நமது ஒன்றிப்பில்தான் திருஅவை மிளர்கிறது! | ஆர்.கே. சாமி | VeritasTamil

16 மே 2024  

பாஸ்கா 7 ஆம் வாரம் - வியாழன்

தி. பணிகள் 22: 30; 23: 6-11

யோவான் 17: 20-26

முதல் வாசகம்.

 எருசலேமில் பவுல் அடிகள் ஒரு விசாரணையில் சிக்குகிறார். விசாரனை முறையாகத் தொடங்கியது. இந்நிலையில் விசாரணை குழுவில் பரிசேயர் மற்றும் சதுசேயர் என இரு பிரிவினர் இருந்ததை பவுல் அடிகள் கவனித்தார். இவர்கள் நீதியற்ற முறையில் தன்னை தண்டிக்கப் போகிறார்கள் என்பதை தனக்குள் கணித்துக்கொண்டார். எனவே, விவேகமாகச் செயல்பட எண்ணி,  பவுல் அடிகள் சட்டென்று எழுந்து, “சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்; இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன்” என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார். 
 

  • பரிசேயர்கள்: உயிர்த்தெழுதலில், வானதூதர் மற்றும் ஆவியில்  நம்பிக்கை கொண்டவர்கள். 
  • சதுசேயர்கள்: உயிர்த்தெழுதலிலும்  வானதூதர் மற்றும் ஆவியில்   நம்பிக்கையற்றவர்கள்.

பவுல் அடிகள் தன் முன்மதியால், இந்த உயிர்த்தெழுதல் பிரச்சனையை ஊதிவிட்டு பெரிதாக்கினார்.  இவ்வாறு பவுல் அடிகள் தன் முன்மதியால் விசாரனையைத் திசைத்திருப்பினார்.  அதாவது, தான் ஒரு பரிசேயன், பரிசேயக் கொள்கைகளில் ஆர்வம் மிகுந்தவன். பரிசேயன் என்ற முறையில் இறந்தபின் உயிர்த்தெழுதலிலும், வானதூதர் மற்றும் ஆவியிலும் நம்பிக்கை கொண்டிருப்பதால்  நான் விசாரனைக்கு உட்படிருக்கிறேன்” என்று ஓர் அப்பாவி போன்று  கூறினார்.  இதனால், திருச்சங்கம் இரண்டுபட்டது. சதுசேயரோ அவர்களது நம்பிக்கைதான் சரியானது, உண்மையானது என்று வாதிட்டனர். இதனால்  பெரும் குழப்பத்தை உண்டாக்கினர்.

இந்த குழப்பத்திற்கும் பெரும் கூச்சலுக்குமிடையில்,  பரிசேயப் பிரிவினைச் சேர்ந்த மறைநூல் அறிஞருள் சிலர் எழுந்து, “இவரிடம் தவறொன்றையும் காணோமே! வானதூதர் ஒருவரோ, ஓர் ஆவியோ இவரோடு பேசியிருக்கலாம் அல்லவா!” என பவுல் அடிகளுக்குச் சாதகமாக வாதாடினர். 

குழப்பத்திற்கு  அஞ்சி, ஆயிரத்தவர் தலைவர் முந்திக்கொண்டார்.  படைவீரரை வரச்சொல்லி பவுல் அடிகளை அவர்கள் நடுவிலிருந்து பிடித்துச் செல்லுமாறு ஆணை பிறப்பித்தார். இந்நிலையில், பவுல் அடிகள் மீண்டும் பலத்த காவலில் வைக்கப்பட்டார் என்று முடிக்கும் லூக்கா, இங்கே மற்றொரு செய்தியையும் பகிர்கிறார். ஆம், அன்று  இரவு இயேசுவே பவுல் அடிகளுக்குத் தோன்றி, “துணிவோடிரும்; எருசலேமில் என்னைப்பற்றி சான்று பகர்ந்தது போல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்” என்றுரைத்ததை  பதிவுச் செய்துள்ளார்
 
நற்செய்தி.

