மண்ணகத்தில், விண்ணக வாழ்வைச் சுவைப்பீர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

9 மே 2024  

ஆண்டவரின் விண்ணேற்றம்-பெருவிழா

தி.பணிகள் 1: 1-11

எபேசியர் 4: 1-13                                                              

மாற்கு16: 15-20
  

முதல் வாசகம்.


இப்பகுதியில் இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார் என்று  லூக்கா சாட்சியம் பகர்கின்றார். உயிர்த்த ஆண்டவர் தொடர்ந்து 40 நாள்கள் தம் சீடர்களுக்குத் தோன்றி,  கடவுளின் அரசைப்பற்றி அறிவுறுத்தினார் என்றும், அவர்  வாக்களித்த  தூய  ஆவியார் வரும்வரை எருசலேமை விட்டு அகலக்கூடாது என்று சீடர்களை வலியுறுத்தியதையும் இங்கே வாசிக்கிறோம். 

மேலும், சீடர்கள் இன்னும் தூய ஆவியால் பெற வேண்டிய திருமுழுக்குக்கான நேரம் வரவில்லை, காத்திருக்க வேண்டும் என்கிறார். அடுத்து  இயேசுவிடம்  எருசலேமில் கூடியிருந்தவர்கள் கேள்வி ஒன்றை  கேட்கின்றனர்.  “ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத் தரும் காலம் இதுதானோ?” என்கின்றனர். இக்கேள்விக்குப் பதிலாக,  “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.

நிறைவாக, இயேசு கிறிஸ்து அவரது உயிர்த்தெழுதலுக்குப் பின் இங்கும் அங்குமாக காட்சியளித்துக் கொண்டிருந்ததைத் தொடர்ந்து நாற்பதாம் நாள் திருத்தூதர்கள் முன்பாக மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்ட நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது. விண்ணகம் சென்ற கிறிஸ்து மீண்டும் மண்ணகம் திரும்புவார் என்று இன்றைய முதல் வாசகத்தில் இறுதியில் வானதூதர்கள் சீடர்களுக்கு அறிவிக்கின்றனர் (திப 1:11). 

இரண்டாம் வாசகம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், திருஅவை என்பது  கிறிஸ்துவின் உடலென்றும், அவரே அவ்வுடலுக்குத் தலையாய் இருக்கிறார் என்றும் விவரிக்கிறார்.  எவ்வாறு தலையிலிருந்து உடலைப் பிரிக்க இயலாதோ, அவ்வாறே தலையாகிய கிறிஸ்துவிடமிருந்து அவரது உடலாகிய திருஅவையைப் பிரிக்க முயல்வதும் இயலாத ஒன்று என்று வலியுறுத்துகிறார். ஆதலால்,  திருஅவையின்  தலையாகிய கிறிஸ்து பெற்ற  அதே விண்ணக மாட்சியில்  அவரது உடலாகிய திருஅவையும் (நாமும்) பங்கு பெறுவது உறுதி என்று மற்றுமொரு உண்மையை நம்மோடு பகிர்கிறார்  

நற்செய்தி.

இன்று நற்செய்தியாளர் புனித மாற்குவின் நற்செய்தியின் இறுதி பகுதியை வாசிக்கிறோம். இயேசு தம் சீடர்களுக்கு படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்க வேண்டிய தலையாயக் கடமையைப் பற்றியும்,  அதற்காக அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதைப் பற்றியும்  பேசுகிறார்.  இது இயேசுவின் செய்தியின் உலகளாவிய தன்மையையும், அனைத்து மக்களையும் சென்றடைவதற்கான சீடர்களின் பணியையும் வலியுறுத்துகிறது.

 இயேசுவில்  நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர் என்கிறார்.  அவரது  பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று ஒரு பட்டியலைத் தருகிறார். 

நிறைவாக,  அவர்களோடு பேசியபின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார் என்றும், சீடர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர் என்றும் புனித மாற்கு எடுத்தியம்புகிறார்.

சிந்தனைக்கு.

இன்றைய தினம் உலகின் பல பகுதிகளில் திருஅவை ஆண்டவரின் விண்ணேற்ற பெருவிழாவைக் கொண்டாடுகிறது. சில நாடுகிளல் இப்பெருவிழா வருகிற ஞாயிறன்று கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் இன்று ஆண்டவரின் விண்ணேற்ற பெருவிழா ஒரு கடன் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. 

