பொறுத்தார் பூமி ஆள்வார்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

26 ஜூலை 2025                                                                                                                  
பொதுக்காலம் 16ஆம் வாரம் – சனி
விடுதலை பயணம 24: 3-8
மத்தேயு  13: 24-30


பொறுத்தார் பூமி ஆள்வார்!

முதல் வாசகம்.
 

 மோசே பத்து கட்டளைகளையும் பிற சட்டங்களையும் கடவுளிடமிருந்து பெற்ற பிறகு இகழ்ந்தவற்றை முதல் வாசகம் குறிப்பினுகிறது.  அவர் அவற்றை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறார், மேலும் அவர்கள் விதிகள் மற்றும் கட்டளைகளுக்குக் கட்டுப்பட ஒப்புக்கொள்கிறார்கள். பின்னர்  இஸ்ரயேலர்   கடவுளின் கட்டளைகளை ஏற்றுக்கொண்டதைக் கொண்டாடுகிறது.   

அவர்கள் இப்போது பலிகொடுத்தல் வாயிலாக இரத்தப் பிணைப்பால் இணைக்கப்படுகின்றனர்.  இதன் பொருள் மக்கள் கடவுளுடனும் கடவுள் அவர்களுடனும் இணைந்துள்ளனர் என்பதாகும். சட்டங்களை மீறுவதன் மூலம் அவர்கள் இந்த உறவு ஒன்றிப்பை முறித்துக் கொண்டதாகப் பொருள்படும். 

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசு மீண்டும் கூட்டத்தினருடன் ஒரு உவமையைப் பகிர்ந்து கொள்கிறார். இந்த உவமை கடவுளின் ஆட்சியை கோதுமையில் களைகள் வளர்வதற்கு ஒப்பிடுகிறது.  விதைப்பவர் நல்ல விதையை (கோதுமை) மட்டுமே விதைத்தார்.  எதிரியோ களைகளின் விதைகளைப் விதைத்தன் மூலம  நல்ல விதைகளின் வளர்ச்சிக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. 

இந்த உவமைக்கு முக்கியமானது, களைகளை  பிடுங்காமல் இருப்பதில் உரிமையாளர் கொண்ட  (கடவுள்) ஞானம் ஆகும்.  களைகளைப் பிடுங்கும்போது, அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் பணியாளர்கள்  பிடுங்கிவிடக் கூடும். ஆதலால்,  அறுவடை வரை இரண்டும் வளரட்டும் என்கிறார். 

சிந்தனைக்கு.

இன்றைய நற்செய்தி வாசகம் கோதுமை மற்றும் களையின் உவமையைப் பற்றியதாக உள்ளது.  இவற்றில் ‘களை’ என்பது விரும்பி  பயிரிடப்படாதப் பயிராகும்.   களைகள் விரும்பி விதைக்கப்படும்  தாவரங்களை விட விரைந்து  வளர்வதோடு, நல்ல பயிர்களை  நெரித்துவிடும். மேலும்  நல்ல பயிர்களுக்கான உரங்களையும் களைகள் பங்குபோட்டுக்கொள்ளும்.  இதனால் நல்ல பயிர்களின வளர்ச்சி குன்றும்.ஆனாலும், இயேசு பொறுமை காக்கப் பணிக்கிறார். ஏனெனில் களைகளைப் பிடுங்குப் போது தவறுதலாக நல்ல பயிர் பிடுக்கப்படலாம். இங்கே, ஆண்டவர், அவசப்பட்டு நல்லவர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்கிறார்.

அடுத்து, களைகள் என்பது இறைமக்களுடன் உலகில் வாழும் தீயோரைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளலாம். மேலும், இந்த உவமை கோதுமை மற்றும் களை இரண்டாலும் விதைக்கப்பட்ட நம் இதயங்களையும் குறிக்கிறது. கோதுமை குறிக்கும் நல்லவர்களையும் களைகள் குறிக்கும்  தீயவர்களையும் பிரிப்பது கடைசி நியாயத்தீர்ப்பில் நடைபெறும். ஆதலால், இப்போதைக்கு  களைகள் வளரட்டும் என்கிறார் ஆண்டவர். ஏனெனில், நல்லவர்களோடு தீயவர்களை வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாதவர்களால் நல்லவர்கள் பாதிக்கப்படக்கூடும் என்று ஆண்டவர் அறிவுறுத்துகிறார்.

மற்றொரு பக்கம், கோதுமையும் களைகளும் நல்ல மற்றும் தீய நபர்களின் விளைவுகளை மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரிடமும் உள்ள நல்ல மற்றும் தீய குணங்களையும்  குறிக்கின்றன. நம் அனைவருக்கும் மனதுக்குள் நன்மையும் தீமையும் உண்டு. எனவே, மற்றவர்களை அவசரப்பட்டு நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று தீர்ப்பிடுவதும் கூடாது  பொறுமை காக்க வேண்டும். 

"பதறாத காரியம் சிதறாது" என்பது நல்லதொரு பழமொழி.   பதற்றப்படாமல் நிதானமாகச் செய்யப்படும் காரியம் நன்மையில் முடியும்.  சுருக்கமாக, இந்த பழமொழி நிதானத்தின் முக்கியத்துவத்தையும், பதற்றத்தின் தீமைகளையும் எடுத்துரைக்கிறது. ஆண்டவரும் இந்த நிதானத்தையே வலியுறுத்துகிறார். பொறுப்பார் பூமி ஆள்வார் என்பதும் நமது பொறுமைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
 
இறைவேண்டல்.

ஆண்டவரே, நீர் எம்மில் விதைத்த  நல்ல விதையை தீமையின் மத்தியில் வளர அனுமதிக்கிறீர்கள், கெட்டது நல்லதாக மாற வாய்ப்பளிக்கிறீர்கள் என்பத்காக உமக்கு நன்றி நவில்கிறேன். ஆமென்


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452