அழிவுக்கல்ல அன்புக்கு பாதைவிடு! | ஆர்.கே. சாமி | VeritasTamil

5 மார்ச்  2024                                                                                          

தவக்காலம் 3ஆம் வாரம் - செவ்வாய்

தானி (இ) 1: 2, 11-19                                                                                    

மத்தேயு 18: 21-35

முதல் வாசகம்:

பின்புலம்

பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் நிறுவிய பொற்சிலையை வணங்க மறுத்ததற்காக அனனியா, மிசாவேல், அசரியா என்ற மூன்று இளைஞர்கள் தீ சூளையில் எறியப்பட்டார்கள். இத்தகைய தீங்குகளினின்று தங்களையும் தங்கள் மக்கள் இஸ்ரயேலரையும் விடுவிக்குமாறு ஆண்டவரிடம்   அசரியா மன்றாடினார். 

அவரது மன்றாட்டை இன்றைய முதல் வாசகம் வெளிப்படுத்துகிறது. எபிரேயத்தில் எழுதப்பட்ட தானியேல் நூலில் பிற்காலத்தில் இணைக்கப்பட்டுள்ள கிரேக்க மொழியில் எழுதப்பட்டது இப்பகுதியாகும். எனவே, இப்பகுதி இணைத் திருமுறை பகுதி எனப்படுகிறது,

முதல் வாசகம் நெருப்பு சூளையில் எறியப்பட்ட மூன்று இளைஞர்களில் ஒருவரான அசரியா என்பவர் கடவுளை நோக்கி எழுப்பிய மன்றாட்டை விவரிக்கிறது. இதன் முக்கிய கூறுகள்:

இறைவனுக்கு அழைப்பு மற்றும் முகவரி:

1.அசாரியா நெருப்பில் எழுந்து நின்று இறைவனிடம் பேசுவதாக இப்பகுதி தொடங்குகிறது. இது ஓர் இறை மன்றாட்டாக அமைக்கிறது.

2.இரக்கம்  மற்றும் உடன்படிக்கைக்கான முறையீடு:

கடவுளை நோக்கி, ‘நீர் தேர்ந்து கொண்ட மக்களை  என்றென்றும் கைவிட்டு விடாதீர் என்றும், தொடக்கத்தில்  ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் இஸ்ரயேலருடன் செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்’ என்றும் அசரியா இறைவனிடம் மன்றாடுகிறார்.  

யூத மக்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். கடவுளுக்கு அவர்கள் செய்த கடந்தகால துரோகத்திற்காகவும்  பாவச் செயல்களுக்காகவும் இப்போது துன்புறுகிறார்கள் என்பதை அசாரியா தம் மன்றாட்டில் மக்கள் சார்பில் மன்னிப்புக்கும் பரிவுக்கும் மன்றாடுகிறார்.

மேலும், எருசலேம் கோவிலை இழந்ததையும், வழக்கமான சமயச் சடங்குகளை நிறைவேற்ற இயலாமல்  தவிக்கின்றனர் என்பதையும் கடவுளின் பாதத்தில் வைக்கிறார்.   அசாரியா இந்த மன்றாட்டை  மனமுடைந்த,  பணிவான மனதுடனும் செய்கிறார். நம்பிக்கை வாழ்வில் தங்கள் மூதாதையர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நினைவுகூரும்படி அவர் கடவுளிடம் கேட்கிறார். மேலும் அவர்களின் பாவங்களுக்குத் தகுந்தவாறு மக்களைத் தண்டிக்க வேண்டாம் என்றும் கெஞ்சுகிறார்.
 
நற்செய்தி:

இந்த பகுதி  மன்னிப்பைப் பற்றி பேதுருவுக்கும் இயேசுவுக்கும் இடையே நடந்த உரையாடலாகும். அதைத் தொடர்ந்து மன்னிப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் இயேசுவின் உவமை  இடம்பெறுகிறது.  

திருத்தூதர்  பேதுரு, ஒருவர் இன்னொருவரை எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று இயேசுவைக் கேட்கிறார். அதற்கு மறுமொழியாக,   மற்றவர்களை மன்னிப்பது நிபந்தனையும்  வரம்புகளும் இல்லாமல், எப்போதும் இருக்க வேண்டும் என்னும் பொருளில்  “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்’என்று இயேசு பேதுருவிடம் கூறுகிறார். இதனை விளக்குவதற்கு ஓர் எளிதான  உவமையை முன்வைக்கிறார்.

