கடவுளின் திருவுளத்தில் வாழ்வதே வாழ்வு! | ஆர்கே. சாமி | Veritas Tamil
15 ஜனவரி 2026
பொதுக்காலம் முதல் வாரம் – வியாழன்
1 சாமுவேல் 4: 1-11
மாற்கு 1: 40-45
கடவுளின் திருவுளத்தில் வாழ்வதே வாழ்வு!
முதல் வாசகம்.
இந்தப் பகுதி பெலிஸ்தியர்களால் இஸ்ரயேலர் தோற்கடிக்கப்பட்டதைப் பற்றியும் கடவுளை உண்மையாக நம்பியிருப்பது பற்றியும் ஆழமான பாடத்தையும் வெளிப்படுத்துகிறது.
இஸ்ரயேலுக்கும் பெலிஸ்தியருக்கும் இடையே ஏற்பட்ட போரில் இஸ்ரயேல் தற்கடிக்கப்பட்ட நிலையில், கடவுள் தங்களைக் கைவிட்டதால்தான் இந்தத் தோல்வி ஏற்பட்டதாக இஸ்ரயேன் மூப்பர்கள் நம்பினர். எனவே சீலோவிலிருந்து உடன்படிக்கைப் பெட்டியைப் போருக்குக் கொண்டு வர முடிவு செய்கிறார்கள், அதன் உடனிருப்பு வெற்றியை உறுதி செய்யும் என்று நம்பினார்கள்.
பேழை தங்கள் வசம் கொண்டு வரப்பட்ட வேளை மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்கிறார்கள் - பூமியே எதிரொலிக்கும் அளவுக்கு சத்தமாக கொண்டாட்டம் எதிரொலித்தது.
பெலிஸ்தியர்கள் கூச்சலைக் கேட்டு அஞ்சினார்கள். வலிமைமிக்க கடவுள் தங்களுக்கு எதிராக வந்துவிட்டதாக நம்பி அஞ்சினர். பிலிஸ்தியர் மத்தியில் பயம் இருந்தபோதிலும், இஸ்யேல் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டது; சுமார் 30,000 இஸ்ரயேலர் இறந்தனர் என்று வாசிக்கிறோம். உடன்படிக்கைப் பெட்டியும் பிலிஸ்தியரால் கைப்பற்றப்படுகிறது. மேலும், ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் மாண்டனர் என அறிகிறோம்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இயேசுவை அணுகி, அவர் முன் மண்டியிட்டு, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று மன்றாடுகிறான். இரக்கத்தால் தூண்டப்பட்டு, இயேசு சமூக மற்றும் மதத் தடைகளை மீறி, அவனைத் தொட்டு உடனடியாகக் குணப்படுத்துகிறார். பின்னர் இயேசு குணப்படுத்துதல் பற்றி யாரிடமும் சொல்லாமல், குருவிடம் மட்டும் சென்று நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று கட்டளையிடுகிறார். அதற்கு பதிலாக, அந்த மனிதன் தமக்கு நேர்ந்த அற்புதத்தை ஊர் முழுக்க பறைசாற்றவே, எல்லா இடங்களிலும் மக்கள் கூட்டம் இயேசுவைப் பின் தொடர்ந்ததால், இயேசு வெளிப்படையாக பிற நகரங்களுக்குள் நுழைவது பெரும் சவாலாக அமைந்தது.
சிந்தனைக்கு.
தொழுநோயாளியின் வார்த்தைகள் ஆழ்ந்த நம்பிக்கையை நமக்கு இன்று வெளிப்படுத்துகிறது. அவர் இயேசுவுடன் பேரம் பேச முயற்சிக்கவில்லை. “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று இயேசுவின் தயவுக்கும் இரக்கத்திற்கும் விட்டுவிடுகிறான். "நீங்கள் விரும்பினால்...".என்பது நம்பிக்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. நாம் எதிர்பார்ப்பதைப் பெறுவதற்கு முன்பே கடவுளின் திருவுளம் நம்மில் நிறைவேற நாம் நம்மை கையளிக்க வேண்டும்.
இயேசு அந்த தொழுநோயாளியின் மன்றாட்டில் "மனதுருகி" அந்த மனிதனைத் தொடுகிறார். தொழுநோயாளிகளைத் தொடுவது கூடாது. ஆனால் இயேசு அந்த மனிதனை உடல் ரீதியாக மட்டுமல்ல, சமூகத் தடைகளில் இருந்தும் மீட்டெடுத்தார். அதே வேளையில் குருவிடம் அனுப்பியதன் மூலம் திருச்சட்டத்தையும் மதித்தார்.
முதல் வாசகத்தில் கடவுள் (உடன்படிக்கை பேழை) தங்கள் வசம் இல்லாததால்தான் இஸ்ரயேலர் போரில் தோல்வியுற்றதாக எண்ணி பேழையைக் கொண்டு வந்தனர். பின்னரும் தோல்வியுற்றனர். ஏன்? அவர்களது எண்ணம் நிறைவேற வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருந்தது. அவர்களின் வெற்றிக்காக கடவுளிடம் தாழ்ந்து மன்றாடவில்லை. வெற்றி தோல்வியில் உமது விருப்பம் நிறைவேறட்டும் என்று முதலில் கடவுளிடம் (யாவேயிடம்) மன்றாடியிருக்க வேண்டும்.
‘ஆண்டவர் கற்பித்த இடைவேண்டில்’ இயேசு, ‘உமது திருவுளம் விண்ணுலகில் செய்யப்படுவதுபோல மண்ணுலகிலும் செய்யப்படுவதாக’ என்று மன்றாட கற்பித்தார்.
இந்த உண்மை, நம்முடைய சொந்த விருப்பங்களை விட கடவுளின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது, கடவுளின் திட்டம் நம்முடையது அல்ல என்பதை நாம் ஏற்க வேண்டும். ‘என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல’ (ஏசாயா 55:8) என்கிறார் ஆண்டவர்.
நாம் கிறிஸ்துவின் சீடர்களாக இருக்க விரும்பினால், அவருடைய நிபந்தனைகளின்படி அவரைப் பின்பற்றுவது முக்கியம். அனைத்திலும் மேலாக, நமது மன்றாட்டில் ‘தாழ்ச்சி இன்றியமையாதப் பண்பு என்பதை மனதில் கொள்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை முழு இதயத்தோடு அன்பு செய்யும்போது, உமது திருவுளத்திற்கு நான் அடிபணிய எனக்குத் தேவையான அருளைத் தந்தருள்வீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452