ஆண்டவரின் தாய், திருஅவையின் தாய், நமது தாய்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
இறைவனின் அன்னையாகிய புனித கன்னி மரியா-பெருவிழா
எண்ணிக்கை 6: 22-27
கலாத்தியர் 4: 4-7
லூக்கா 2: 16-21
ஆண்டவரின் தாய், திருஅவையின் தாய், நமது தாய்!
முன்னுரை
மற்றுமொரு புத்தாண்டில் நாம் இணைந்துள்ளோம். இறைவனுக்கு நன்றி கூறி இப்புத்தாண்டை வரவேற்போம். இந்த 2025-ம் ஆண்டு நமக்கு யூபிலி ஆண்டாகவும் மலர்ந்துள்ளது. இப்புதிய ஆண்டின் தொடக்க நாளில் நாம் அனைவரும் இறைவனின் தாய் என்று நாம் போற்றும் அன்னை மரியாவின் மடியில் தவழ்ந்தோராய் ஒருவரையொருவர் வாழ்த்தி மகிழ்வோம். .
முதல் வாசகம்
எண்ணிக்கை நூலின் ஆறாவது அதிகாரத்தில் காணக்கிடக்கும் இப்பகுதியானது நமக்கு ஓர் ஆசீர்வாதமாக அமைகிறது. இது ஆரோன் ஆசீர்வாதம் என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால் ஆரோனும் அவருடைய வழிமரபும் கடவுளின் மக்களை இவ்வாறுதான் ஆசீர்வதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் பகுதியாக இது உள்ளது.
புத்தாண்டின் தொடக்கத்தில் இது நமக்கு பொருத்தமான ஆசீர்வாதமாக நாம் ஏற்கலாம்.
மூன்று வெவ்வேறு ஆசீர்வாதங்களை நாம் பெற்று மகிழ தலைவணங்குகின்றோம்.
1. “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆம், நம் கடவுள் உண்மையிலேயே நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன் (எசா 49:16) என்று நம்மை பராமரிக்கும் தந்தையாக இருந்து வருகிறார். நம்மை கைவிடாத கடவுள் அவர்.
2. ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஒளி' என்பது ஆண்டவரின் உடனிருப்பை உணர்த்துகிறது, ஏனெனில் ஒளி உள்ள இடத்தில் இருளுக்கு (தீய ஆவிக்கு) வேலை இல்லை. நாம் ஒளியின் மக்களாகிறோம், அவரில் நாம் ஒளிர்வோம்.
3. ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” .
அருளும் அமைதியும் கடவுளிடமிருந்தே கிடைக்கக்கூடியவை. இவை இரண்டும் நமக்கு கிடைக்கப்பெற்றால், நமது வாழ்வு நிறைவாழ்வாகும்.
இவ்வாறு, கடவுளின் ஆசீர்வாதங்களை எடுத்தியம்புகிறது முதல் வாசகம்.
இரண்டாம் வாசகம்
புனித பவுல், கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில், காலம் நிறைவேறியபோது, கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார் என்பதை நினைவூட்டுகிறார். மரியாவின் வழியாகத்தான் கடவுள் மனுவுருவானார். இயேசு நமது மனித நேயத்தைப் பகிர்ந்து கொண்டதால், இப்போது நாம் கடவுளுடன் ஒரு புதிய உறவுக்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் நாம் கடவுளின் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாகிவிட்டோம் என்பதையும் புனித பவுல் அடிகள் வலியுறுத்துகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தயில் புனித லூக்கா ஐந்து முக்கிய அம்சங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அவை :
1. இடையர்களின் வருகை
2. இடையர்களின் வியப்பு
3. மரியாவின் பதிலுணர்வு
4. இடையர்களின் செல்கை
5. இயேசுவின் விருத்தசேதனம்
புதிதாகப் பிறந்த குழந்தையைக் காண இடையர்கள் ஆவலோடு பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்ட விபரத்தை நற்செய்தி நமக்குத் தருகிறது.
அங்கு விரைந்த இடையர்கள் குழந்தை இயேசுவைப் பற்றி, அவர்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும் வியப்படைந்தனர். மரியாவோ இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார் என்று லூக்கா மேலும் விவரிக்கிறார்.
நிறைவாக, யூதர்களின் திருசட்டத்தின்படி, குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள் என்றும் லூக்கா குறிப்பிட்டுள்ளார்.
சிந்தனைக்கு
இன்று ஆண்டின் தொடக்க நாள். இந்நாளை திருஅவை அன்னை மரியா இறைவனின் தாய் எனும் மறை உண்மையைக் கொண்டாடி மகிழ்கிறது. கத்தோலிக்கத் திருஅவையில் அன்னை மரியாவைக் குறித்து வரையறுக்கப்பட்ட நான்கு கோட்பாடுகள் உண்டு. அவற்றில் முதலாவது மரியா இறைவனின் தாய் என்பதாகும். இக்கோட்பாடு கி.பி. 431-ல் இயற்றப்பட்டது.
