ஆண்டவர் வருவார், எதிர்கொள்ள தயாரா?| ஆர்.கே. சாமி | VeritasTamil

திருவருகைக்காலம் 2-ம் வாரம் – சனி                                                                                 
சீராக்: 48: 1-4, 9-11
மத்தேயு   17: 10-13
 
ஆண்டவர் வருவார், எதிர்கொள்ள தயாரா?

முதல் வாசகம்.

நாம் தொடர்ந்து ஆண்டவராகிய   இயேசு கிறிஸ்துவின் வருகையில்  கவனம் செலுத்துகிறோம்.   எலியா இறைவாக்கினர்  அற்புதமாக விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதால், ஆண்டவரின் நாளுக்காக மக்களைத் தயார்படுத்துவதற்காக அவர் உலகம் அழியும் முன் திரும்பி வருவார் என்ற பொதுவான நம்பிக்கையை சீராக் புத்தகத்தின் ஆசிரியர் எதிரொலிக்கிறார்.
ஓர் இறைவாக்கினராக, எலியா மக்கள் மனந்திரும்ப வேண்டும் என்ற செய்தியைப் அக்காலத்தில் போத்தித்தார்,  அவர்களின் சிலை வழிபாடு மற்றும் கடவுளுடனான அவர்களின் உறவை முறித்துக் கொண்டது பெரும் பாவங்களாக உள்ளன. இந்நிலையில், எலியா மக்களை கடவுளுடன் சமரசம் செய்ய முயன்றார் என்று சீராக் நூலின் ஆசிரியர் நினைவூட்டுகிறார். 

நற்செய்தி.

இயேசு பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோரை உருமாற்ற மலையிலிருந்து கீழே அழைத்துச் செல்லும் போது இன்று நற்செய்தி நிகழ்வு நடைபெறுகிறது.  மூன்று சீடர்கள் இயேசு மாட்சி உடையணிந்து மோசே மற்றும் எலியாவிடம் பேசுவதைக் கண்டனர்.  எலியா திரும்பி வருவார் என்று ஏன் மறைநூலில் கூறப்பட்டது என்று அவர்கள் இயேசுவிடம் கேட்கிறார்கள்.   அதற்கு இயேசு மற்மொழியாக,   “எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, அவர்களோ அவரைத் துன்புறுத்தினார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்” என்றார். 

சிந்தனைக்கு.

இன்றைய வாசகங்களிலிருந்து நாம் அறிவதானது,   மனந்திரும்புதல் என்பது ஒரு தொடர் நிகழ்வு என்பதாகும்.  பாவம் இன்னும் நம் உலகில் ஊடுருவிக் கொண்டு  இருப்பதால், மனந்திரும்புதல் தொடர்ந்து தேவைப்படுகிறது.  எலியா/திருமுழக்கு யோவான் ஆகியோரின் பணி முடிந்துவிடவில்லை. ஆண்டவரின் இரண்டாம் வருகை   இன்னும் வராததால், மக்கள் தீர்ப்பிலிருந்து தப்பிக்க கடவுளிடம் திரும்புவதற்கு மக்கள் இன்னும் நினைவூட்டப்பட வேண்டியுள்ளது. 
நாம் நம்முடைய சொந்த வாழ்க்கையில் பாவத்தை எண்ணி, பாவத்திலிருந்து விலகி, ஆண்டராகிய இயேசுவிடம்  திரும்ப வேண்டும்.  அனைவரும் தங்கள் பாவ வழிகளில் இருந்து திரும்பி, கடவுளிடம் திரும்ப வேண்டும் என்ற கடவுளின் விருப்பத்தையும் நாம் உணர வேண்டும். இல்லையேல், திருவருக்காலம் எதோ ஆண்டுதோறும்  வந்துபோகும் ஒரு காலமகாவே கருதப்படும்.
பழைய ஏற்பாட்டின் கடைசி இறைவாக்கினர் மலாக்கி ஆவார். இவர், கிறிஸ்து வருவதற்கு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பே அவர் தனது இறைவாக்குப் பணியை முடித்தார். மேசியாவிற்கு முன் ஒரு "தூதர்" வருவார் என்று மலாக்கி இறைவாக்குரைத்தார்.   அதனால் மெசியாவுக்கு முன் வழியை தயார் செய்வதற்காக. "எலியா இறைவாக்கினர் " ஆண்டவரின் நாளுக்கு முன் வருவார் என்று மலாக்கி மேலும் கூறுகிறார் (மாக்கி 3:1-24). ஆகவே, ஆண்டவரின் வருகைக்கு நமது நயாரிப்பு அவசியமாகிறது 
இயேசு மீண்டும்  வரவிருப்பது, அது இன்றாக இருந்தாலும் சரி, நாளையாக இருந்தாலும் சரி, இன்னும் பல வருடங்களாக இருந்தாலும் சரி, அவரை எதிர்கொள்ள ஆயத்தம் செய்வது இன்றியமையாத ஒன்று.  ஆம்,  கடவுள் நம்முடன் வைத்திருக்க விரும்பும் உறவைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.    
இயேசு மீண்டும் வரும்போது கடவுள் அந்த நமது மீட்பின் நாளை நிறைவு செய்து முடிப்பார்.    நாம் அந்த மீட்பின் கொடயை  ஏற்று, அவருடைய வருகையின் போது தூய உள்ளத்தோடு  நமது நம்பிக்கையை அறிவிக்கும் வாழ்க்கையை வாழ வேண்டும்.

இறைவேண்டல். 

மனமாற்றம் முதலில் என்னில் தொடங்க வேண்டும் என்றுணர்த்திய ஆணடவரே, உமது அழைப்புக்கேற்ற வாழ்வு வாழ என்னை ஆட்கொள்வீராக. ஆமென். 


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452