ஓர் அரசர் தம் பணியாளருக்கு கடன் கொடுக்கிறார். பின்னர், கடனைத் திரும்பத் தர இயலாத பணியாளனின்  நிலையறிந்து, அவர், அவன் மீது இரக்கம் கொண்டு,  அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்து, அவனை விடுவிக்கிறார்.  

ஆனால் மன்னிக்கப்பட்ட பணியாளனோ,  சக ஊழியருக்கு அவர் கொடுத்த  சிறிய கடனை மன்னிக்க மறுக்கிறான். அவன் மன்றாடியும் இரக்கம் காட்டவிலை. இதை அறிந்த  அரசர்   கோபமடைந்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று, அவர்  முன்பு ரத்து செய்யப்பட்ட கடனை முழுமையாக செலுத்துமாறு கோருகிறார். 

நிறைவாக, இயேசு தெளிவாக “உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்” என்று உறுதியாகக் கூறுகிறார். 


சிந்தனைக்கு:

மத்தேயு நற்செய்தி 5:48 ல் இயேசு “உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவாராய் இருப்பது போன்று, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்” என்பார்.  இரக்கமிகுந்த கடவுள் நம் குற்றங்களை மன்னிக்க தயாராக இருக்கின்றார். ஆனால் நாம் மற்றவர்களுடைய குற்றங்களை மன்னிக்கின்றோமா? என்று சிந்திக்க வேண்டும்.  அதனால் தான் நற்செய்தி வாசகத்தின் இறுதி பகுதியில் சகோதர, சகோதரிகளை மனமார மன்னிக்காவிடில் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார் என்கிறார் ஆண்டவர்.  

மன்னிப்பு என்பது பணம் கொடுத்து வாங்கப்படுவது அல்ல. அது பரிவுக்கு உட்பட்டது. கடவுள் விதிக்கும்  நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். நாம் மன்னிக்கப்பட,  நமக்கு எதிராகக்  குற்றம் செய்தவரை மனதார  நாம் மன்னிக்க வேண்டும்.    

புனித யாக்கோபு “இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்பு தான் கிடைக்கும். இரக்கமே தீர்ப்பை வெல்லும்” (2: 13)என்று அறிவுறுத்துகிறார். இதிலிருந்து மற்றவர்களை மன்னிப்பது, கடவுளின் மன்னிப்பைப் பெறுவதற்கான அடிப்படை என்பது புலனாகிறது.

மன்னிப்பு என்பது உணரப்பட வேண்டியதொன்று.   கடவுள் நம்மீது கொள்ளும் அளவு கடந்த அன்பை. கனிவை, இரக்கத்தை அவரது மன்னிப்பில்தான் அதிகமாக நாம் உணர்ந்து அனுபவிக்கிறோம். மன்னிப்பைப் பற்றி அறிவுறுத்தும் இயேசு,  “மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்.”(லூக் 15:10) என்கிறார். ஆகவே, நாம் பிறருக்கு நிபந்தனையற்ற மன்னிப்பை வழங்கும்போது, விண்ணகத்திலும் நாம் போற்றப்படுகிறோம். 
எனவே, உண்மையான ஒரு கிறிஸ்தவருக்கு, மன்னிப்பு பெறுவதும், மன்னிப்பு வழங்குவதும் மன மகிழ்வைத் தருகின்ற செயலாகும். குறிப்பாக சொந்தபந்தங்களுக்கு இடையே நிலவும் பகை உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். முதல் வாசகத்தில், அசாரியா தன்  நாட்டு மக்களுக்காக மன்றாடினார்.   அவ்வாறே நாமும் நமக்காகவும் அடுத்தவருக்காவும் மனம் திரும்புதலுக்கு மன்றாட வேண்டும்.  
‘உனை அழித்திட வந்த பகைவன் என்றாலும் அன்புக்குப் பாதைவிடு!’ என்று கவிஞர் ஆலங்குடி சோமு ஐயா எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன. அறிவினாலும் அன்பினாலும் பிறரை வெல்லும் வெற்றியே நமக்குப் பெருமை தரும் என்பதை நினைவில் கொள்வோம். அப்போது, கடவுளின் கடைக்கண் பார்வையால் 'பேறுடையவர்' என நாம் போற்றப்படுவோம்.  

இறைவேண்டல்:

என் ஆண்டவரே,  மன்னிப்பில் நீர் கொடை வள்ளலாக இருப்பதைப்போல   நானும் பிறரை மன்னிப்பதில் உமது சீடராக சிறந்து விளங்க அருள் தாரும். ஆமென்.

 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452