அன்னை மரியா ஒரு மானிடப் பிறவிதானே. அவர் எப்படி தொடக்கமும் முடிவும் இல்லாதக் கடவுளுக்குத் தாயாக முடியும் என்றுதான் திருஅவையை நோக்கி கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கின்றனர். உண்மையில் மரியா ‘கடவுளின் தாய்' என்பது அவருக்குத் தரப்பட்ட ஒரு சிறப்பு பட்டம் அல்லது மரியாதை அல்ல, அது கடவுளின் திருவுளம். எனவேதான் தூய ஆவியாரால் நிரப்பப்பட்ட எலிசபெத்து, ‘என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?’ என்ற வினவினார் (லூக்கா 1:43). மரியா ஆண்டவரின் தாய் என்பது தூய ஆவியார் வெளிப்படுத்திய செய்தி என்பதால் அது நம்பகத்தன்மை உடையது.
கடவுள் மனிதரானார் (யோவான் 1:14) என்பதும் கடவுள் நம்மோடு (மத் 1:22-23) என்பதும் திருமுழுக்குப் பெற்ற அனைத்து கிறிஸ்தவர்களாலும் ஏற்றக்கப்பட்ட உண்மை. அது தூய ஆவியாரின் வெளிப்பாடு. இதில் தர்க்கம் கிடையாது. எனவே, இயேசு கிறிஸ்து கடவுள் என்றால், அவரைப் பெற்றெடுத்த மரியா கடவுள் தாய் தானே. ஆம் மரியா கடவுளின் தாய், ஆனால் அவர் கடவுள் அல்ல என்பது திருஅவையின் தெளிவான படிப்பினையாகும். அவர் வணக்கத்திற்கு உரியவர் வழிபாட்டுக்கு அல்ல.
அடுத்து, வானதூதர் கபிரியேல் மரியாளுக்குத் தோன்றி மங்கள வார்த்தை கூறும் பகுதியில்: "அருள்மிகப் பெற்றவரே!, இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" என்கிறார் (லூக் 1:31). இவ்வார்த்தைகள், மரியா இயேசுவைப் பெற்றெடுத்ததினால் அவர் இறைவனின் தாயாகிறார் என்பதைக் குறித்துக்காட்டுகின்றது.
திருஅவை வரலாற்றில் முதல் ஐந்து நூற்றாண்டுகளில் இயேசுவை மையமாகக் கொண்ட பல கருத்தியல் போராட்டங்கள் நிலவின. அவற்றுள் ஒன்று மரியா இறைவனின் தாயாக இருக்க முடியாது எனும் வாதம் வலுப்பெற்றிருந்தது. இதன் தொடர்பாக, கி,பி. 325-ல், தடைபெற்ற நிசியா பொதுச்சங்கத்தில், இயேசு உண்மையாகவே கடவுளும் உண்மையாகவே மனிதனுமாக இருந்தார் என்ற பேருண்மை பிரகடணப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, ஏறக்குறைய நூறு ஆண்டுகள் கழித்து, கி.பி. 431-ல், கூடிய எபேசு திருச்சங்கத்தில் கடவுளைப் பெற்றெடுத்தவர் கடவுளின் தாய் என்று அழைக்கப்படுவது முறையே எனும் நம்பிக்கையில் ‘மரியா இறைவனின் தாய்' எனும் கோட்பாடு மரியாவை முன்னிட்ட முதல் கோட்பாடாக அறிவிக்கப்பட்டது.
அன்னை மரியா கடவுளின் தாய் என்பது மனித வார்த்தை அல்ல, மாறாக இறைவார்த்தை வெளிப்படுத்தும் உண்மை. ஆனாலும், ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இயேசுவில் இருந்த தெய்வீகத்தை உருவாக்கியவர் மரியா அல்ல. கடவுள் என்ற உயிர், மனிதனாவதற்கு தம் கருவில், உடலில், வாழ்வில் பங்களித்தவர் மரியா. தன்னில் கடவுள் மனுவுருவாகவே, மரியா அமல உற்பவியாக, அவரது தாயின் (புனித அன்னா) வயிற்றில் கருத்தரிக்கும் போதே, அவர் ஆதி பாவத்தின் தாக்கத்தில் இருந்து (சென்ம பாவம்) மீட்கப்பட்டவாராகத் தயாரிக்கப்பட்டார். கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை.
மண்ணகத்தில் மனிதரில் சிலர் ‘மரியா இறைவனின் தாய்’ எனும் கோட்பாட்டை ஏற்க மறுத்தாலும், அது பற்றி நாம் வீணாகக் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில், கடவுள் அன்னை மரியாவுக்கான உரிய இடத்தை தந்துவிட்டார். அவர் விண்ணக அரசியாகத் திகழ்கிறார். இறைவனின் தாயாகிய அன்னை மரியாவே, பின்னர் திருஅவையின் தாயாக நம்மிடம் இயேசுவால் ஒப்படைக்கப்பட்டார்.
‘அன்னைக்குக் கரம் குவிப்போம்
அவள் அன்பைப் பாடிடுவோம்’
இறைவேண்டல்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்று எனக்குக் கற்பித்த அன்னையின் படிப்பினைக்கு ஏற்ப எனது பணிகளைத் திருஅவையில் நிறைவேற்ற எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452