இயேசுவின் இறைவேண்டல் நேற்றையத் தொடர்ச்சியாக இன்றும் இடம் பெறுகிறது. இன்றையப் பகுதியல்,  இயேசு தன் தந்தையாம் கடவுளிடம் தொடர்ந்து தம் சீடர்களுக்காக மன்றாடுகிறார். இதை இயேசுவின் இறுதி உயில் என்றும் கூறுவர். அவர் தம் சீடர்களுக்காக மட்டுமல்ல, எதிர்காலத்தில் அவரில் நம்பிக்கை கொள்ளும் அனைவருக்காகவும்  மன்றாடுகிறார். 

இவ்வாசகப் பகுதியின் முக்கிய செய்தியாக அமைவது கிறிஸ்தவர் ஒன்றிப்பாகும். நம்பிக்கையாளர்களிடையே ஒற்றுமைக்கான தனது விருப்பத்தை இயேசு வெளிப்படுத்துகிறார், தனக்கும் கடவுளுக்கும் இடையிலான ஒற்றுமையை பிரதிபலித்து அவரும் தந்தையாம்  கடவுளும் ஒன்றாக இருப்பது போல், தன்னைப் பின்பற்றுபவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.  இந்த ஒற்றுமைதான், அவரது தெய்வீக பணிக்கும்  கடவுளின் அன்பிற்கும்  உலகிற்கு சாட்சியமாக இருக்கும்  என்று அவர் கூறுகிறார்.

மேலும். இயேசு தந்தையிடமிருந்து பெற்ற  மாட்சியை அவர் சீடர்களுக்கும் அளித்தாகக் கூறுகிறார். இவ்வாறு, இயேசு சீடர்களுக்குள்ளும் தந்தையாம் கடவுள் இயேசுவுக்குள்ளும்  இருப்பதால் சீடர்கள் அனைவரும்  ஒன்றித்திருக்க வேண்டும் என்று மன்றாடுகிறார்.  இதனால் தந்தையாம் கடவுளே இயேசுவை அனுப்பினார்  எனவும், கடவுள் இயேசு மீது அன்பு கொண்டுள்ளது போல் அவர்கள் மீதும் அன்பு கொண்டுளாளார் எனவும் உலகு அறிந்துகொள்ளும் என்று வேண்டுகிறார். 

நிறைவாக, ‘தந்தையே, உலகம் தோன்றும் முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்’ என்று தம் மன்றாட்டை  முடிக்கிறார். 

 
சிந்தனைக்கு.

இயேவின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் யாராக, எந்த நாட்டவராக இருந்தாலும், அவரது கனவாகிய ஒற்றுமைக்கும் ஒன்றிப்புக்கும் இசையாவிட்டால்,  உண்மையில் அவர்கள் இயேசுவின் சீடர்கள் என்று அழைக்கப்பட தகுதியற்றவர்கள். அவரது சீடர்களே திருஅவை. திருஅவையில் ஒற்றுமையும் ஒன்றிப்பும் காணப்படவில்லை என்றால், திருஅவை உலகிற்கு எவ்வாறு  உப்பும் ஒளியுமாக விளங்க முடியும்? 

திருஅவையில் பிளவு என்பது அலகையின் செயல். ‘நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்’ என்ற இறைவேண்டலுக்கு எதிராக சீடர்களைச் செயல்படத் தூண்டுவது அலகையைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?  

‘உனக்கும் பெண்ணுக்கும் (திருஅவைக்கும்), உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் (திருஅவைக்கும்)  பகையை உண்டாக்குவேன்’ (தொ.நூ 3:15) என்று கடவுள் விடுத்த சவாலுக்கு ஏற்ப திருஅவை அலகையை எதிர்த்துப்போராடிக்கொண்டிருக்கும் வேளையில், கிறிஸ்துவர்கள் பலர் அலகைக்குத் துணைபோகிறார்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதுபோல் கிறிஸ்தவர்கள் ஒன்றித்திருந்தால்தானே அலகையின் ஆட்சிக்கு முடிவுகட்ட முடியும். பிளவு, பிளவு என்று ஆளுக்கொரு நொண்டி சாக்கைக் காரணம் காட்டி பிரிந்துபோவதால்  அலகைக்குத்தான் பெரும் கொண்டாட்டம். திருமுழுக்குப் பெயரால் கிறிஸ்தவராகி, பிரிவுக்கு வழிவகுப்போர் ‘கிறிஸ்து + அவர்' ஆக இருக்க முடியாது. அது உண்மையில் ஒரு பித்தலாட்டம். 

