நாம் சிலுவையை ஏற்றால், பாரத்தை அவர் சுமப்பார்!| ஆர்.கே. சாமி | VeritasTamil
பொதுக்காலம் 34 ஆம் வாரம் – புதன்
திருவெளி. 15: 1-4 - லூக்கா 21: 12-19
நாம் சிலுவையை ஏற்றால், பாரத்தை அவர் சுமப்பார்!
முதல் வாசகம்.
யோவான் கண்ட காட்சி தொடரில் இன்று ஏழு வானதூதர்கள் தோன்றும் காட்சி விவரிக்கப்படுகிறது. தலைமை வானதூதர்களின் எண்ணிக்கை ஏழு என்பது யூதர்களின் பொதுவான நம்பிக்கை. இவர்கள் கடவுளின் திருமுன் நின்று பணி செய்கின்றனர். இவர்கள் உண்மையுள்ள போர் வீரர்களாக இருக்கின்றனர். இக்காட்சியை ஆசிரியர் ‘பெரியதும் வியப்புக்குரியதுமான’ என்று கூறுகிறார். இதில் வரும் ‘கதிரவனை ஆடையாக அணிந்திருந்தப் பெண் முதல் பெரிய அடையாளம் எனலாம். அடுத்து தீமையே உருவான சாத்தான் எனும் அரக்கப்ப பாம்பு இரண்டாவது பெரிய அடையளமாகக் காட்டப்படுகிறது. மூன்றாவதாக, இந்த ஏழு வானதூதர்கள் மூன்றாவது பெரிய அடையாளமாக கொடுக்கப்படுகிறது.
இந்த வானதூதர்கள் தான் கடவுள் பக்கம் நின்று கடவுளுக்கு எதிராக செயல்படுவோரை அழிக்க வல்லவர்கள். ஆகவே, கடவுளின் திட்டத்தில் உருவான திருஅவையை அழிக்க முனைபவர்களை (உரோமையர்களை) இவர்கள் அழித்துவிடுவார்கள் எனும் நம்பிக்கை செய்தி இக்காட்சியின் மூலம் இன்று கொடுக்கப்படுகிறது. இவ்வாசகத்தில், ‘நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றையும் கண்டேன்’ என்கிறார் யோவான். இது கடவுளின் பிரசன்னத்தைக் குறிப்பதோடு, தீயவர்களுக்கு எதிரான அவரது கோபத்தையும் வெளிப்படுத்துகிறது.
கடவுள் இஸ்ரயேலரை எகிப்தியர் பிடியில் இருந்து விடுவித்தபோது மோசே பாடிய பாடலையும், ஆட்டுக்குட்டியான இயேசு சிலுவை மரணத்தால் அளித்த வெற்றியையும் சித்தரித்து வானதூதர்கள் இக்காட்சியில் படிக்கொண்டிருந்ததாக யோவான் கூறுகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு தமது இறப்புக்குப் பின் சீடர்களுக்கு நேரிடவுள்ள துன்பங்கள் குறித்து நினைவூட்டுகிறார். அவர் ஏற்கனவே தனது சொந்த மரணம் பற்றி பேசியுள்ளார். இப்போது அவருடைய சீடர்களும் அதே போன்ற கதியை எதிர்கொள்வார்கள் என்கிறார். அப்போது, அவர்கள், தங்கள் தலைவரைப் போலவே, திடம்பெற்று, இயேசுவுக்குச் சான்று பகர அத்துன்பங்கள் வாய்ப்பாக இருக்கும் என்கிறார். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே அவர்களுக்கு அருளப்படும் என்றும் கூறுகிறார்.
பேசுவதற்கு வார்த்தைகள் கொடுப்பதோடு, தங்கள் தலைவரைப் போலவே, ஒரு புதிய வாழ்க்கையை பெறுவாரகள் என்கிறார். இயேசு தம்முடைய சொந்த பாடுகள், மரணம். உயிர்த்தெழுதல் மற்றும் விண்ணேற்றம் போன்ற அனுபவங்களை எதிர்பார்க்கலாம் என்று தம் சீடர்களை எச்சரித்து ஆறுதல்படுத்துகிறார். அத்துடன், அவரே, அவர்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பதாகவும் மன உறுதியோடு இருந்து அவர்களது வாழ்வைக் காத்துக்கொள்ள அழைக்கிறார்.”
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களை வாசிக்கும் போது, திருஅவையின் தொடக்கக் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு நேரிட்ட துன்பத் துயரங்கள் நம் கண் முன் நிழலாடுவதை அறியலாம். ஆனால், அவற்றைக் கண்டு அஞ்சிடாமல், ‘நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது’ எனும் இயேசுவின் உறுதிமொழியை நினைத்து மகிழ்கிறேன். ‘என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே’ (மத் 5:11) எனும் ஆண்டவரின் வாக்கு நினைத்து திடம் கொள்வோம்.
இயேசுவுக்காக தங்கள் உயிரையும் கொடுக்க முனவருபவர்களே முதன்மை கிறிஸ்தவர்கள். துன்பத்தின் மற்றொரு வடிவம்தான் சிலுவை. இயேசு அதைத் துணிவோடு ஏற்றதுபோல், நாமும் துன்பங்களை ஏற்க வேண்டும். எனக்குத் துன்பம் வேண்டாம், நற்கருணை மட்டும் வேண்டும் என்று எண்ணுவோர் கோழைகள். யூதாசைவிட மோசமானவர்கள். கிறிஸ்தவ வாழ்வு ஒரு விழாக் கொண்டாட்டங்களோடு முடிந்துவிடுவதல்ல. கிறிஸ்தவ வாழ்வு என்பது விலைகொடுத்து பெறமுடியாத இறைவனின் கொடை. அது வீரம் நிறைந்த வாழ்வு.
அன்னை மரியாவுக்கு அந்த வீரம் இருந்ததை சிலுவை அடியில் கண்டோம். திருத்தூதர்கள் பெந்தகோஸ்து அன்று தூய ஆவியைப் பெற்றபின், அதே வீரத்தைப் பெற்றார்கள். கிறிஸ்தவர்களுக்கு அச்சம் என்பது மடமை. முதல் வாசகத்தில் கண்டதுபோல, விண்ணகத்தில் வானதூதர்கள் கடவுளின் படைவீரர்கள் என்றால், மண்ணகத்தில் நாமே மரணத்திற்கு அஞ்சாத இயேசுவின் படை வீரர்கள்.
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்ச்கத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற பொதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
எனனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப அமைய வேண்டும் கிறிஸ்தவ வாழ்க்கை.
இறைவேண்டல்.
அன்பான ஆண்டவரே! வலிமை உள்ளத்தோடு பிறர் நலனில் அக்கறை கொண்டு வாழத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452