பேய் பேயாக இருக்கட்டும், நாம் நாமாக இருப்போம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
திருக்காட்சி விழாவுக்குப் பின் புதன்
1 யோவான் 4: 11-18
மாற்கு 6: 45-52
பேய் பேயாக இருக்கட்டும், நாம் நாமாக இருப்போம்!
முதல் வாசகம்
உலகமும் மனுக்குலமும் தோற்றுவிக்கப்பட நாள் முதல், கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. அப்படியிருக்க, கடவுள் அவரது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார் எனவும் யோவான் குறிப்பிடுகிறார். மேலும், நமது அன்றாட நம்பிக்கை வாழ்வுக்குச் சவாலாக, இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார் என்றும் கூறுகிறார்.
தொடர்ந்து, இன்றைய முதல் வாசகப் பகுதியில், மற்றொரு படிப்பினையை யோவான் தருகிறார். ஆம், கடவுள் அன்பாக இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில் இருக்கிறோம் என்று நேர்மறையான போதனையைத் தருகிறார். கிறிஸ்வில் கொண்டுள்ள நமது வாழ்வு அன்புக்குரியது என்பதை வலியுறுத்துகிறார்.
நற்செய்தி.
நேற்றைய நற்செய்தியில், இயேசு கலிலேயா கடோரப் பகுதியில் திரண்டிருந்த மக்களுக்கு உணவளித்தப்பின் தம் சீடர்களை படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டளையாகப் பணிக்கவே, சீடர்களும் புறப்பட்டனர். இயேசுவோ, தனிமையில் இறைவேண்டலுக்காக அருகில் இருந்த மலைக்குச் சென்றார்.
பொழுது போனது, படகோ அக்கறை போய் சேரவில்லை, மாறாக நடுக்கடலில் இருந்தது. எதிர்க்காற்று அடிக்கவே படகால் முன்னோக்கிச் செல்ல முடியாமல் தந்தளித்த வேளை, சீடர் அஞ்சினர். அப்போது, இயேசு சீடர்கின் நிலை கண்டு, கடல்மீது படகை நோக்கி நடந்து வந்தார். அது நான்காம் காவல்வேளை என்று மாற்கு குறிப்பிடுகிறார். ஆதாவது, அதிகாலை 3 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட காலம். அந்த இருளில் ‘அது பேய்’ என்று எண்ணி அவர்கள் அலறினார்கள்.
அடுத்து, இயேசு “துணிவோடு இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனதாக மாற்கு தெளிவுப்படுத்துகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியை பலமுறை நாம் கேட்டிருக்கறோம், வாசித்தும் உள்ளோம். நாம் இதே பகுதியை யோவான் நற்செய்தியில் 6:14-15 ல் பார்த்தால் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்த பின்னர், ‘இவர்தான் வரவிருந்த மெசியா என்று இயேசு மீது நம்பிக்கை கொண்டு, மக்கள் அவரை அரசராக்க முயன்றார்கள் என்று அறிகிறோம். மக்களின் எண்ணத்தை இயேசு முன்கூட்டியை அறிந்திருந்தபடியால், அவர்களை விட்டு விரைவாக விலக எணணினார் என்று யோவான் குறிப்பிடுகிறார்.
ஆனாலும், இரவு நேரம் என்பதால் தம் சீடர்களை தம் மனக் கண்முன் கொண்டிருந்தார். சீடர்கள் அவரை நம்பி வந்தவர்களாயிற்றே. இறைவேண்டலை முடித்துக்கொண்டு கடலுக்கு வந்தவர் தந்தளிக்கும் படகை நோக்கி நடக்கிறார். தரையில் நடக்கலாம், மலையில் ஏறலாம், பள்ளத்தில் இறங்கலாம் கடலில் நடப்பது இயலுமா?
யூதர்கள் கடலில்தான் பேய்கள் வாழ்கின்றன என்ற நம்பிக்கையில் மூழ்கி இருந்தவர்கள். எனவே, இருளில் இயேசு கடல் மீது நடந்து வருவதைக் கண்டவர்கள் இயேசுவை ‘பேயாக’ பார்த்தனர். இயேசு படகில் ஏறியதும், படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்” என்றனர் என்று மத்தேயு குறிப்பிடுகிறார் (மத் 14:33).
தொடர்ந்து, ‘அவர்களைக் கடந்து செல்ல அவர் ஏன் விரும்பினார்? என்று மாற்கு குறிப்பிட்டதை வாசிக்கிறோம். ஏன் கடந்துச் செல்ல விரும்பினார் என்பதற்கான காரணத்தை மாற்கு குறிப்படவிலை. ஆனால், அவர் கடந்து செல்வதைக் கண்டு சீடர்கள், 'அலறினார்கள், அஞ்சிக் கலங்கினார்கள்’. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது சரியாக இருந்தது.
நற்செய்தியை தெளிவாக வாசித்தால், மாற்கு சீடர்களை விவரிக்கும் ஐந்து சொற்றொடர்களை அறிய முடிகிறது. 1. அஞ்சிக் கலங்கினார்கள் 2. மலைத்துப் போனார்கள் 3 புரிந்து கொள்ளவில்லை 4. உள்ளம் மழுங்கிப் போயிருந்தது, மற்றும் 5. அலறினார்கள் ஆகிய ஐந்து வகை மனித உணர்வுகளை மாற்கு இங்கே குறிப்பிடுகிறார். இவை அனைத்தும் இயேசுவின் சீடர்களிடம் இருந்தன. இத்தகையோரைத்தான் இயேசு சீடராக அழைத்தார் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆதலால், நமக்கும் இயேசு அழைத்த சீடர்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லை.
ஆகவே, ‘நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்’ (யோவான் 15:16) என்கின்ற இயேசு நமது பலவீங்களை நன்கு அறிந்தே தேர்ந்துகொண்டார். முதல் வாசகத்தில் யோவான் கூறியதற்கு ஒப்ப, கடவுள் அவரது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம், அவரும் நம்மிடம் இணைந்திருக்கிறார் என்பதை ஏற்று, நம்மை அச்சுறுத்தும் பேய்கள் எதுவும் இல்லை என்று, துணிவுடன் முன்னோக்கிச் செல்வோம். பேய் பேயாக இருக்கட்டும், நாம் நாமாக இருப்போம்.
இறைவேண்டல்.
“துணிவோடு இருங்கள், அஞ்சாதீர்கள்” என்றுரைத்த ஆண்டவரே, நான் எந்நாளும், எவ்வேளையிலும் உம்மில் வாழ்கிறேன் என்ற எண்ணத்தில் துணிவோடு வாழும் சீடராகத் திகழ அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452