தவறே என்றாலும் நேர்பட கூறுவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
17 பிப்ரவரி 2024,
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி
எசாயா 58: 9b-14
லூக்கா 5: 27-32
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகம் நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாகத் தரப்பட்டுள்ளது. மனிதநேயத்தை மனிதரிடையே கடவுள் வலியுறுத்துகிறார். முதலாவதாக மக்களை நியாயமாக நடத்துங்கள், அவர்களை ஒடுக்கவோ அல்லது அவர்கள் மீது பொய்யாகக் குற்றம் சாட்டவோ வேண்டாம் என்றும் அடுத்திருப்பவரை பற்றி எதிர்மறையாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
மாறாக, பசித்திருப்போருடன் உணவை பகிர்ந்து கொள்ளவும், துன்புறுபவர்களைக் கவனித்துக் கொள்ளுமாறும் பணிக்கிறார். இறைமக்கள் மேற்கண்டவாறு கடவுளுக்குப் பணிந்து செய்தால், அவர்களது வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும் என்ற உறுதிமொழியைத் தருகின்றார்.
தொடர்ந்து, கடவுள் அருளிய ஓய்வுநாளை மதிக்க வேண்டும் என்றும், அதனால் அவர்களில் மகிழ்ச்சி நீடிக்கும் என்றும் அறிவுறுத்துகிறார்.
நற்செய்தி.
இயேசு அன்று, வரி வசூலிக்கும் சாவடியில் உட்கார்ந்திருந்த லேவி (மத்தேயு) என்பவரைச் சந்தித்தார். இயேசு அவரைத் தன்னைப் பின்தொடர அழைத்தார். அவரது அழைப்பை ஏற்ற லேவி உடனடியாக எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார். அந்த லேவி, அத்தோடு நின்றுவிடவில்லை.
அவர் தனது வீட்டில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அவ்விருந்தில் பல வரி வசூலிப்பவர்களும் பாவிகளாகக் கருதப்பட்ட மக்களும் கலந்துகொண்டனர். அது அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஆனால், அங்கு வந்த பரிசேயர்கள் என்று அழைக்கப்படும் சமயத் தலைவர்களுக்கு அந்நிகழ்வு எரிச்சலை மூட்டியது. இயேசு ஏன் வரி வசூலிப்பவர்களுடனும் பாவிகளுடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார் என்று கேள்வி எழுப்பினர்.
பரிசேயர்களின் எண்ணத்தை இயேசு அறிந்து, அவர்களுக்குப் பின்வருமாறு அறிவூட்டினார். “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை’ என்றும், .அவர் ஏற்கனவே தங்களை நீதிமான்கள் என்று நினைப்பவர்களுக்கு அல்ல, ஆன்மீக ரீதியில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவ வந்ததாக எடுத்துரைக்கிறார். பாவத்தில் உழல்வோரை மனந்திரும்புதலுக்குக் கொண்டுவருவதே தனது பணி என்று விளக்குகிறார்.
சிந்தனைக்கு.
ஆள்காட்டி விரலை நீட்டி, பிறரை குறைகூறும்போது மற்ற மூன்று விரல்கள் தன்னைப் பார்த்திருக்கும் என்பது ஒரு தத்துவம். இதையேதான், இயேசுவும், ‘உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?’ (மத் 7:3) என்று மிகவும் எளிமையாக எடுத்துரைத்தார்.
முதல் வாசகத்தில் அடுத்திருப்பவரை பற்றி எதிர்மறையாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற கடவுளின் படிப்பினையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், வாழ்நாள் முழுவதம் புறம் பேசுவதிலேயே காலத்தைக் கழிப்போர் நிம்மதியாக வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. தன்வினை தன்னைச் சுடும் என்பதுபோல், நமது தீய வார்த்தைகளே அல்லது செயல்களே நமது நிம்மதியை அழித்துவிடும். ஏனெனில், நமது ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு என்பது உலகப் பொது வழக்கு.
