திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம்-விழா | ஆர்.கே.சாமி | VeritasTamil

22 பிப்ரவரி  2024,                                                                                                                  தவக்காலம் முதல் வாரம் - வியாழன்
முதல் வாசகம்: பேதுரு 5: 1-4  நற்செய்தி: மத்தேயு 16: 13-19  

முன்னுரை:

இந்நாள் நம் தாய் திருஅவை வரலாற்றில் மற்றுமொரு மகிழ்ச்சிக்குரிய நாள். இன்று பேதுருவின் தலைமைப் பீடத்தை நினைவுகூர்ந்து  மகிழ அழைக்கப்படுகிறோம், இவ்விழாவை நான்காம் நூற்றாண்டு முதல் திருஅவை கொண்டாடி வருகிறது  என்று அறிகிறோம்.  புனித பேதுரு முதலில் இயேசுவால் சீடராகத்  தேர்ந்துகொள்ளப்பட்டார். பின்னொரு நாள் இயேசு அவரைத் தோற்றுவிக்கப்படவுள்ள திருஅவையின் தலைவராக நியமித்தார்.  இயேசுவின் இந்த நியமனத்தை இன்று நினைவுகூர்கிறோம். திருஅவையின் முதல் திருத்தந்தையாக நியமனம் பெற்ற புனித பேதுருவைத் தொடர்ந்து இன்று திருஅவையின் 266-வது மண்ணகத் தலைவராகத் திருத்தந்தை  பிரான்சிஸ் உள்ளார். 
ஆகவே, 'உன் பெயர் பாறை. இந்தப் பாறையின்மேல் நான் திருஅவையைக்  கட்டுவேன்' என்னும் இயேசுவின் வார்த்தைளைப் பின்புலமாகக் கொண்டுள்ள இவ்விழாவை, ஆண்டுதோறும் நினவைகூர்ந்து கொண்டாடுவதில் நாம் பேறுபெற்றவர்களாகிறோம். 

முதல் வாசகம்

புனித பேதுருவின்  முதல் மடலிலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகத்தில்,  அவர் தொடக்கத் தருஅவையில் நியமனம் பெற்ற தனது சக தலைமை பணியாளர்களுக்கு எடுத்துரைத்த  தாழ்மையான அறிவுரையைக் கேட்கிறோம்.  அவர்கள் தலைவர்களாகப் பொறுப்புடன் தங்கள் கடமைகளை விருப்பம், உற்சாகம் மற்றும் பணிவுடன் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். 


இதற்குக் காரணம் திருஅவையின் தொடக்கக் கால வரலாற்றைப் புரட்டினால், மூப்பர்களில் தங்கள் நிலைப்பாட்டை முறையாக, தியாக உணர்வோடு தங்கள் மந்தையின் தேவையறிந்து நடந்துகொள்ளாத  சிலர்   இருந்திருக்கிறார்கள்.    ஒருசிலர் தங்கள் (ஆயர்) அதிகாரத்தை (மனித பலவீனத்தால்)  தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது தெரிய வருகிறது.  

இன்னும் சிலர் சர்வாதிகாரத்தை  இறைமக்கள் மத்தியில் வெளிப்படுத்தி, அவர்களை அடக்கி  ஆண்டிருக்கலாம். எனவே புனித பேதுரு அவர்களுக்கு அறிவுரையாகவும், ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்துவுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்றும்  அறிவுறுத்தலாக இம்மடலை எழுதுகின்றார். 

நற்செய்தி

நற்செய்தியில் ‘“மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று இயேசு தம் சீடர்களிடம் கேட்க, அவர்கள் மத்தியிலிருந்து சில பதில் வந்தாலும், 'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்னும் இயேசுவின் கேள்வியே இன்றைய வாசகத்திற்கு உயிரூட்டுகிறது. அடுத்து, பேதுருவின் பதிலான “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்”  என்பது மட்டுமே இயேசு யார் என்பதை வெளிப்படுத்தும் பொறுத்தமான பதிலாக அமைந்தது. இயேசு உடனே, ‘எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்’ என்ற உண்மையை எடுத்துரைப்பதோடு, அவர்தான் எதிர்ப்பார்க்கப்பட்ட ‘மெசியா' என்பதை தம் சீடர்களுக்கு உறதிப்படுத்துகின்றார்.  
அந்த நிமிடமே, பேதுருவின் பெயரை இயேசு மாற்றுகிறார். இப்போது, அவர் பெயர் ‘பாறை' என்று மாற்றம் பெறுகிறது. பேதுருவின் (பாறையின்) தலைமையில் அவர் தோற்றிவிக்கவிருக்கும் திருஅவையைக் கட்டி எழுப்பவுள்ளதாக இயேசு சீடர்கள் மத்தியில் அறிவக்கிறார்.   
மேலும் மற்ற சீடர்கள் பார்க்க, பேதுருவிடம் விண்ணகத் திறவுகோலையும் கொடுக்கிறார். இன் வழி ஒரு முக்கிய பணியை இயேசு நிறைவேற்றுகிறார். 