ஆண்டவரின் விண்ணேற்ற பெருவிழாவைக்  கொண்டாடும் போது, இயேசு தமது மண்ணக வாழ்விலிருந்து விடைபெற்றுத்  தம்  தந்தையிடம் திரும்பியதையும், தூய ஆவியானவர் இன்னும் பத்து நாள்களில் நம்மீதுப் பொழியப்படுவார்  என்ற வாக்குறுதியுடன், இயேசுவின்   நற்செய்தியை அறிவிக்கும் பணியைத் தொடர அருடைய சீடர்களை அவர் நியமித்ததையும் நினைவுகூருகிறோம். 

உண்மையில் நாம் அவரது சீடர்கள் என்றால், நற்செய்தியைப் பரப்பும் இந்த பணியில் நாம் அனைவரும் பங்கு பெற வேண்டும். இது சீடத்துவத்திற்கான ஒரு நிபந்தனை என்பதை நாம் ஏற்க வேண்டும். 

பவுல் அடிகள் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தின்  முதல் பத்திகளில், கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு ஞானம் மற்றும் அவரது வெளிப்பாட்டின் ஆவியைக் கொடுக்கிறார் என்று குறிப்பிடுகிறார்.  இதனால் நம்பிக்கையாளர்களாகிய நாம்  இயேசுவைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற முடியும் என்பதோடு,  விண்ணகத்திலும் திருஅவையிலும் நிலவும் அவரது மாட்சியில் பங்கு பெறவும் முடியும் எற்கிறார்.  இதற்காக, நாம்  ஒரே எதிர்நோக்குக் கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றும் புவுல் அடிகள் வலியுறுத்துகிறார்.

இயேசுவின் விண்ணேற்ற பெருவிழாவானது இயேசுவின் பணியைத் தொடர நாம் அழைக்கப்பட்டு, அப்பணிக்காக அதிகாரம் பெற்றுள்ளோம் என்பதை நினைவுறுத்தும் விழாவாக நாம் பார்க்க  வேண்டும். மேலும், இப்பணி அருள்பொழிவுப் பெற்ற அருள்பணியாளர்கள் மற்றும் துறவற சபையைச் சார்ந்தவர்களுக்கானது என்று ஒதுங்குவதும் புறக்கணிப்பதும் முற்றிலும் தவறு.

நிறைவாக, இயேசுவின் சீடர்களாக உள்ள நமது வாழ்வு  விண்ணகம் சார்ந்த வாழ்வாக இருக்க  வேண்டும். நாம்  இறையாட்சியைத் தேடுபவர்களாக வாழ்வதே விண்ணகத்திற்கான ஒரே வழி. விண்ணகம் செல்லுமுன் கிறிஸ்து, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவிக்கும் பொறுப்பைத் திருஅவையிடம் ஒப்படைத்தார்.  நற்செய்தி என்பதென்ன? கிறிஸ்துவே நற்செய்தி.   ஒவ்வொரு சீடரும் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அறிவிக்கும் திருத்தூதராவார் என்பதை நாம்  நினைவில் கொள்ள வேண்டும். 
மேகங்களில் இயேசு மேலே செல்லும் நிகழ்வு, இயேசு மேலுலகை சார்ந்தவர் என்பதனைக் காட்டுகிறது. திருஅவையின் தலையாகிய இயேசு மேலுலைகைச் சார்ந்தவரென்றால் அவரது திருவுடலாகிய நாமும் மேலுலகைச் சார்ந்தவர்களே. எனவே மண்ணுலகில் வாழ்ந்தாலும், மேலுலகைச் சார்ந்தவற்றையே நாம் நாட வேண்டும் என்பது சீடத்துவ வாழ்வுக்கு இன்றியமையாத வேண்டுகோள்.  இவ்வுலக வாழ்வு நமக்கொரு இடைப் பயணமே. ‘நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!’ (1 கொரி 9:16) எனும் பவுல் அடிகளின் படிப்பினையை மனதில் கொள்வோம்.)

இறைவேண்டல்.

தந்தையின் வலப்பக்கம் அமர்ந்திருக்கும் அன்பு இயேசுவே, நான் இவ்வுலகைச் சார்ந்த வாழ்க்கை  வாழாமல், விண்ணுக்குரியவற்றை ஏற்று வாழ அருள்தாரும். ஆமென். 


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452