பலன் தரும் நிலமாகட்டும் நமதுள்ளம்! | ஆர்கே. சாமி |Veritas Tamil

23 ஜூலை 2025
பொதுக்காலம் 16ஆம் வாரம் – புதன்
விடுதலை பயணம 16: 1-5, 9-15
மத்தேயு 13: 1-9
பலன் தரும் நிலமாகட்டும் நமதுள்ளம்!
முதல் வாசகம்.
எகிப்திலிருந்து வெளியேறிய ஏறக்குறைய இரு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்றதை முதல் வாசகம் விவரிக்கிறது. இப்போது இஸ்ரயேலர்க எகிப்திலிருந்து கொண்டு வந்த உணவு தீர்ந்து போயிருக்கிறது. எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது, குறைந்தபட்சம் சாப்பிட உணவு இருந்தது என்றும், இப்போது அவர்களின் அடுத்த உணவு எங்கிருந்து வரப்போகிறது என்றும் தெரியவில்லை என்றும் மோசேயிடம் (மற்றும் கடவுளிடம்) முணுமுணுக்கத் தொடங்குகிறார்கள்.
அவர்களுடைய முணுமுணுத்தல் மத்தியிலும், கடவுள் அவர்கள் மீது இரக்கம் காட்டுகிறார், மேலும் அவர்களுக்கு "மன்னா" எனும் காடைகளை உண்பதற்கு அளித்ததன் மூலம் தெய்வீக அருளைக் காட்டுகிறார்.).
நற்செய்தி.
இன்று இயேசு கூறிய விதை விதைப்பவர் உவமையைக் கேட்கிறோம். இந்த உவமையின்படி, விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில் சில விதைகள் வழியருகே விழுந்து மிதியுண்டன. ஆகாயத்துப் பறவைகள் வந்து அவற்றை உண்டன. சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தன. அவை முளைத்தபின் ஈரமில்லாததினால் வெயிலில் உலர்ந்துபோயின. சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன. முட்செடிகளோடு வளர்ந்ததால் அவவையும் நெருக்கிப்போட்டன. சில விதை நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார்.
நிறைவாக இந்த உவமையைப் பகன்றபின், கேட்பதற்குக் செவியுள்ளவன் கேட்கட்டும் என்று முடிக்கிறார இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய விதைப்பவர் உவமை ஒருவர் கடவுளின் வார்த்தைக்கு எப்படிப் பதிலளிக்கின்றார் என்பதை உணர்த்துவதாக இருக்கின்றது.
சிந்தனைக்கு.
நற்செய்தியில், இயேசு ஒரு படகில் ஏறி தனது மறையுரையைத் தொடர்கிறார். அவர் விதைகள் விதைப்பவரைக் கொண்டு ஓர் உவமையை உருவாக்கி விண்ணரசு செய்தியை வழங்குகிறார். இயேசுவின் உவமைகள் எப்போதுமே பாமர மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலேயே இருக்கும். இந்த உவமையும் அப்படியே, விதைகளையும், விதைப்பவனையும் இயேசு களமாக தேர்ந்தெடுக்கிறார்.
விதைப்பவர் விதைகள் விழும் நிலத்தின் வகையைப் பொறுத்து வெவ்வேறு எதிர்வினைகளைப் பார்க்கிறார். இங்கே நான்கு விதமான நிலப்பரப்பு விவரிக்கப்படுகிறது. இது நான்கு விதமான மனநிலையைக் கொண்ட மக்களைக் குறிக்கிறது.
1.வழியருகே உள்ள நிலம்,
2.கற்பாறை நிலம்,
3.முள்ளுள்ள நிலம்,
4.நல்ல நிலம்.
விதைக்கச் செல்பவருக்கு விதை இன்றியமையாத ஒன்று. விதையின்றி எதை விதைப்பது? நமக்கு விதை என்பது இறைவனின் வார்த்தை. இறைவனின் வார்த்தை நம் கையில் உள்ளது. மேலும், அது இலவசமாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
விதைகள் மண்ணில் புதைக்கப்படாவிட்டால் அவை முளைப்பதில்லை. இறைவனின் வார்த்தையும் அவ்வாறே, விவிலியத்திலேயே இருந்துவிட்டால் யாருக்கு என்ன பயன்? அது மனித மனங்களில் (நிலங்களில்) விதைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு விதையின் வளர்ச்சியை மூன்று பிரிவாகப் பார்க்கலாம்
1.மண்ணைப் பிளந்துகொண்டு வெளியே வரும் முளை.
2.கதிராக வளர்ந்து வரும் செடி.
3.கதிருக்குள் தானியம் கொண்ட முதிர்ச்சி
இன்றைய கால கட்டத்தில் இறைவார்த்தையானது, திருப்பலியிலும், மறைக்கல்வி வகுப்புகளிலும், விவிலய வகுப்புகளிலும் நம் உள்ளத்தில் விதைக்கப்படுகிறது. இங்கே விதைப்பவர் இறைவன். ஆனால், நம்மில் விழும் இறைவார்த்தை நம்மில் வளர்ச்சியுற எவை தடையாக உள்ளன என்பதை ஆழ்ந்தறிந்து, உள்ளத்தை நல்ல நிலமாக மாற்ற வேண்டும். என்றும் அவசரம், எதிலும் அவசரம் என்றுள்ள இக்காலத்தில் கடவுளுடைய வார்த்தையை நாம் எவ்வாறு மனதில் பதிய வைக்க வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். ஒரு காதில் வாங்கி, அடுத்த காது வழியாக விட்டுவிட்டால், நாம் சாலையோரம், வழியோரம், முட்புதரிலும் விழுந்த விதைகளுக்கு ஒப்பாவோம்.
எனவே இந்த உவமை, கடவுளுடைய வார்த்தையைக் கேட்பவர்களாக மட்டுமல்லாமல், அதைச் பகிர்பவர்களகாவும் இருக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது;
சுருக்கமாக, இந்த நற்செய்தி தனிப்பட்ட சிந்தனையை ஊக்குவிக்கிறது: உங்கள் இதயம் கடவுளுடைய வார்த்தைக்கு வளமான நிலமாக இருக்கிறதா? இன்று நாம் எவ்வாறு பிரதிபலிக்கிறோம் என்பது நமது ஆன்மீக அறுவடையை வடிவமைக்கிறது.
இறைவேண்டல்.
ஆண்டவ,ஏ. உம் வார்த்தைகளை என் வாயில் வைத்து, இறைவாக்குப் பணியை தொடர என்னை ஆசீர்வதியும். ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
