இயேசுவே மீட்பர் என்பதை வாழ்க்கை முறையால் அறிக்கையிடுவோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

7 ஆகஸ்டு 2025                                                                                                                  
பொதுக்காலம் 18 ஆம் வாரம் –வியாழன்

எண்ணிக்கை 20: 1-13
மத்தேயு 16: 13-23
 
 இயேசுவே மீட்பர் என்பதை வாழ்க்கை முறையால் அறிக்கையிடுவோம்!
 
 முதல் வாசகம்.

கடவுள் யார் என்பதற்கு மக்கள் எவ்வாறு மறுமொழி கூறுகிறார்கள் என்பதை இன்றைய வாசகங்கள் விவரிக்கின்றன. முதல் வாசகத்தில்,  இப்போது அவர்கள் சீனாய் மலையடிவாரத்தை விட்டுப் புறப்பட்டு   சீன் பாலைநிலத்துக்கு வந்தது காதேசு எனும் பகுதியில் கூடாரம் அமைத்துள்ளனர்.  எகிப்தில் தங்களை அற்புதமாக விடுவித்து அழைத்துவந்த கடவுளில் நம்பிக்கை இழந்தவர்காளகக் காணப்படுவதோடு, மோசேயிடம்  முணுமுணுக்குகிறார்கள்.  அவர் மேல் குற்றப்பழி போடுகிறாரகள்.   ஏனெனில் இங்கு அவர்களுகுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை.  எகிப்தில் நைல் நதிக்கரையில் வாழ்ந்தபோது, தங்களுக்குக் குடிக்க நிறைய தண்ணீர் இருந்ததை அவர்கள் நினைவில் கொள்கிறார்கள்.அதனால் அவர்கள் கடவுள், மோசே மற்றும் ஆரோனுக்கு எதிராகப் புலம்புகிறார்கள்.  

மோசேயும் ஆரோனும் கடவுளிடம் பேசுவதற்காக சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்கிறார்கள். அவர்கள் கோலால் பாறையை அடித்தால் பாறையிலிருந்து தண்ணீர் பாயும் என்று கடவுள் அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார். மோசே,  பாறையை ஒரு முறை அடித்தாலேபோதும், கடவுள்  தண்ணீரைப் பாய விடுவார் என்பதில் அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை, ஆகவே, இருமுறை அடித்தார். அவர் கடவுளைச் சந்தேகித்தார் என்று பொருள் கொள்ளப்படுகிறது. 
 அந்த இடம் "மெரிபா" என்று அழைக்கப்படுகிறது, இதன் பொருள் "சச்சரவு" என்பதாகும்.

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசு, புறவினத்தார் பகுதியான பிலிப்புச் செசரியா பகுதிக்குச் செல்கின்றார். அங்கிருக்கையில் அவர சீடர்களிடம்,  ‘மக்கள் என்னை யாரெனச் சொல்கிறார்கள்?’  அவர்களிடமிருந்து சில பதில்க்ள வரக்கண்டு, “நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’ என்று இயேசு சீடர்களிடம்  கேட்டபோது,  பேதுரு, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று சொன்னபிறகுதான் இயேசு, “...எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக, விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்’ என்கிறார். அத்துடன், நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார் என்று மத்தேயு குறுப்பிட்டுள்ளார்.

சிந்தனைக்கு.

இயேசு இன்று நமக்கும் இதே கேள்வியைத்தான் எழுப்புகிறார். முன்பு அவர் தம் சீடர்களிடம் கேட்டது போல. இன்று நம் ஒவ்வொருவரிடமும், “நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டால நமது பதில் என்னவாக இருக்கும் ? ஒருமுறை ஒரு பங்கு குருவானவர் ஒரு இல்லத்திற்குச் சென்றிருந்தபோது, ஒரு சிறுவனை அழைத்து, “தம்பி நீ நற்கருணையில் யாரை சந்திக்கிறாய்?” என கேட்டபோது, அவன் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கும் வேளையில்   அங்கிருந்த தாத்தா “சொல்லுடா அந்தோணியார் என்று”என்று கூறினாராம். 

உலகம் உண்மை அறியாதது. அது இன்றும் இருளில் மூழ்கி உள்ளது. உலக மக்கள் இயேசுவை என்னவென்று கூறுகிறார்கள் என்பதைப் பற்றி ஆராய்வதைவிட நமக்கு இயேசு யார் என்று நமக்கு நாமே கேட்பது  இன்றியமையாதது. ஏனெனில் நாம் ஒளியின் மக்கள். சிலுவை அணிந்தவரெல்லாம் கிறிஸ்துவை அறிந்தவர் ஆகார். ‘இயேசு,  உலக மெசியா, வாழும் கடவுளின் மகன்’ என்று அறிக்கையிட துணிந்தவரே கிறிஸ்துவை அறிந்தவர் ஆவார். 

கிறிஸ்து யார் என்று அறிந்தவர், அவரை மேசியாவாகவும், கடவுளின் மகனாகவும் நம் வாயால் மட்டுமல்ல, நம் செயல்களாலும் ஒவ்வொரு நாளும் அறிவிக்க வேண்டும்.  மேலும், இன்றைய நற்செய்தியில் "விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றுரைத்தார் ஆண்டவர். ஆகவே, பேதுரு தலைமையில்  வழிவந்த திருஅவையின் படிப்பினைகளை நாம் ஏற்க மறுப்பதும் குற்றமாகக் கருதப்பட வேண்டும். 

தொடர்ந்து, இன்றைய நற்செய்தியில் இயேசு தன் பாடுகளை முன்னுரைத்ததைக் காண்கிறோம். அதைக்கேட்ட பேதுருவால்  பாடுபடும் இயேசுவைக் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. பாடுபடவேண்டிய இயேசுவை ஏற்றுக்கொள்ளவும்  முடியவில்லை.    இயேசு அவரை, 'அப்பாலே போ சாத்தானே' என்று கடிந்துகொள்கின்றார். உலகத்திற்கான மீட்பு  இயேசு கிறிஸ்துவின்  பாடுகள் வழியாகவே நிறைவேறக்கூடும் என்பதை இங்கே இயேசு வலியுறுத்துகிறார். நமக்கும் நமது துன்ப துயரங்கள் இன்றி மீட்பு இல்லை. எனவேதான் ‘துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்’ (மத் 5:4) என்றார் ஆண்டவர்.

இறைவேண்டல்.

ஆண்டவரே. உம்முடைய தூய ஆவியினால் என்னை தொடர்ந்து நிரப்பும், அப்போது நீர் எங்கள் மீட்பின் பாறை என்பதை நான் தைரியமாகவும் துல்லியமாகவும் அறிவிக்க இயலும். ஆமென்.

 

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452