசு உறுதியாய் செயல்படுகிறார்.
அகவே, நாம் குணப்படுத்தப்பட வேண்டுமாயின் முதலில், தாழ்மையான
மனதுடன் அவரது இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டு, அது நமது
உள்ளத்தில் வேரூன்றி கனியளிக்க இடமளிக்க வேண்டும்
இறைவேண்டல்.
அன்பான இயேசுவே, உமது வார்த்தையை கேட்கும் செவியையும், உமது
செயல்களை உணரும் கண்களையும் எனக்குத் தொடரந்து அருள்வீராக.
ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452