இயேசு அனைவரிடமும் அன்புகூர்ந்தார். அவர் யாரையும் பாவிகள் என்று புறம்பேசி ஒதுங்கிப் போகவில்லை. அன்புகூர்தல் என்பது செயலில் வெளிப்பட வேண்டும். இன்றைய நற்செய்தியில், பாவிகள் என்று முத்திரைக் குத்தப்பட்டோர் மத்தியில் இயேசு அமர்ந்து விருந்துண்டார். அவர்களோடு அளவுளாவினார். லேவி என்ற பாவியை தனது சகோதரனாக ஏற்று, தனது பணிக்கு அழைத்துக் கொண்டார். இங்கே, ஊர் உலகம் என்ன பேசும் என்பது பற்றிய கவலை இயேசுவுக்கு இல்லை. அப்படியிருக்க, அவரது உன்னத சீடர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நாம் எப்படி வாழ்கிறோம்?
"குறைகள் இருப்பின் எங்களிடம் சொல்லுங்கள்; நிறைகள் இருப்பின் மற்றவர்களிடம் சொல்லுங்கள்." என்பது ஒரு பொன்மொழி. ஒருவரிடத்தில் குறைகள் காணப்பட்டால், அவர் தனித்திருக்கையில் அவருக்குப் பக்குவமாக எடுத்துரைப்பதே சிறப்பு. மாறாக, அவர் அந்த இடத்தில் ‘இல்லாத போது’, ‘எதிர்மறையாக’. ‘உண்மைக்கு மாறாக’, ‘இழிவாகத்திரித்து’ வேண்டுமெனவே கூறுதல் பெரும் குற்றமாகும். இதனால், உறவு பாதிக்கப்படும். உறவிலிருந்து பிரிவதே பாவம்.
அடுத்து, பசித்திருப்போருடன் உணவை பகிர்ந்து கொள்வதும், துன்புறுபவர்களைக் கவனித்துக் கொள்வதும் நமது தலையாயக் கடமை என்கிறார் கடவுள். இத்தவக்காலத்தில் கடவுளின் இந்த நினைவுறுத்தலைப் பற்றி சிந்திப்போம். எதையும் நாம் அறியாமல் செய்யும்போது அது பாவமாகாது. தீயது என்று அறிந்தப்பின் அதைத் துணிந்து செய்வது தான் பாவம். ‘உனக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்’ என்பது நமக்கான அறிவுறுத்தல். இது நாம் அறிந்த ஒன்று. எனவே, இக்கூற்றைப் புறக்கணிக்கும் போது, நாம் கண்டிப்பாகப் பாவம் செய்கிறோம்.
நோன்பு, தவம் மற்றும் இறைவேண்டலுடன் நாம் தவக்காலப் பயணத்தைத் தொடங்கியுள்ள இவ்வேளையில், "நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்" (மத் 23:8) என்ற விருதுவாக்கை நினைவகூர்ந்து, அதற்கேற்ப வாழ திருத்தந்தை அழைக்கிறார். நமது குடும்பத்திலும், அடிப்படை திருஅவை சமூகத்தில் (அ.தி.ச) அல்லது அன்பியத்தில் திருத்தந்தையின் இந்த அறைக்கூவலுக்கு ஏற்ப வாழ வேண்டும். நமது சகோதரத்துவ உறவை அன்பியங்களில் அல்லது அ.தி.ச.-வில் வெளிப்படுத்தாமல் ஒதுங்கிப்போனால், நாம் தூய ஆவியாருக்கு எதிராகப் பாவம் செய்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.
இறைவேண்டல்.
“நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்'' என்றுரைத்த ஆண்டவரே, லேவியைப்போல் நானும் என்னை ஆட்கொண்டுள்ள அனைத்து பாவச் செயல்களையும் விட்டொழித்து, எனது மீதமுள்ள வாழ்நாளில் உம்மைப் பின்தொடர அருள்புரிய உம்மை மன்றாடுகிறேன். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
- Reply
Permalink