குடும்பம் என்றால் பிணக்குகள், கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதற்காக தந்தை வேண்டாம், தாயும் வேண்டாம், உடன் பிறந்தோர் வேண்டாம் என்று பிரிந்து போகும் எவரும் உறவுக்கு அல்ல பிரிவுக்கே வழி தேடுபவர்கள். ஒருமுறை  இயேசு பன்னிரு சீடரிடம், “நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன (யோவான் 6:67-68) என்றுதான் பதில் சொன்னார். அதுதான் ஒன்றிப்பு. பேதுரு, ஆம் என்று கூறி பிரிந்து வேறு ஒரு போதகரை நாடிப் போகவில்லை. 

பிரித்தாள்பவன் சாத்தான். பிரிந்து போன எந்த சபையையும் ‘உங்கள் சபையை யார் தொடங்கியது?’ என்று கேட்டால் அவர்களால் இயேசுதான் தொடங்கினார் என்று பதில் சொல்ல இயலாது. சபைகள் அனைத்தும் ஒரு சிலரால் சுயநலத்தின் பேரில் தொடங்கப்பட்டவை.  ‘எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக’ என்று மன்றாடும் இயேசு ஒருபோதும் பிரிவுக்குத் துணை போகமாட்டார்’. 

பணத்துக்காக பல பித்தலாட்ட, ஏமாற்று வேலைகள் நேற்று பூத்த மழையில்  பூத்த காளான்கள் போன்ற சபைகளில் நடைபெற்று வருகின்றன. அவை கானல் நீர் போன்றவை. ஒரே தலைமைத்தவம் இல்லாத அகதிகள். 

முதல் வாசகத்தில் பவுல் அடிகள் பரிசேயர் மற்றும் சதுசேயர் மத்தியில் சிக்கிக்கொண்ட போது, அவர் ஒரு யூதர் என்றும் உயிர்ப்பில் நம்பிக்கைகொண்டவர் என்றும் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார். தன்னை வேறுபடுத்திக்காட்டுகிறார். அவ்வாறே, நாம் தொடக்கமுதல் இருந்த ஒரே தாய் திருஅவைக்கு உரியவர்கள், கத்தோலிக்கர்கள் என்று நம்மை வேறுபடுத்திக் காட்ட வேண்டும். இங்கே கத்தோலிக்கக் கிறிஸ்தவர் என்பது வேறு ஒரு கிறிஸ்தவம் அல்ல.  கத்தோலிக்கத்  திருஅவை  என்றாலே அகில உலக திருஅவை என்பதுதான் பொருள். அது புதிதாக சிலரால் ஏற்படுத்தப்பட்ட திருஅவை அல்ல. 

ஆகவே, நாம் உள்ளத்தாலும் நம்பிக்கையாலும் இயேசுவின் கனவை மெய்ப்பிக்கும் சீடர்களாக ஒன்றித்திருக்க முற்படுவோம். தூய ஆவியாரின் இயக்கத்திற்கு உட்பட்டு ஒரே திருஆவையினராக வாழ்வோம். ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு என்ற படிப்பினையை ஏற்று ஒன்றித்து வாழ்வோம். 


இறைவேண்டல். 
‘எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக’ என்று தந்தையை இறைஞ்சி மன்றாடிய ஆண்டவரே, என் வாழ்நாள எல்லாம் ஒரே திருஅவை என்ற எண்ணத்தில் என்றும் ஒன்றித்திருக்க என்னைக் காத்தருள்வீராக. ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452