விரைவான சமரசம் வாழ்வு தரும்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

தவக்காலம் முதல் வாரம் – வெள்ளி
எசேக்கியேல் 18: 21-28
மத்தேயு 5: 20-26 
 
 
விரைவான சமரசம் வாழ்வு தரும்!
 
முதல் வாசகம்.

முதல் வாசகத்தில்  இறைவாக்கினர் எசேக்கியேல், கடவுள் நமக்கு சுதந்திரமான விருப்பத்தைத் தந்துள்ளத்தைப்  பற்றிப் பேசுகிறார். இவர், எருசலேமின் வீழ்ச்சிக்கு முன்பும் பாபிலோனியாவிற்கு நாடுகடத்தப்பட்ட காலத்திலும்   இறைவாக்கினர் எசேக்கியேல் இறைவாக்குரைத்தார். இவரும் பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டவர்தான் (எசே 1:1). இவர்  ஆழ்ந்த இறைப்பற்றும் கற்பனை வளமும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இன்றைய வாசக்தில், இறைவாக்கினர் எசேக்கியேல்  “தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு மனம்மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும், நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி” என்று யூதர்களுக்கு அறிவுறுத்துகிறார்.   சுருங்கச் சொன்னால், பொல்லார் தன் தீய வழியை விட்டு மனம் மாற வேண்டும். நேர்மையாளர் தன் நேரிய வழியில் நிலைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் எசேக்கியேல்.   

நற்செய்தி.

நற்செய்தி வாசகத்தில், மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களின் வாழ்வைவிட  தம் சீடர்களின் வாழ்க்கை முறை சிறந்ததாக இருக்க வேண்டும் என இயேசு  விவரிக்கிறார்.   அவரது படிப்பினையில்,  அடுத்திருப்பவருக்கு எதிராக  “கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்" என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டதை இயேசு மறுத்து,   "தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ "முட்டாளே" என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார் என்கிறார். இது முற்றிலும் மாறுபட்ட படிப்பினையாக இயேசுவால் தரப்படுகிறது.

 சிந்தனைக்கு.

 கடவுள் தம் ஒரே மகனை உங்கிற்கு அனுப்பியதன் நோக்கம் அதற்கு தீர்ப்பளிக்க அல்ல. மாறக, உலக மக்கள்  எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதாகும்   (யோவா 3: 16).  நிலைவாழ்வு என்பது இறப்பிற்குப் பின் கிடைப்பது என்றாலும், அதற்கான தொடக்கம் இவ்வுலகில்தான் உள்ளது. மனமாற்றம் இல்லாமல் நிலைவாழ்வு இல்லை என்றால் மிகையாகாது.  எனவே, தீய எண்ணமும்  செயலும் கொண்டோர் அவற்றை விட்டொழித்து  நீதியையும் நேர்மையையும் கடைப்பிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார் இறைவாக்கினர் எசேக்கியேல். 
மனமாற்றத்திற்கு இன்றியமையாதது  மன்னிப்பு.  ஆனால் மன்னிப்பு மட்டும்  உண்மையில் போதுமானது அல்ல,  இறுதி இலக்கு சமரசம் ஆக வேண்டும். மேலே உள்ள இன்றைய  நற்செய்தியில், நம் எதிரிகளுடன் "தீர்வு காண" இயேசு நம்மை அறிவுறுத்துகிறார், இது சமரசத்தைக் குறிக்கிறது.  "உங்கள் மீது குற்றம் சாட்டுபவர்களுடன் விரைவாக நட்பு கொள்ளுங்கள்..." எனப்பட்டுள்ளது. 
முறிந்த நமது உறவை சமரசம் செய்து மீண்டும் நிலைநாட்ட நம்மால்  முடிந்த அனைத்தையும் செய்யத் தவறினால், நாம் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.  ஏனென்றால் இது நம் ஆண்டவர் ஒவ்வொரு நாளும் நமக்கு வழங்கும் இரக்கத்தின் அடிப்படையிலான வாய்ப்பாகும். 
வழக்கமாக, நாம் நமது பாவத்திற்காக ஒருபோதும் போதுமான அளவு வருத்தப்பட மாட்டோம்.  கண்டும் காணாமல் இருந்துவிடுவோம் ஆனாலும்  கடவுள்   நம்மை மன்னித்து, நம்முடன் சமரசம் செய்கிறார்.  எனவே,   நாம் மற்றவர்களுக்கு இதே மன்னிப்பை, இரக்கத்தை வழங்கத் தவறினால், அதற்கான விளைவை நாம் எதிர்கொள்ள  வேண்டியிருக்கும், இந்த தவக்காலத்தில் இதை அறிந்து, உணர்ந்து செயல்படுவோம்.


இறைவேண்டல்.

அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்க்கையில் எப்போதும் பாவியை அன்பு செய்ய முயற்சிக்கும் ஒரு இதயத்தை எனக்கு அருள்வவீராக.  ஆமென்.


 

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452