சிந்தனைக்கு.

எந்தவொரு இயக்கமும் நீடித்திருக்கவும், அதன் உறுப்பினர் ஒன்றித்துச் செயல்படவும் நல்ல தலைமைத்துவம் இன்றியமையாதது என்பது வெளிடைமலை. ‘உன்னையே நீ அறிவாய்' என்பது கிரேக்க தத்துவஞானி சாக்கரட்டீஸ் விட்டுச் சென்ற ஒரு மாபெரும் தந்துவம். இதன் அடிப்படையிலும் இன்றைய வாசகம் நமக்குப் பொறுத்தமாக உள்ளது.  இயேசு அவரது தலைமையின் கீழ், மண்ணகத்தில் ஒரு தலைமை பீடத்தை ஏற்படுத்தினார். அது என்றுமுள தலைமைத்தவம். அவருடைய திருவுடலாகிய திருஅவை மண்ணகத்தில் வழிநடத்தபட ஏற்படுத்தப்பட்ட தலைமைத்துவம். திருத்தந்தையர் வழிமரபில் இன்றும் நீடிக்கிறது. பேதுருவிடம் பலவீனம் இருந்தது. அவ்வாறே, மண்ணக திருஅவை தலைமைத்துவத்திலும் பலவீனங்கள் இருக்கலாம். இயேசு அவற்றை நிறைவு செய்துகொண்டே இருக்கிறார். திருஅவையில் பாவம் இருந்தாலும் அது பிறப்பால் தூய்மையானது. ஆகவே, திருஅவையின் தலைமைத்துவத்திற்கென்று நிரந்த பண்புகள் உண்டு. அவற்றில் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த தலைமைத்துவத்தின் முதல் பண்பு அதன் ஒருமைப்பாடு. இதை ‘கத்தோலிக்கம்' என்று அழைக்கிறாம். எனவே, நாம் கத்தோலிக்கர் என்பதில் பெருமைகொள்ள வேண்டும். நாம் இயேசுவின் திருவுடலைக் கட்டி எழுப்பவர் மட்டுமல்ல, அதைக் கட்டிக்காப்பவருமாவோம். எனவே, இன்றைளவு  அகில உலகத் திருஅவையின் தலைவராக  தலைநிமிர்ந்து உலகிற்கு ஒளியாகத் திகழும்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகவும், நம் மறைமாவட்டங்ளின்  தலைவர்களாகத் திகழும்  ஆயர்களுக்காகவும், அவர்களின் பிரதிநிதியாக மக்களை வழிநடத்தும் அருள்பணியாளர்களுக்காவும் சிறப்பாக மன்றாட வேண்டும். இது வாழையடி வாழையாக இருந்துவரும் நமது மரபு. ஏனெனில், இத்தலைமைத்தவம் “மண்ணுலகில்   தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில்  அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்று இயேசுவே கூறியுள்ளதோடு, நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 
முதல் வாசகத்தில் பேதுரு தன் வழிமரபினரை நல்வழிப்படுத்த ஆலோசனகள் பல கூறியதைக் கேட்டோம். இதன் அடிப்படையில் நமது மறைமாவட்டங்கள் மற்றும் பங்குகளிலும் தலைமைப் பொறுப்பாளர்கள்   மத்தியில் சில குறைபாடுகள், பலவீனங்கள் இருக்கக்கூடும். இக்குறைபாடுகளை உலகம் சார்ந்த மக்களாக நாம் பார்க்கவும் தீர்ப்பிடவும் கூடாது.   அவர்களைத் திருப்பணிக்கு அழைத்த ஆண்டவர் இயேசுவுக்கு அவர்களை நம்மைவிட அதிகம் தெரியும். அவர்களைக் குறைக்கூற நாம் யார்? "கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு" என்பதுபோல குற்றம் கண்டு பிரிந்துபோவோர் போகட்டும். ‘காணமற்போன மகன்’ போல், உறவில் இருந்து பிரிந்து போவது பாவம் என்று அவர்கள் விரைவில் உணரக்கூடும். 
எனவே, ஒருவர் ஒருவருக்காக இறைவேண்டல் செய்வதே நமது முதல் கடமை என்பதை உணர்ந்து, பேதுருவின் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட இந்த கத்தோலிக்கத் திருஅவையில் தொடர்ந்து நம் பங்கை ஆற்றுவோம். கூட்டு ஒருங்கியக்கப் பயணம் (synodality) நமது கொள்கை பயணம் என்பதற்கு முன்னுரிமை அளிப்போம். 

இறைவேண்டல்.

உமது திருவுடலாகிய திருஅவைக்கு ஓரு தலைமைத்துவத்தை ஏற்படுத்தி எங்களை வழிநடத்தும் ஆண்டவரே, உமது அழைத்தலுக்கும் தலைமைத்துவத்திற்கும் நான் என்றும் கீழ்ப்படிந்தச் சீடராக வாழ அருள்புரிவீராக. ஆமென்.
 
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452